Header Ads



கடமையில் இருந்து சிலர் தவறியமையே, பயங்கரவாதி சஹ்ரானின் தாக்குதலுக்கு காரணம்

ஏப்ரல் 21 தாக்குதலை தடுப்பதற்கு சிலர் நபர்கள் தங்களது கடமையில் இருந்து தவறி இருப்பதாக, குறித்த தாக்குதல் தொடர்பான நாடாளுமன்றத் தெரிவுக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி குற்றமிழைத்தமை தொடர்பாக போதுமான சாட்சியங்களை திரட்டிக்கொள்ளக்கூடிய சந்தர்பத்தில், குற்றபத்திரிகை தாக்கல் செய்வதுடன், வழக்கு தொடரவும் நடவடிக்கை எடுக்குமாறு நாடாளுமன்றத் தெரிவுக் குழு பரிந்துரைத்துள்ளது.

ஏப்ரல்21 தாக்குதல் குறித்த நாடாளுமன்றத் தெரிவுக் குழுவின் இறுதி அறிக்கை இன்று -23- நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டது.

அந்த குழுவின் உறுப்பினர் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயம்பதி விக்ரமரத்ன இதனை முன்வைத்தார்.

எனினும் இந்த அறிக்கை முன்வைக்கப்படுவதற்கு முன்னதாக, ஒன்றிணைந்த எதிரணியினர் அதற்கு எதிர்ப்பைத் தெரிவித்து சபையில் குழப்பத்தை ஏற்படுத்தினர்.

இந்த தாக்குதலின் சூத்திரதாரியான சஹ்ரான் ஹாசிமுடன் அமைச்சர் ரவுப் ஹக்கீமிற்கு தொடர்பு இருப்பதாகவும், அதேநேரம் ஹக்கீமும் இந்த தெரிவுக் குழுவின் உறுப்பினராக உள்ள நிலையில் இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்ள முடியாது எனவும் அவர்கள் தெரிவித்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் 21ம் திகதி 3 விடுதிகள் மற்றும் 2 தேவாலயங்களில் நடைபெற்ற தற்கொலைத் தாக்குதலில் 277 பேர் கொல்லப்பட்டதுடன், 400க்கும் அதிகமானவர்கள் காயமடைந்தனர்.

பலியானவர்களில் 40 வெளிநாட்டவர்களும், 45 சிறார்களும் அடங்குகின்றனர்.

இதுதொடர்பாக ஆராய்வதற்காக உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத் தெரிவுக் குழு, 24 தடவைகள் ஒன்று கூடியதுடன், 55 பேரிடம் வாக்கு மூலங்களை பதிவு செய்திருந்தது.

இதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட 242 பக்கங்களைக் கொண்ட அறிக்கை இன்று சபையில் முன்வைக்கப்பட்டது.

இதில், நாட்டின் புலனாய்வு கட்டமைப்பின், அரச புலனாய்பு பணிப்பாளருக்கு அதிக கடமை பகிரப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

ஏப்ரல் மாதம் 4ம் திகதி இந்த தாக்தல் தொடர்பான முன்கூட்டிய தகவல் கிடைக்கப்பெற்ற முதலாவது நபர் என்ற அடிப்படையில், அதனை தடுப்பதற்கான நடவடிக்கைகளை புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளர் மேற்கொண்டிருக்க வேண்டும் என்றாலும், அதில் அவர் தவறிழைத்துள்ளார்.

அதேநேரம், தேசிய பாதுகாப்பு சபைக் கூட்டத்தை சீராக கூட்டி நடத்த வேண்டிய பொறுப்பு பாதுகாப்பு செயலாளருக்கு இருக்கின்றது என்பதை சுட்டிக்காட்டியுள்ள தெரிவுக் குழு இந்த விடயத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜனாதிபதியை எதிர்பார்த்துக் கொண்டிருக்க கூடாது என்றும் குறிப்பிட்டுள்ளது.

இந்த விடயத்தில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர்களான கபில வைத்தியராத்ன மற்றும் ஹேமசிறி பெர்ணாண்டோ ஆகிய இரண்டு பேரின் மீது தவறுகள் உள்ளன என்று அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

1 comment:

  1. PSC has failed to identify the conspirators and master minds behind Easter Sunday attack. Waste of time and parliament funds.

    ReplyDelete

Powered by Blogger.