Header Ads



ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பெயரிடப்பட வேண்டும், 26 பின்வரிசை Mp கள் தீர்மானம்

வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளராக அமைச்சர் சஜித் பிரேமதாச பெயரிடப்பட வேண்டும் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

இன்று காலை நாடாளுமன்றத்தில் கூடிய போது, பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர். ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாசவும், பிரதமர் வேட்பாளராக ரணில் விக்ரமசிங்கவும் பெயரிடப்பட்டு, அறிவிக்கப்பட வேண்டும் என்று இதன்போது தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

அத்துடன், தேர்தலுக்கான கட்சியின் பிரசாரப் பணிகள் அமைச்சர் சஜித் பிரேமதாசவிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது தீர்மானித்துள்ளனர்.

சுமார் 30 உறுப்பினர்களைக் கொண்ட இந்தக் குழுவில் 26 உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் கலந்துகொண்டதாகவும், கலந்துகொள்ள முடியாத உறுப்பினர்களும் இதற்கு தமது இணக்கத்தை வெளியிட்டதாக கூட்டத்தில் கலந்துகொண்ட எம்.பி. ஒருவர் தெரிவித்தார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, ஜனாதிபதி வேட்பாளரை அறிவிக்க இழுத்தடித்து வரும் நிலையில், ஐ.தே.க. பின்வரிசை உறுப்பினர்கள் இந்தத் தீர்மானத்தை எடுத்துள்ளனர்.

இதேவேளை, சஜித் பிரேமதாசவை ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என கையெழுத்திடும் மகஜர் ஒன்றும் ஐ.தே.க. உறுப்பினர்களினால் தயாரிக்கப்பட்டு வந்த நிலையில், சில முக்கிய உறுப்பினர்களை மட்டும் இன்று காலை அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க சந்தித்துப் பேசியுள்ளார்.

ஐ.தே.கவின் ஜனாதிபதி வேட்பாளர் வெற்றிபெறும் பட்சத்தில் அந்தக் கட்சியின் தலைவர் பதவியும் கட்சி யாப்பின்படி புதிய ஜனாதிபதிக்கே வழங்க நேரிடும். இதனால் கட்சித் தலைமைத்துவத்தைக் காத்துக் கொள்வதில் ரணில் விக்ரமசிங்க காய் நகர்த்தி வருவதால், ஜனாதிபதி வேட்பாளரை பெயரிடுவதில் ஐக்கிய தேசியக் கட்சிக்குள் இழுபறி நிலை நீடிக்கிறது.

இந்த நிலையில், பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சித் தலைமைக்கு அழுத்தம் கொடுப்பதற்காக இன்று காலை கூடி சஜித் பிரேமதாசவை பெயரிடவேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளதாக அந்தக் கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் தெரிவித்தார்.

எஸ்.எம். மரிக்கார், லக்ஸ்மன் விஜேமான்ன, ஹேசா விதானகே, சமிந்த விஜேசிறி, இம்ரான் மஹ்ரூப், கே.கே.பியதாச, விஜேலால் ஹெட்டியாராச்சி, ஏ.விஜயதுங்க, சிட்னி ஜயரத்ன, பந்துல லால் பண்டாரிகொட, ரோஹினி கவிரத்ன, துசார இந்துனில் உள்ளிட்ட 26 பின்வரிசை உறுப்பினர்கள் இதில் கலந்துகொண்டனர். TN

No comments

Powered by Blogger.