Header Ads



தற்போதைய அரசாங்கம் தாமரையைக் காண்பித்து பௌத்தர்களையும், பிக்குகளையும் ஏமாற்றிவிட்டது

(நா.தனுஜா)

புதிய அரசாங்கம் தேர்தலின் போது தாமரையைக் காண்பித்து பௌத்த தேரர்களையும், சிங்கள பௌத்த மக்களையும் ஏமாற்றிவிட்டது. அவர்கள் பல்வேறு கனவுகளுடனும், எதிர்பார்ப்புக்களுடனும் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள். ஆனால் அவையனைத்தும் வெறும் கனவாகவே போய்விட்டது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹிணி கவிரத்ன தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் இன்று -16- வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

நாட்டு மக்களுக்குப் பல்வேறு வாக்குறுதிகளையளித்து ஆட்சிபீடமேறிய இந்த அரசாங்கம், அவற்றில் எதனையும் நிறைவேற்றாமல் மக்களை ஏமாற்றிக்கொண்டிருக்கிறது. எமது நல்லாட்சி அரசாங்கம் மக்களின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்காகப் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்திருந்தது.

எனினும் மக்கள் அவற்றைப் புறந்தள்ளியதோடு மாத்திரமல்லாமல், நல்லாட்சி அரசாங்கத்தை விடவும் ராஜபக்ஷ அரசாங்கம் தமது வாழ்க்கைத்தரத்தை உயர்த்தும் என்ற எதிர்பார்ப்பிலேயே தற்போதைய அரசைத் தெரிவுசெய்தார்கள். ஆனால் இறுதியில் சகோதரர்களுக்கு அதிகார நாற்காலியை வழங்கியதோடு மாத்திரமன்றி, அவர்களுக்கு நெருக்கமானவர்களுக்கு அரசசேவையில் உயர்பதவிகளை வழங்கும் நிலையும் ஏற்பட்டிருக்கிறது.

எனவே தற்போதைய அரசாங்கம் தேர்தலின் போது தாமரையைக் காண்பித்து பௌத்த தேரர்களையும், சிங்கள பௌத்த மக்களையும் ஏமாற்றிவிட்டது. அவர்கள் பல்வேறு கனவுகளுடனும், எதிர்பார்ப்புக்களுடனும் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்தார்கள். ஆனால் அவையனைத்தும் வெறும் கனவாகவே போய்விட்டது என்பதை மாத்திரமே எம்மால் கூறமுடியும் என்றார்.

No comments

Powered by Blogger.