Header Ads



மஹிந்த தேசப்பிரிய, கோத்தபாய குறித்து சொல்வது என்ன..?

ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமை நீக்கப்பட்டமை தொடர்பிலான ஆவணங்கள், தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைகப்பட்டுள்ளதாக அவரது சட்ட ஆலோசகர் அலி சப்ரி அறிவித்திருந்தார்.

எனினும் அவ்வாறான எந்தவொரு ஆவணமும் பெற்றுக் கொள்ளவில்லை என தேர்தல் ஆணைக்குழு தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார்.

பிபிசி செய்தி சேவையுடன் நேற்று இடம்பெற்ற கலந்துயரையாடலின் போது தேர்தல்கள் ஆணையாளர் இந்தத் தகவலை வெளியிட்டார்.

கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை தொடர்பான பிரச்சினை மற்றும் தேர்தல் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்பட்ட ஆவணங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு தலைவரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு பதிலளித்தவர்,

இந்தக் கேள்வி என்னிடம் கேட்க வேண்யது அல்ல. எனினும் பதிலளிக்காமல் செல்ல முடியாதல்லவா. தேர்தல் ஆணைக்குழுவினால், வேட்புமனு நிராகரிப்பிற்கான காரணம் தொடர்பில் மாத்திரமே அவதானம் செலுத்த முடியும்.

அதனால் எந்த ஒரு வேட்பாளரும், சிறைத்தண்டனை அனுபவித்துள்ளாரா? தகுதிகளுக்கு உட்பட்டுள்ளாரா? அரசாங்கத்துடன் ஒப்பந்தங்களுடன் ஈடுபட்டுள்ளாரா? குடியுரிமை தொடர்பான பிரச்சினைகள் உள்ளதா? என்ற விடயங்கள் தொடர்பில் தேர்தல் ஆணைக்குழு எந்த கடிதத்தையும் கேட்காது. இது தொடர்பில் அவதானமும் செலுத்தப்படாது.

எனினும், வேட்புமனுவில், தான் எந்த ஒரு தகுதியற்ற விடயங்களுக்கும் உட்படவில்லை, இதில் நான் போட்டியிட விரும்புகிறேன் என வேட்பாளர் கையொப்பமிட வேண்டும். சமாதான நீதவான் அந்த கையொப்பத்தை உறுதி செய்ய வேண்டும்.

அதனை தவிர்த்து ஒருவர் 35 வயதிற்கு அதிகமாக இருக்க வேண்டும். வயது குறைந்தவாராக இருந்தால் அவரது வேட்புமனு நிராகரிக்கப்படும். 35 வயதிற்கு குறைவாக இருந்து 35க்கு வயதிற்கு அதிகம் என பொய் தகவல் கூறினால் அதனையும் தேர்தல் ஆணைக்குழுவினால் விசாரிக்க முடியாது.

அதற்கமைய குடியுரிமை தொடர்பில் உத்தியோகபூர்வ தகவல்கள் எதுவும் நாங்கள் கேட்பதும் இல்லை பெற்றுக்கொள்வதும் இல்லை. குறைந்த பட்சம் அடையாள அட்டையின் மாதிரி தாள் ஒன்றையேனும் நாங்கள் கேட்பதில்லை.

நாங்கள் யாரிடமும் எந்த ஆவணத்தையும் பெறவில்லை. எங்களுக்கு அவசியம் இல்லை. நான் ஒரு கடிதத்தையேனும் பார்க்கவும் இல்லை. எங்கள் அதிகாரிகள் அவசியமான விடயங்களை மாத்திரமே பார்த்தார்கள்” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

அதற்கமைய கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமை தொடர்பில் ஜனாதிபதி சட்டத்தரணி வெளியிட்ட கருத்து முற்றிலும் போலியானதென உறுதியாகியுள்ளது என கொழும்பு ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.

No comments

Powered by Blogger.