November 03, 2019

வரலாற்றுப் பாடம் புகட்டும், சாய்ந்தமருது பள்ளியின் முடிவு

- எம்.எம்எம்.நூறுல்ஹக் -

ஜனாதிபதித் தேர்தல் என்பது நமது நாட்டுக்கு பொறுத்தமான ஒரு அதிபரைத் தேர்ந்து எடுப்பதற்கு நடைபெறுவதாகும். இதில் ஒரு பிரதேசத்தை மையப்படுத்தி நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியை தெரிவு செய்வதை முடிச்சுப் போடுவது ஒர் அறிவார்ந்த செயற்பாடல்ல எனச் சிலர் கருத்துரைப்பதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது. இது வெறும் உளறல் என உதறிவிட்டு செல்ல முடியாதளவில் ஒரு கவனக் குவிப்பை செலுத்த வேண்டிய அவசியத்தை ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவர் ஹக்கீம் எம்மீது சுமத்தி விட்டார்.

அது மட்டுமன்றி ஐ.தே.கட்சியின் கல்முனைத் தொகுதியின் அமைப்பாளர் சட்டத்தரணி அப்துல் றஸாக்கும் இக்கருத்துடன் இணைந்து இருக்கிறார். இவ்விருவர்களினது கருத்துக்களை  அவர்களின் மொழிநடையில் ஊடகங்கள் வெளியிட்ட செய்திகளை முதலில் பார்ப்போம்.

“நகரசபை விடயத்துக்காக சாய்ந்தமருது பள்ளிவாசல் மொட்டு அணிக்கு ஆதரவளிப்பது நாட்டிலுள்ள அனைத்து முஸ்லிம்களையும் பாதிக்கும் செயலாகும். முழு சமூகத்தையும் பாதிக்கும் அரசியல் தீர்மானங்களுக்கு சாய்ந்தமருது மக்கள் ஒரு போதும் துணைபோக மாட்டார்கள்” என்று ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ் தலைவர் றஊப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

“சாய்ந்தமருது நகரசபை தொடர்பில் ஹக்கீம், ஹரீஸ் மீது கொண்டுள்ள ஆத்திரத்தில் ஜனாதிபதி வேட்பாளர் கோதபாய ராஜபக்ஷவை ஆதரிக்க சாய்ந்தமருது மக்கள் எடுத்த முடிவு பிழையானது” என்றும் நகர சபை கோரிக்கை என்பது சாய்ந்தமருது மக்களின் நியாயமான கோரிக்கையாகும்… எனினும் இதுவரை நிறைவேறாத நிலையில் இலங்கையிலுள்ள முஸ்லிம் மக்கள் அனைவரும் ஒரணியில் சஜித் பிரேமதாசவின் கரங்களைப் பலப்படுத்தி வெற்றியடையச் செய்ய திரண்டிருக்கும் இந்த சந்தர்ப்பித்தில் சாய்ந்தமருது மக்கள் எதிராக வாக்களிக்க முயற்சிப்பது மிகவும் தவறான முடிவாகும் இதுவொரு வரலாற்றுத் தவறாகவும் எழுதப்படலாம்” என்றும், “சாய்ந்தமருதிற்கான தனியான நகரசபையை பெற்றுக் கொடுப்பதில் நானும் ஐக்கிய தேசியக் கட்சியும் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றோம் அதில் வெற்றி பெறலாம் என்ற நம்பிக்கை எனக்குண்டு” எனவும் அமைப்பாளர் ரஸாக் தெரிவித்துள்ளார்.

முதலில் அமைச்சர் ஹக்கீமின் கூற்றுக்களை பார்ப்போம். அதாவது சாய்ந்தமருதின் முடிவு முழு இலங்கை முஸ்லிம்களையும் பாதிக்கும் என்றால் இதன் மறுதலை அவர்களின் முடிவு வெற்றியை தீர்மானித்தால் முழு இலங்கை முஸ்லிம்களும் வெற்றியடைந்து பாதிப்பிற்குப் பதிலாக நலன்கள் விளையும் என்றும் அர்த்தப்படும் அல்லவா?

