Header Ads



1991 இன் பிறகு முதல்முறையாக கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சி, ஆசியா பங்குச் சந்தைகள் சரிந்தது

கச்சா எண்ணெய் விலையில் ஏற்பட்டுள்ள கடும் வீழ்ச்சியின் காரணமாக இந்தியா உள்பட ஆசியா முழுவதுமுள்ள பங்குச் சந்தைகள் இன்று (திங்கட்கிழமை) சந்தை தொடங்கியது முதல் கடும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன.

குறிப்பாக, மும்பை பங்குச் சந்தை குறியீட்டு எண் (சென்செக்ஸ்) இன்று ஒரே நாளில் 2,300க்கும் மேற்பட்ட புள்ளிகள் வீழ்ச்சியடைந்து 35,270 என்ற நிலையில் உள்ளது. இதன் மூலம் கடந்த 15 மாதகாலத்தில் இல்லாத அளவுக்கு மும்பை பங்குச் சந்தையின் குறியீட்டு எண் வீழ்ச்சியடைந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

கொரோனா வைரஸ் அச்சுறுத்தலின் காரணமாக உலகம் முழுவதும் ஏற்கனவே பங்குச் சந்தைகள் மந்தமாக செயல்பட்டு வந்த சூழ்நிலையில், எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகளின் குழுமமான ஒபெக் மற்றும் ரஷ்யாவுக்கு இடையே நிலவி வரும் கருத்தொற்றுமையின்மையே தற்போது ஏற்பட்டுள்ள இந்த மேலதிக வீழ்ச்சிக்கு காரணம் என்று கூறப்படுகிறது.

இந்தியாவை பொறுத்தவரை, மேற்கண்ட காரணங்களோடு ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் கொண்டுவரப்பட்டுள்ள யெஸ் பேங்கின் பங்குகளின் வீழ்ச்சியால், வங்கித்துறையில் முதலீடு செய்தவர்களிடையே பதற்றம் காணப்படுவதும் மற்றொரு காரணமாக உள்ளது.

சந்தை தொடங்கிய சில மணிநேரங்களில், கச்சா எண்ணெயின் விலை 31 சதவீதம் குறைந்ததை அடுத்து இந்தியா, ஜப்பான், சீனா உள்ளிட்ட நாடுகளின் சந்தைகள் வீழ்ச்சியை கண்டு வருகின்றன. அதாவது, கடந்த 1991ஆம் ஆண்டு நடைபெற்ற வளைகுடா போருக்கு பிறகு, முதல்முறையாக கச்சா எண்ணெய் விலை மிகவும் வீழ்ச்சியடைந்துள்ளதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜப்பானின் பங்குச் சந்தை (நிக்கி) மதிப்பு 5 சதவீதத்துக்கும் அதிகமாக சரிந்தது, ஆஸ்திரேலியாவின் தேசிய பங்குச்சந்தையின் மதிப்பு 7.3 சதவீதம் சரிந்தது. இது கடந்த 2008ஆம் ஆண்டிலிருந்து அதன் மிகப்பெரிய தினசரி வீழ்ச்சியாகும்.

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் மதிப்பு ஒரே நாளில் 30 சதவீதம் குறைந்ததை அடுத்து, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்களின் பங்குகளின் விலை கடும் வீழ்ச்சியை சந்தித்தன.

No comments

Powered by Blogger.