Header Ads



புத்தளத்தில் வெடிபொருட்களை கைப்பற்றியிருக்காவிடின் 30 முதல் 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும்

உயர்மட்ட புலனாய்வு அதிகாரிகள் தங்கள் முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைக்கக் கூடாது என்றும், இரகசிய கள நடவடிக்கைகளில் ஈடுபடும் புலனாய்வாளர்கள் மட்டுமே அவ்வாறு மறைத்துக் கொள்ள வேண்டியிருப்பதாகவும், குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் ஷானி அபேசேகர தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்கள் குறித்து விசாரிக்கும் நாடாளுமன்றத் தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று சாட்சியம் அளித்த போதே அவர் இவ்வாறு கூறினார்.

“களத்தில் இறங்கிச் செயல்படும் புலனாய்வு உறுப்பினர்கள்தான் தம்மை வெளிப்படுத்திக் கொள்வது பற்றி கவலைப்பட வேண்டும்.

தம்மை வெளிப்படுத்திக் கொள்வது குறித்து உயர்மட்ட அதிகாரிகள் கவலைப்படக் கூடாது.  இத்தகைய உயர் அதிகாரிகள் கள நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.

அவர்கள் தமது  முகங்களை பொதுமக்களிடமிருந்து மறைப்பதில் எந்த அர்த்தமும் இல்லை.

எங்களுக்குத் தெரிந்தவரை, ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களில் ஈடுபட்டவர்கள் அனைவரும் இறந்து விட்டார்கள் அல்லது எமது காவலில் உள்ளனர். இந்தப் பிரச்சினை 80 சதவீதம் தீர்ந்து விட்டது.

வாராந்த புலனாய்வு மீளாய்வுக் கூட்டங்களுக்கு குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் அழைக்கப்படுவார். ஏப்ரல் 9ஆம் நாள் நடந்த கூட்டத்துக்கு எனக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.

ஈஸ்டர் ஞாயிறு சம்பவங்களுக்குப் பின்னரே, அந்தக் கூட்டத்திற்கு குற்ற விசாரணைப் பிரிவின் பணிப்பாளர் அழைக்கப்படுகிறார்.

தாக்குதல் குறித்து முன்னெச்சரிக்கை செய்யும் வெளிநாட்டுப் புலனாய்வு அறிக்கை எதுவும் எனக்கு கிடைக்கவில்லை.

புத்தளம்- வனாத்தவில்லுவில் கைப்பற்றப்பட்ட வெடிபொருட்களுடன் திசைகாட்டிகளும் கண்டுபிடிக்கப்பட்டன. அவை தரை நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுபவை.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைத் தவிர வேறு பல தாக்குதல்களை நடத்தும் நோக்கமும் அவர்களுக்கு இருந்தது.

புத்தளத்தில் நாம் பெருமளவு வெடிபொருட்களை கைப்பற்றினோம். அவையும் அவர்களிடம் இருந்திருந்தால், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல்களைப் போன்று 30 தொடக்கம் 40 தாக்குதல்களை நடத்தியிருக்க முடியும்.

புத்தளத்தில் கண்டுபிடித்த இடத்தை, அவர்கள் சுடுகலன் பயிற்சிகளுக்கு பயன்படுத்தியிருப்பதை கண்டோம். அங்கு அவர்கள் வெடிபொருட்களை பரிசோதித்துள்ளனர். காட்டுப் போர்முறைக்கான பயிற்சி முகாமாக அதனைப் பயன்படுத்தியுள்ளனர்.

தாக்குதல்கள் தொடர்பான துல்லியமான தகவல்களைப் பெற்றிருந்த போதும், அதனை மூடி வைத்திருந்தது தவறு. அந்த தகவல்கள் எமக்கும் பகிரப்பட்டிருக்க வேண்டும். புலனாய்வு செயல்முறையில் சில தவறுகள் இருந்தன.

தாஜ் சமுத்ரா விடுதியில் சில முக்கிய பிரமுகர்கள் தங்கியிருந்ததால் தான், தற்கொலைக் குண்டுதாரி குண்டை வெடிக்கச் செய்யவில்லை என்று கூறப்படும் கருத்துடன் நான் இணங்கவில்லை.

தாஜ் சமுத்ரா விடுதியில் பெறப்பட்ட காணொளிப் பதிவை நான்கு முறை பரிசோதித்துள்ளோம். அதில், தற்கொலைக் குண்டுதாரி, குண்டை வெடிக்க வைப்பதற்கு, இரண்டு முறை முயற்சித்தும், அது வெடிக்கவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.

அதன் பின்னரே அவர், அங்கிருந்து வெளியேறி தெகிவளையில் உள்ள தனது அறைக்குச் சென்று அதனை பொருத்தவோ, தவனை கண்டுபிடிக்கவோ முயற்சித்திருக்கிறார். அப்போதே அந்தக் குண்டு வெடித்துள்ளது” என்றும் அவர் சாட்சியம் அளித்துள்ளார்.

1 comment:

  1. இனவாதிகலின் கற்பனை பிரச்சாரங்கலுக்கு தக்க பதில்கள் இனித்தான் வெளியே வரப்போகின்ரன.

    ReplyDelete

Powered by Blogger.