கடந்த 2010இல் கூட அமைச்சர் ஹக்கீம் சொல்வதற்கு உடன்பட்டு வாக்களித்த நமது முஸ்லிம் சமூகமும் குறிப்பாக சாய்ந்தமருது மக்கள் உட்பட சரத் பொன்சேகாவை ஆதரித்து தோல்வி அடைந்தது தவிர வேறென்ன நன்மை கிடைத்தது என பட்டியலிட்டு காட்ட அமைச்சர் ஹக்கீமால் முடியுமா?

கடந்த 2015இல் கூட மக்கள் முடிவெடுத்ததினால்தான் நாங்கள் சென்றோம் என்று இன்று சுட்டிக்காட்டி தமது கையாலாகத்தனத்தை மறைத்து கொண்டது தவிர வேறென்ன அனுகூலங்களை செய்தோம் என்று கூற அமைச்சர் ஹக்கீமிடம் ஏதாவது இருக்கின்றதா? 2015 இல் கூட சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை பிரதமர் ரணில் ஊடாக சொல்ல வைத்தும் இன்று வரை ஏமாற்றிக் கொண்டிருக்கின்றார் எனில், இவரில் தவறு இல்லை என்று ஆகிவிடுமா?

ஹரீஸ் எம்.பி. சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கைக்கு எதிரானவர் என்பது பட்டவர்த்தமானது. அவரை மீறி கட்சித் தலைவர் என்ற முறையில் நடவடிக்கை எடுக்காது இருந்துவிட்டு இப்போது இம்மக்களின் முடிவை விமர்சிப்பதற்கு அமைச்சர் ஹக்கீமிற்கு என்ன அருகதை இருக்கிறது? அவர் சொல்வதுபோல் சஜித் வெற்றி பெற்றாலும் ஹரீஸ் எம்.பியை புறக்கணித்து சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை தந்துவிடுவார் என்று நம்புவதற்கு வலிமையான காரணங்களை அவரால் உறுதியாக தெரிவிக்க முடியுமா?

அது மட்டுமன்றி அமைச்சர் ஹக்கீமின் எண்ணப்படி சஜித் வெற்றி பெறாதுபோகவும் சந்தர்ப்பம் இருக்கிறது. அப்படி ஏற்பட்டால் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்ற கோரிக்கை நிறைவடையும்  என்பதற்கு அவரிடம் நியாயபூர்வமான கருத்துக்கள் இருக்க வாய்ப்பிருக்கிறதா? கருத்துக் கணிப்புக்களுக்கும் வாக்குப் பலத்தினையும் வைத்து திடமாக யார் வெல்லுவார் என்று உறுதியாக சொல்ல முடியாத ஒரு விடயத்தில் அமைச்சர் ஹக்கீம் ஆதரிக்கும் பக்கம் என்பதற்காக வெற்றி நிச்சயமாக ஆகிவிடும் என்பது எப்படிச் சாத்தியமாகும். முன்னரும் 2005, 2010களில் அவரின் ஆரூடம் பொய்பிக்கப்பட்ட வரலாற்றை மறுக்க முடியுமா?

அமைச்சர் ஹக்கீமின் இக்கூற்றுக்குப் பின்னால் பாரிய யுத்த முனைப்புக்கொண்ட மூர்க்கமும் ஒளிர்ந்து இருக்கிறது என்பதும் அவதானத்திற்குரியது. ஏனெனில், சாய்ந்தமருது மக்களின் உள்ளுராட்சி மன்றக் கோரிக்கைக்காக கோத்தபாயவை ஆதரிப்பது மாபாவம் போன்று கட்டமைத்து இம்மக்கள் மீது ஏனைய பிரதேச முஸ்லிம்கள் எதிராளியை பார்ப்பது போன்ற நிலையை தோற்றுவிக்கின்ற கபடத்தனமும் இதில் இல்லாமலில்லை.

பொதுவாக நமது நாட்டின் செயலாற்று அதிகாரமுடைய ஜனாதிபதியைத் தெரிவு செய்யும்போது எந்த சமூகத்தினரும் கூட்டு மொத்தமாக ஒரு பக்கம் சாய்ந்து கொள்வதில்லை. மாறாக ஒவ்வொரு சமூகமும் அவரவர்களின் தேவைக்கேற்ப கூடியும் குறைந்தும் வாக்களிப்பது சகஜமானது. இதற்கு எதிரான ஒரு செயற்பாட்டில் சாய்ந்தமருது மக்கள் இறங்கவில்லை என்பது மிகத் துல்லியமான உண்மையாகும்.

