Header Ads



என்னை சிறையிலடைக்க, மீண்டும் முயற்சி: முறையிட்டார் ராஜித

நீதிமன்றில் முன்பிணை கோரிய நிலையில் அதனையும் பொருட்படுத்தாது பிடியாணையைப் பெற்று என்னைக் கைது செய்து விளக்கமறியலில் வைத்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும். அத்துடன் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள என்னை மீண்டும் சிறையில் அடைப்பதற்கு எடுக்கப்படும் முயற்சியும் அரசியல் சூழ்ச்சியாகும் என்று மனித உரிமை ஆணைக்குழுவில் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன முறையிட்டுள்ளார்.

ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசாவுடன் நேற்று இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவுக்கு சென்ற ராஜித சேனாரத்ன எம்.பி. இந்த முறைப்பாட்டை தெரிவித்துள்ளார்.

வெ ள்ளை வான் கடத்தல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன தற்போது பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார். அவர் தமக்கு அச்சுறுத்தல் விடுப்பதாக வெ ள்ளை வான் கடத்தல் விவகாரம் தொடர்பில் செய்தியாளர் மாநாட்டை நடத்திய இருவரும் நேற்று முன்தினம் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் முறைப்பாடு செய்திருந்தனர். இதனையடுத்தே ராஜித சேனாரத்ன நேற்றைய தினம் மனித உரிமை ஆணைக்குழுவில் தனது முறைப்பாட்டை முன்வைத்துள்ளார்.

அந்த முறைப்பாட்டில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதி தேர்தலின் போது வெள்ளை வான் கடத்தல் சம்பந்தமாக நடத்தப்பட்ட ஊடக சந்திப்பு தொடர்பில் தன்னை கைது செய்ய புலனாய்வுப் பிரிவினர் தயாராகிய நிலையில் தான் தனது சட்டத்தரணி மூலம் முன்பிணை மனுத் தாக்கல் செய்து நீதிமன்றம் அந்த மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு திகதி குறிப்பிட்டிருக்கையில்

பிணை வழங்கக்கூடிய குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டிருந்த நிலையில் நீதிமன்றில் அழைப்பாணையைப் பெறாமல்  சட்டரீதியற்ற முறையில்  பிடியாணையைப் பெற்று தன்னை கைதுசெய்தமை அடிப்படை மனித உரிமை மீறலாகும்.

30.12.2019 ஆம் திகதி கொழும்பு நீதிவான் நீதிமன்றினால் பிணை வழங்கப்பட்டுள்ள நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் இந்த மனுவை மீளாய்வு செய்யக்கோரி மேல் நீதிமன்றில் மீளாய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணைக்கு திகதி குறிப்பிப்பட்டுள்ள நிலையில், திட்டமிட்டு தனக்கு வழங்கப்பட்டுள்ள பிணையை இரத்து செய்வதற்கான நோக்கத்தில் முதலாம் இரண்டாம் சந்தேகநபர்களின ஊடாக பொய்யான குற்றச்சாட்டொன்றை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் பதிவு செய்து என்னை சிறையில் அடைப்பதற்கு முயற்சி எடுக்கப்படுகிறது. இதுவும் என்னை சிறையில் அடைப்பதற்கான சூழ்ச்சியாகும்.

No comments

Powered by Blogger.