Header Ads



ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் மைத்திரியின், தீர்மானத்தை அறிவிக்கும்வரை காத்திருக்கின்றேன்

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவின் தீர்மானம் வெளியான பின்னரே எனது நிலைப்பாட்டை அறிவிப்பேன்."

- இவ்வாறு ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினரான குமார வெல்கம தெரிவித்தார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்ச களமிறக்கப்பட்டால் பொது எதிரணிக்கு ஆதரவளிக்கப்போவதில்லை என குமார வெல்கம திட்டவட்டமாக அறிவித்திருந்தார்.

அத்துடன், கோட்டாபய சர்வாதிகாரி என்றும், இலங்கைக்கு இராணுவ ஆட்சி தேவையில்லை என்றும்கூட அவர் கருத்து வெளியிட்டிருந்தார். கோட்டாவால் வெற்றி பெற முடியாது எனவும் அவர் அடித்துக் கூறியிருந்தார்.

மஹிந்த ராஜபக்சவின் தீவிர விசுவாசியும் ராஜபக்ச குடும்பத்தின் உறவினருமான குமார வெல்கமவின் இத்தகைய கருத்துகளானவை பொது எதிரணிக்குள் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தியது.

இதனால் பொது எதிரணியின் பதுளை மாவட்டத் தலைவர் பதவியிலிருந்து அவர் அதிரடியாக நீக்கப்பட்டார்.

இதனையடுத்து ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சிப் பக்கம் மீண்டும் சாய்ந்த குமார வெல்கம, மைத்திரிக்கு ஆதரவாகப் பரப்புரைகளில் ஈடுபட்டார்.

இந்தநிலையில், தற்போது ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபயவின் பெயரை மஹிந்த அணி அறிவித்துள்ளது. எனவே, இது தொடர்பில் தங்கள் நிலைப்பாடு என்னவென குமார வெல்கமவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அவர்,

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவரின் தீர்மானத்தை அறிவிக்கும்வரை காத்திருக்கின்றேன். அதன்பின்னரே எனது முடிவை அறிவிப்பேன்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சரியான முடிவை எடுத்தால் அவருடன் இருப்பேன். அவரால் எடுக்கப்படும் முடிவுடன் எனக்கு இணக்கப்பாடு இல்லையேல் இணைந்து பயணிக்கமாட்டேன்" - என்றார்.

No comments

Powered by Blogger.