அந்த வகையில் கோத்தபாயவை இத்தேர்தலில் சாய்ந்தமருது மக்கள் தமக்கான உள்ளுராட்சி மன்றத்தை அடைந்து கொள்வதற்காக ஆதரித்து நிற்பது காட்டிக் கொடுப்போ, வரலாற்றுத் தவறான செயல்பாடோ அல்ல. அது மட்டுமன்றி இது இம்மக்களின் அடிப்படைத் தேவையும் ஜனநாயக வழிமுறைமைக்கும் உட்பட்டது என்பதிலும் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை.

அமைச்சர் ஹக்கீமை முன்னிறுத்தி மேற்படி கருத்துக்களைத் தெரிவித்தாலும் இவை அமைப்பாளர் றஸ்ஸாக்கிற்கும் மற்றும் மேற்படி விமர்சனத்தில் ஈடுபடுவோருக்கும் பதிலாகவும் இதனைக் கொள்ளலாம். குறிப்பாக அமைப்பாளர் றஸ்ஸாக்கிடம் பின்வரும் கேள்வியை நாம் எழுப்புவதன் ஊடாக அவரதும் அவர் சார்ந்து இருக்கும் கட்சித் தலைவர் பிரதமர் ரணிலின் கபடத்தனங்களையும் அபத்தங்களையும் கோடிட்டுக் காட்டப் போதுமானது.

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை விடயத்தில் ஹக்கீம், ஹரீஸ் மட்டுல்ல பிரதமர் ரணிலும் இணைந்தே ஏமாற்றியது என்பது வெளிப்படையான விடயம். அமைப்பாளர் றஸ்ஸாக் ஒரிடத்தில், ஐ.தே.கட்சியினால்தான் இதனை வென்று தருவதாகக் குறிப்பிடுகின்றார். இது சஜித்தின் வெற்றியில் தங்கி இருப்பதாகும். அப்படி அவர் ஜனாதிபதியானால் அங்கு பிரதமர் ரணில், ஹக்கீம், ஹரீஸ் ஆகியோரும் இருக்கத்தான் போகின்றனர். இவர்களை அமைப்பாளர் றஸ்ஸாக் எப்படி சமாளித்து அல்லது இணங்க வைப்பார் என்பதை பகிரங்கமாக அறிவிக்காமை ஏன்? அதுவே இவரின் பலவீனத்தை எடுத்துக் காட்டப் போதுமானது.

சாய்ந்தமருது பள்ளிவாசல் இந்த ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகித்திருக்கலாம் எனச் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு கூறுபவர்களில் நேரடியாக கட்சி அரசியல் செயற்பாட்டாளர்களும் மறைமுகச் செயற்பாட்டாளர்களும் உள்ளடங்குகின்றனர். எவ்வாறிருந்தாலும் தேர்தலில் பக்கம் சாராது நடுநிலை வகித்தல் என்பது யாரோ ஒருவருக்கு மறைமுகமாக ஆதரவு வழங்குவதையே குறித்து நிற்கும் என்பது பொதுவான நியதியாகும். இதனால் சாய்ந்தமருது மக்கள் தமது தாகமாக இருந்து வருகின்ற தனியான உள்ளுராட்சி மன்றத்தை அடைந்து கொள்வதற்கான வழிமுறையாக இராது என்பது எளிதில் விளங்கக் கூடியதே.

இம்மக்களை ஏமாற்றிய பலரும் சஜித்தின் அணியில்தான் இருக்கின்றனர். இதற்கு முன்னரும் இம்மக்கள் அவ்வணிக்குத்தான் பெருவாரியான வாக்குகளை அளித்தும் வந்துள்னனர். அந்த வகையில் என்றும் சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை தரவேண்டிய தார்மீக கடமையுடையோராவார். தொடர்ந்தும் ஏமாற்றும் எண்ணம் எம்மிடமிருக்கவில்லை என்பதை நிரூபிக்கும் பொறுப்பும் அவர்களுக்கு இருக்கின்றது. இதனடிப்படையில் சாய்ந்தமருது பள்ளிவாசல் முடிவுக்கு எதிராக சஜித் வென்றாலும் அது இம்மக்களை பாதிக்காது என்றுதான் நம்ப வேண்டும்.

