Header Ads



பதவிகளை மீளப்பெறும் முஸ்லிம் அரசியல்வாதிகள் மீது, சிறியதொரு குற்றச்சாட்டும் இருக்கக்கூடாது

குற்றச்சாட்டுக்கள் உள்ள அமைச்சர்களை குற்றமற்றவர்கள் எனக் கூறி தெரிவுக்குழு விடுவிக்குமாயின் அதற்கான முழுப் பொறுப்பையும் எதிர்க்கட்சியினரே ஏற்றுக்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

தெரிவுக்குழுவில் கலந்துகொண்டு சம்பந்தப் பட்டவர்களிடம் கேள்வி கேட்பதற்கான சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி பாராளுமன்றத்துக்கு வெளியே இருந்து விமர்சிப்பதில் எந்தவித பலனும் இல்லையெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் பின்வரிசை பாராளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே தெரிவித்தார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலைத் தடுப்பதற்குத் தவறியவர்கள் யார்? மற்றும் அமைச்சராகவிருந்த ரிஷாட் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் குறித்து விசாரிப்பதற்காக பிரதி சபாநாயகர் தலைமையில் பாராளுமன்றத் தெரிவுக்குழு நியமிக்கப்பட்டது. இந்தத் தெரிவுகுழுவுக்கான பிரதிநிதிகளின் பெயர்களை எதிர்க்கட்சியினர் எவரும் வழங்கியிருக்கவில்லை. இருந்தபோதும் ஆளும் கட்சி மற்றும் ஜே.வி.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் ஆகியோரின் பிரதிநிதிகளுடன் தெரிவுக்குழுவின் விசாரணைகள் முன்னெடுக்கப் பட்டு வருகின்றன.

இருந்தபோதும் தெரிவுக்குழுவில் பங்கேற்காத எதிர்க்கட்சியினர் வெளியிலிருந்து விமர்சித்து வருகின்றனர். அலரிமாளிகையில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் எதிர்க் கட்சியினரின் விமர்சனங்களுக்குப் பதிலளிக்கும் வகையிலேயே ஹேஷா விதானகே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

"தெரிவுக்குழுவின் செயற்பாடுகள் மற்றும் அதனால் எடுக்கப்படும் தீர்மானங்கள் குறித்து விமர்சிப்பதற்கோ அல்லது கருத்துக்களை முன்வைப்பதற்கோ எதிர்க்கட்சி உறுப்பினர்களுக்கு எவ்வித தார்மிக உரிமையும் கிடையாது. தெரிவுக்குழுவில் அமர்ந்து குற்றஞ்சாட்டப் படுபவர்களிடம் நேரடியாக கேள்விகளைக் கேட்பதற்கான வாய்ப்பு அவர்களுக்கு இருந்தது. எனினும், இந்தச் சந்தர்ப்பத்தைக் கைவிட்டுவிட்டுத் தற்பொழுது வெளியே இருந்து விமர்சிப்பதில் பயனில்லை. குற்றச்சாட்டுக்கள் உள்ள அமைச்சர்கள் ஏதாவதொரு விதத்தில் தெரிவுக் குழுவின் ஊடாக மறைமுகமாகவாவது விடுதலை செய்யப்பட்டால், அதற்கான முழுப்பொறுப்பையும் எதிர்க்கட்சியினரே ஏற்றுக் கொள்ள வேண்டும்" என்றும் அவர் குறிப்பிட்டார்.

அமைச்சுப் பதவிகளிலிருந்து விலகியவர்கள் மீண்டும் அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக் கொள்வது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த பாராளுமன்ற உறுப்பினர், குற்றச்சாட்டுக்கள் எதுவும் இல்லாதவர்களுக்கு அமைச்சுப் பதவிகளை மீளப் பெற்றுக் கொள்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை. எனினும், பதவிகளை மீளப் பெற்றுக்கொள்பவர்கள் மீது சிறியதொரு குற்றச்சாட்டும் இருக்கக் கூடாது. அவ்வாறானவர்கள் அமைச்சரவையில் இருப்பது பற்றி ஜனாதிபதியும் பிரதமரும் தீர்மானிக்க வேண்டும் என்றார்.

கடந்த நான்கரை வருடங்களில் செய்யாததை ஐந்து மாதங்களுக்குள் பூர்த்திசெய்ய எதிர்பார்க்கும் ஜனாதிபதி, குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கு மீண்டும் அமைச்சுப் பதவியைப் பெற்றுக் கொடுக்கமாட்டார் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதேவேளை, அமைச்சராகவிருந்த ஒருவர் மீது குற்றச்சாட்டுக்களை சுமத்திய எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரசன்ச, தான் முன்வைத்த எந்தவொரு குற்றச்சாட்டுத் தொடர்பிலும் பொலிஸாரிடம் சாட்சியங்களைச் சமர்ப்பிக்கவில்லை. இதற்கான முழுப் பொறுப்பையும் அவரே ஏற்றுக் கொள்ள வேண்டும் என ஐ.தே.கவின் பின்வரிசை உறுப்பினரான சமிந்த விஜயசிறி குறிப்பிட்டார்.

ஊடகங்களுக்காகப் பொய்யான குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் விமல் வீரவன்ச பொறுப்புடன் செயற்படுவது அவசியமானது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

1 comment:

  1. அனைத்துமே பொய்யான குற்ற சாட்டுக்கல்தான்

    ReplyDelete

Powered by Blogger.