Header Ads



ஈஸ்டர் தாக்குதலினால் அரசியல் இலாபம் பெற்றே, ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்

ராஜபக்ச குடும்பத்தினர், உயிர்த்த ஞாயிறு தினத்தாக்குதல்களை மையப்படுத்தி மதவாதத்தைத் தூண்டியே மீண்டும் ஆட்சிப்பீடம் ஏறினர் என ஐக்கிய தேசியக் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

எதிர்க்கட்சித் தலைவர் காரியாலத்தில் இன்று -16- நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துல மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தலைமையிலான அரசு ஆட்சிக்கு வந்து இரண்டு மாதங்கள் நிறைவடைந்துள்ளன.

மத்திய வங்கி பிணைமுறி மோசடியுடன் தொடர்புபட்டவர்களை தாம் ஆட்சிக்கு வந்த இரு நாட்களுள் கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்துவதாக தற்போதைய ஆளும் தரப்பினர் தேர்தல் பிரசார நடவடிக்கைகளின் போது கூறிக்கொண்டனர்.

ஆயினும், அதற்கான எந்த நடவடிக்கைகளும் இதுவரையில் முன்னெடுக்கப்படவில்லை. பாரிய அளவில் நிதி செலவிடப்பட்டு கோப் குழுவின் ஊடாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டன.

கோப் குழு அறிக்கையும் தயாரிக்கப்பட்டது. இந்த அரசு அதனை மூடிமறைக்கும் வகையிலான செயற்பாடுகளையே மேற்கொண்டு வருகின்றது.

அதேபோல் , உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத் தாக்குதல்களை மையமாக வைத்து அரசியல் இலாபம் பெற்றே ராஜபக்ச குடும்பத்தினர் மீண்டும் ஆட்சிக்கு வந்தனர்.

தேர்தல் பிரசார நடவடிக்கைகளின்போது உயிர்த்த ஞாயிறு தினக் குண்டுத்தாக்குதல்களை மையமாகக் கொண்டு எமது அரசின் மீது குற்றஞ்சுமத்தினர்.

தாம் ஆட்சிக்கு வந்தால் தாக்குதல்களுடன் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்று அவர்கள் கூறினர்.

இப்போது அவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுக்க முடியுமே? எதற்காக இதுவரையில் எந்த நடவடிக்கைகளையும் அவர்கள் முன்னெடுக்கவில்லை? என்றும் கேள்விகளை எழுப்பியுள்ளார்.

No comments

Powered by Blogger.