ஏனெனில், சாய்ந்தமருது பள்ளிவாசல் தமது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை அடைந்து கொள்வதற்கு எடுத்த முயற்சியிலும் கரிசனையிலும் அதிக ஈடுபாட்டை ஸ்ரீ.ல.முகாங்கிரஸ் மீதுதான் கொண்டிருந்தனர். அப்படி இருந்தும் அக்கட்சியும் அக்கட்சியின் சார்பு நிலைப் பிரதமர் ரணிலும் இம்மக்களை ஏமாற்றியதற்கு பிராயசித்தம் தேடிக்கொள்ள வேண்டிய கட்டாயம் அவர்கள் மீது இருப்பதினால் அவர்களின் வெற்றியின் பங்காளர்களாக இம்மக்கள் இணைந்து கொள்ளாவிட்டாலும் பாதகம் இல்லை.

அதே நேரம் ரணில், ஹக்கீம், ஹரீஸ் ஆகியோர்களின் திருகுதாளத்தில் கிடைத்த பட்டறிவினால்தான் சஜித்தை சந்திப்பதற்கு நேரம் கேட்டு பள்ளிவாசல் கடிதம் அனுப்பியும் அவரது தரகரான ஹக்கீமுடன் வாருங்கள் எனச் சொன்னதினாலும் இவர்கள் பக்கம் நிற்பது எப்படி என்கின்ற ஒரு கேள்வியுடன் நோக்கும்போது ஆட்சிக்கு வரக்கூடிய தரப்பென்று பேசப்படுகின்ற அணியின்பால் செல்வது பல வழிகளில் சிறப்புக்குரியதாகின்றது. குறிப்பாக கோத்தாபாய அணியினர் வெற்றி பெற்றால் அப்பக்கம் நமது சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றத்தை சரியாக வலியுறுத்துவதற்கு யாருமில்லாத அநாதையாகி விடுவோம். இதனை கருத்தில் ஏற்றி வாசிப்பு செய்தால், சாய்ந்தமருது பள்ளிவாசலின் முடிவு தீர்வுக்கு வழியானது என்கின்ற நம்பிக்கையைத் தரும். அது மட்டுமன்றி ஆரம்பமே நேர ஒதுக்கீட்டை பள்ளிவாசல் கேட்டதை தட்டிக் கழிக்காது ஒட்டிக் கொண்டமையும் சற்று ஆறுதலான நிலைப்பாட்டை உறுதி செய்கிறது.

சாய்ந்தமருது ஜும்மா பள்ளிவாசல் உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையை கையிலெடுத்து அதற்கான முயற்சிகள் மேற்கொண்ட சமயத்தில் ஏற்பட்ட சங்கடங்களும் அவலங்களும் வீதி போராட்டம்வரை கொண்டு சென்றது மட்டுமன்றி ஒரு கொள்கை பிரகடனத்தை செய்ய நேரிட்டது. அதில் உள்ளுராட்சி மன்றத் தாபித்தலை அறிவிக்கும் உத்தியோகபூர்வமான வர்த்தமானி அறிவித்தலுடன் வரும் அரசியல் செயற்பாட்டாளர்களையே இனி இவ்வூரில் இயங்க அனுமதிப்பது என்று இதனை இன்று பிரகடனத்தை வெளியிட்டவர்கள் மிதித்து துவம்சம் செய்து விட்டனர் என்ற ஒரு கருத்தை மிக ஊன்றி விதைப்பதில் சிலர் முனைப்புடன் செயலாற்றுவதை நாம் பார்க்கின்றோம். இது எவ்வளவு வலிமையானது என்றும் நோக்கவேண்டி இருப்பதினால் அது பற்றி சில குறிப்புக்களை சொல்வது இவ்விடத்தில் அவசிய உபயோகமாக இருக்கின்றது.

உள்ளுராட்சி மன்ற செயற்பாட்டாளர்கள் பிரகடனம் வெளியிட்ட சந்தர்ப்பம் வர்த்தமானி அறிவித்தலை செய்வதற்கு தடை இல்லாத காலம். அது மட்டுமன்றி அந்த அரசாங்கத்தில் பிரதமர் ரணில், ஜனாதிபதி மைத்திரி, ஸ்ரீ.ல.மு.காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பங்காளிகளாக இருப்புக்கொண்ட சந்தர்ப்பமும் ஆகும். ஆதலால் இவ்வணியினர்களுக்குரிய  ஆலோசனையாகவே அந்தப் பிரகடனம் அமையும். ஏனெனில், ஊரில் அரசியல் செயற்பாட்டுக்கும் அந்தப் பிரகடனம் தடை விதித்திருந்தது. இத்தகைய அடிப்படையில் விளங்கிக் கொண்டால், இன்று ஜும்மாப் பள்ளிவாசல் எடுத்திருக்கும் முடிவானது அன்றைய பிரகடனத்தை மீறியதாகாது. இதனை பின்வரும் கோணத்தில் வைத்துப் பார்த்தாலும் முடிவு சரி என ஒப்புக் கொள்வதற்கு தயக்கம் இராது.

ஜனாதிபதித் தேர்தல் வர்த்தமானியில் அறிவித்த பின்னர் ஆளும் தரப்பினர்களால் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றத்தை வர்த்தமானியில் அறிவிப்பு செய்வதில் சிறிய தொய்வு ஏற்பட்டு விடுவது யாவரும் அறிந்த ஒன்றே. இந்நிலையில் அந்தப் பிரகடனம் வலுவிழந்ததாகவே கொள்ள வேண்டும். இல்லையேல் யாரும் இவ்வூரில் அரசியல் நடவடிக்கையில் ஈடுபடக் கூடாது என்ற போராட்டம் முன் நகரும். அது சஜித்திற்காக ஓர் ஊர் மக்களின் முடிவு பிழையென்று கூறுவோர்களும் இங்கு அரசியல் செய்யக் கூடாது என்ற நிலையை தோற்றுவிக்கும் அபாயத்தையும் உணர்ந்தாக வேண்டும். இதன் மறுதலை இத்தேர்தலை இவ்வூர் மக்கள் முற்றாக நிராகரிக்க வேண்டிய கட்டாயத்தை தந்துவிடும். இது யாருக்கும் ஆரோக்கியமான விளைவைத் தராது.

உண்மையில் இவ்வூர் மக்களின் வாக்குகள் உள்ளுராட்சி மன்றத்தை பெற்றுக் கொள்வதற்கு காலாக அமைய சிந்திப்பதுதான் பிரயோசனமானது. அந்த வகையில் சஜித், கோத்தபாய சந்திப்பு முக்கியப்படுகின்றது. இதில் ஒருவர் கதவு மூடப்பட திறக்கப்பட்ட பக்கம் சென்று பேசப்பட்டிருக்கிறது. இது வெறும் வாக்குறுதிதானே அதனை எப்படி நம்புவது என்று இவ்விடத்தில் ஒரு கேள்வி எழுப்பப்படலாம்.

அதற்கு நாம் காண வேண்டிய விடை நீண்ட காலமாக ஏமாற்றியவர்களின் பக்கம் சார்பு கொள்வதைப் பார்க்கிலும் புதியவரின் வாக்குறுதியை நம்புவது அவரின் ஆட்சி வந்தாலும் உதவக்கூடியது என்பதை நிறுத்துப் பார்த்தன் விளைவுதான். இது எனக் கொள்ளலாம். அப்படி இது தவறினாலும் இதுவரை ஏமாற்றிவர்கள் மீதுள்ள தார்மீகக் கடமை மேற்கிளம்பும் என்றும் நம்பலாம். எப்படி பார்த்தாலும் சாய்ந்தமருது ஜும்மா பள்ளியின் முடிவு வரலாற்று துரோகமாகவோ, தவறாகவோ பார்க்கப்படத் தேவை இல்லை. மாறாக அது வரலாற்று பாடம் புகட்டுதலாகவும் அமைய முடியும்.

சாய்ந்தமருது ஜும்மா ப்பள்ளிவாசல் தமது கடமை முடிந்துவிட்டது சரியான இடத்திற்கு கொண்டு சென்று விட்டோம் என்று திருப்திபட்டு விடக் கூடாத ஓர் அவதானம் தேவைப்படுவதையும் அவர்கள் உணர்ந்து செயற்பட வேண்டிய பொறுப்பும் இருக்கிறது என சுட்டிக் காட்ட வேண்டி இருக்கிறது.

சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கை பலத்த பின்னடைவைச் சந்திப்பதற்கு பிரதான காரணங்களாக அமைகின்ற விடயத்தை புரிந்து கொள்ள வேண்டும். கல்முனையில் நான்கு சபைகள் ஒரே நேரத்தில் பிரிக்கப்படல் வேண்டும், கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் எல்லை தீர்க்கப்பட்ட பின்னர்தான் சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி மன்றம் வழங்கப்பட வேண்டும் என்கின்ற முடிச்சுக்களுக்குள் சிக்கி கொண்டிருப்பது அவிழ்க்கப்பட வேண்டும். இவ்வாறான வேண்டுகோளோடு சாய்ந்தமருது உள்ளுராட்சி மன்றம் தங்கி இல்லை என்பதும் தனியாக பிரிப்பதினால் எந்தவிதமான பாதிப்புக்களும் எத்தரப்பினருக்கும் இல்லை என்பதும் தெளிவாக கோத்தா - மஹிந்த தரப்புக்கு சொல்லப்பட வேண்டும்.

இன்று கோத்தா தரப்பில் இருக்கும் முன்னாள் அமைச்சர் அதாவுல்லாவும் நான்காக பிரிக்க வேண்டும் என்ற கருத்துடையவர், மயோன் முஸ்தபா இது விடயத்தில் தனது உறுதியான நிலைப்பாடு இதுதான் என்று அறிவிக்காத ஒருவராகவும் இருக்கின்றார். இவ்விருவரும் நமது உள்ளுராட்சி மன்றக் கோரிக்கைக்கு அதாவது எந்த நிபந்தனைக்கும் உட்படாது வழங்க முடியும் என்பதற்கு சாதகமானவர்கள் அல்ல.

இன்று தேர்தல் காலம் என்பதனால் மஹிந்த தரப்பினை இலகுவாக பள்ளிவாசல் சமூகம் சந்தித்துக் கொண்டது. எதிர்காலமும் அப்படி அமையக்கூடியதாக வழிகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அதே நேரம் கோத்தபாயவின் ஆட்சி அதிகாரம் வந்த பின்னரும் ஹக்கீம் ஹரீஸ் பிரசன்னம் அப்பக்கம் இராது என்று திட்டவட்டமாக கூற முடியாது. சிலவேளை இவர்களின் தயவு கோத்தாவுக்கு தேவைப்பட்டால், அந்த இணைவு நிகழ்ந்தால் நமது மாற்று நடவடிக்கையாது என்கின்ற திட்டமிடலும் தேவை.

மீண்டும் ஒரு தடவை மஹிந்த - கோத்தா அணியினர்களை நமது சாய்ந்தமருது ஜூம்மா பள்ளியின் தலைமையிலான உள்ளுராட்சி செயற்பாட்டாளர்கள் சந்தித்து இதில் இருக்கும் தடைக் கோணங்கள் இவை எனவும் அவை யாதும் தடை அல்ல என்பதும் தெளிவுபடுத்தப்படல் வேண்டும். அதன் பின்னர் தேர்தல் களத்தில் இயங்கியலாளர்களாக மாற வேண்டும். அதுதான் நமது எதிர்பார்ப்பை நிராசையாக்காது கட்டிக் காக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது

எல்லாவற்றுக்கும் அப்பால் முதலில் கடந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலில் சுயேட்சைக் குழுவினருக்குப் பின்னால் நமது மக்கள் திரட்சி பெருவாரியாக குவிக்கப்பட்டது போன்ற நிலையை தோற்றுவிப்பது அவசியத்திலும் அவசியமும் அவசரமானதும் என்பதை கவனத்தில் எடுத்து அதற்கான வழிவகைகளையும் தயார்படுத்துவதும் இது விடயத்தில் மிக மிக முக்கியமானது. இவ்வூர் மக்கள் பெரும்தொகையினர்களாக உள்ளுராட்சி மன்றக் கோரிக்கையின் பக்கம் ஒன்று திரள்வார்களா? அதில்தான் இதன் வெற்றி நகர்வு தங்கி இருக்கிறது.

6 கருத்துரைகள்:

palliyin peyaral suyanala peruchchalihal ilaafameetta munaihintrana. ithuthan unmai?

பள்ளிவாசலில் அரசியல் பேசக்கூடாது எல்லாம் மலையேறி விட்ட காலம்

Are u all deciding the president based on a creation of a pradeshiya Saba..saintamarthu people are more intelligent than the mosque administration.,..sajith would win in any case..come to reality..

pallen perrai veitho arasiyal mukaveri thedoveruku iththerthal patamaka amaium

ஆட்சியாளர்களிடம் தமக்குரிய உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்வதற்கு தரகர் கூட்டம் தேவையதில்லை. வெற்றி பெற்றவுடன் அவர்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொள்வார்கள். இந்த அமைச்சு எனக்கு! இந்தப் பிரதி அமைச்சு இவருக்கு! இந்த தூதுவர் பதவி தனது குடும்பத்துக்கு! என்று இப்பொழுதே அட்டவணைப்படுத்தி வைத்திருப்பார்கள். பாதுகாப்புக்குப் பொறுப்பாக அடையாளம் காணப்பட்டவரின் குணாதிசயங்களை நாங்கள் பாராளுமன்றக் கமிட்டி முன்னால் கண்டோம். பள்ளிவாசல்களுக்கு நாயைக் கொண்டுபோனால் உனக்கென்ன என்ற தோரணையில் பேசியதை நாங்கள் மறந்துவிடவில்லை. குன்றின் முன்னால் இருந்து புகைப்படம் எடுத்த பல்கலைக்கழக மாணவர்களைச் 14 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்று அகம்பாவத்துடன் கூடிய அந்த வேட்பாளரையும் நாம் மறக்க வில்லை. பதவிக்கு வருவதற்கு முன்பே அப்படியென்றால், வந்த பின்னர் எப்படி இருப்பாார்கள்? எந்த அரசியல்வாதியும் இன்னாருக்கு வாக்குப் போடும்படி யாரையும் கேட்க முடியாது. அது சமூகத்துக்குச் செய்யும் துரோகம்.

ஆட்சியாளர்களிடம் தமக்குரிய உரிமைகளைக் கேட்டுப் பெற்றுக்கொள்வதற்கு தரகர் கூட்டம் தேவையில்லை. வெற்றி பெற்றவுடன் அவர்கள் தங்கள் வேலைகளைப் பார்த்துக்கொள்வார்கள். இந்த அமைச்சு எனக்கு! இந்தப் பிரதி அமைச்சு இவருக்கு! இந்த தூதுவர் பதவி தனது குடும்பத்துக்கு! என்று இப்பொழுதே அட்டவணைப்படுத்தி வைத்திருப்பார்கள். பாதுகாப்புக்குப் பொறுப்பாக அடையாளம் காணப்பட்டவரின் குணாதிசயங்களை நாங்கள் பாராளுமன்றக் கமிட்டி முன்னால் கண்டோம். பள்ளிவாசல்களுக்கு நாயைக் கொண்டுபோனால் உனக்கென்ன என்ற தோரணையில் பேசியதை நாங்கள் மறந்துவிடவில்லை. குன்றின் முன்னால் இருந்து புகைப்படம் எடுத்த பல்கலைக்கழக மாணவர்களைச் 14 நாட்கள் சிறையில் அடைக்க வேண்டும் என்று அகம்பாவத்துடன் கூறிய அந்த வேட்பாளரையும் நாம் மறக்க வில்லை. பதவிக்கு வருவதற்கு முன்பே அப்படியென்றால், வந்த பின்னர் எப்படி இருப்பாார்கள்? என்பதைச் சிந்தித்துப் பாருங்கள்! எந்த அரசியல்வாதியும் இன்னாருக்கு வாக்குப் போடும்படி யாரையும் கேட்க முடியாது. அது சமூகத்துக்குச் செய்யும் துரோகம்!

Post a comment