Header Ads



மர்ஹூம் MSM. சிஹாபுத்தீன் (உமர் மாஸ்டர் )

- பரீட் இக்பால் -

யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த முகம்மது சேகு அலாவுத்தீன் (மாணிக்க லெப்பை) பாத்திமா நாச்சியா தம்பதியினருக்கு 1941 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 29 ஆம் திகதி மகனாக முகம்மது சிஹாபுத்தீன் பிறந்தார்.

இவரின் சகோதரி முஹியித்தீன் நாச்சியாவும் சகோதரர்கள் எம்.எஸ்.எம்.தமீம், எம்.எஸ்.எம்.முஹ்தார் (ஓய்வு பெற்ற பிரதிக் கல்விப் பணிப்பாளர் ) ஆகியோரும் ஆவார்கள்.

சிஹாபுத்தீன் தனது ஆரம்பக் கல்வியை யாழ்.மஸ்ற உத்தீன் பாடசாலையிலும் இடைநிலைக் கல்வியை யாழ்.வண்ணை வைத்தீஸ்வரா கல்லூரியிலும் உயர்கல்வியை யாழ் இந்து கல்லூரியிலும் கற்றார்.

சிஹாபுத்தீன் உயர் கல்வி கற்பதை இடையில் நிறுத்தி விட்டு 01.09.1959 இல் மன்னார், புதுவெளி முஸ்லிம் பாடசாலையில் ஆசிரியர் நியமனம் பெற்றார். பின்னர்;; வவுனியா, பாவற்குளம் முஸ்லிம் வித்தியாலயத்திலும் அதனை தொடர்ந்து தனது ஆரம்பக் கல்வியை கற்ற யாழ்.மஸ்ற உத்தீன் பாடசாலையிலும் ஆசிரியராக கடமையாற்றினார்.

சிஹாபுத்தீன், யாழ்ப்பாணம் சோனகத் தெருவைச் சேர்ந்த நகை வர்த்தகரான சுல்தான் முஹியித்தீன் அவர்களுடைய மகள் ஹலீமாவை 1968 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் செய்தார்.

சிஹாபுத்தீன் - ஹலீமா தம்பதியினருக்கு முத்தான நான்கு பிள்ளைகள் வஜீஹா, முகம்மது ரிழா (பிரான்ஸ்) முகம்மது ரிஸா  (கணக்காளர்) குதுப்ரியா (பிரான்ஸ்) கிடைத்தனர்.

சிஹாபுத்தீன் முல்லைத்தீவு, தண்ணீரூற்று முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் ஆசிரியராக கடமையாற்றும் போது 01.01.1984 இல் அதிபர் தரம் 4 (இன்றைய அதிபர் தரம் 1) பதவியுயர்வு பெற்று ஆசிரியராக கடமையாற்றிய அதே பாடசாலையில் அதிபர் நியமனம் பெற்றார்.

சிஹாபுத்தீன் 01.04.1984 இல் தனது ஆரம்பக் கல்வியை கற்ற யாழ். மஸ்ற உத்தீன் பாடசாலைக்கு அதிபராக நியமனம் கிடைத்தும் இவரது ஆசிரியரான எம்.எச்.எம்.எம். முஹிதீன் தம்பிக்காக்கா மாஸ்டர் அதிபராக கடமையாற்றியதால் தனது ஆசிரியர் என்ற கௌரவத்தை மதித்து அவர் ஓய்வு பெறும் வரை அதிபர் கதிரையில் அமர்த்தினார் என்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.

சிஹாபுத்தீன் யாழ்.மஸ்ற உத்தீன் பாடசாலையின் அதிபராக பதவி ஏற்கும் போது தளபாட பற்றாக்குறை இருந்தது. இவர் பெற்றோர்களிடம் பணம் திரட்டி தளபாட பற்றாக்குறையை நிவர்த்தி செய்தார். இவர் யாழ்ப்பாண பாராளுமன்ற உறுப்பினரது நிதி உதவியை பெற்று சாதாரண கட்டிடத்தை மாடிக் கட்டிடமாக கட்டுவித்து இடப்பற்றாக்குறையையும் 1986 இல் நிவர்த்தி செய்தார்.
1986 இல் முஸ்லிம் கலாசார அமைச்சினால் நடத்தப்பட்ட கனிஷ்ட பாடசாலைகளுக்கிடையிலான ஹிஜ்ரா போட்டியில் ஒஸ்மானியா ஆரம்ப பிரிவு, கதீஜா ஆரம்ப பிரிவு, மஸ்ற உத்தீன், மன்ப உல் உலூம் பாடசாலைகள் கலந்து கொண்டன. அதிபர் சிஹாபுத்தீன் அவர்களது அயராத முயற்சியால் முஸ்லிம் கலாசார அமைச்சினால் நடாத்திய 25 போட்டிகளுள் 23 போட்டிகளில் மஸ்ற உத்தீன் பாடசாலை மாணவர்கள் முதலிடம் பெற்றார்கள் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

 இக்கால கட்டத்தில்தான் இவர் ஹஜ் கடமையை நிறைவேற்றினார். இங்கு மர்ஹூம் சலாஹூத்தீன் மௌலவியுடன் நெருங்கிய நண்பரானார்.

சிறந்த பேச்சாளரும் மார்க்க அறிவும் நிறைந்த சிஹாபுத்தீன் தப்லீஹ் ஜமா அத்தில் இணைந்தும் செயற்பட்டார்.

சிஹாபுத்தீன் 1984 முதல் மரணிக்கும் வரை முஹம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜித் (புதுப்பள்ளி) நம்பிக்கையாளர் சபையில் ஓர் அங்கத்தவராகவும் விளங்கினார்.

மார்க்க அறிவு நிறைந்த சிஹாபுத்தீன் ஹாஜியார் பல முறை முஹம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜித்தில் ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்தியுள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்க விடயமாகும். 1990 ஒக்டோபர் வெளியேற்றத்தின் போது சின்ன முஹியித்தீன் ஜூம்ஆ மஸ்ஜித்திலும் இறுதி ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்தியதும் குறிப்பிடத்தக்க விடயமாகும்.

2009 இல் யாழ் முஸ்லிம்கள் மீள குடியேற ஆரம்பித்த போதும் முஹம்மதிய்யா ஜூம்ஆ மஸ்ஜித்தில் (புதுப்பள்ளி) மீள் குடியேற்றத்தை வலியுறுத்தி ஜூம்ஆ பிரசங்கம் நிகழ்த்தியுள்ளார்.

சிஹாபுத்தீன் ஹாஜியார் கொழும்பிற்கு இடம்பெயர்ந்ததும் 31 வருட அரச பணியிலிருந்து 31.12.1990 இல் அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார்.

ஓய்வு பெற்ற சிஹாபுத்தீன் ஹாஜியார் நீர்கொழும்பு – தீனியாவத்தையில் வசித்த காலத்தில், தற்போது அமைந்துள்ள மஸ்ஜித்திற்கான காணியை தனது இளைய மகனின்  (ரிஸா) உதவியுடன் வாங்கி அன்பளிப்பு செய்தது, யாழ்ப்பாணத்தில் சொத்துக்களை இழந்தும் இடம் பெயர்ந்தும் இவ்வாறான ஸதக்கத்துல் ஜாரியா ஆனது இவரது குடும்பத்தின் பெருந்தன்மையை காட்டுகிறது என்றால் மிகையாகாது.

நீர்கொழும்பு – தீனியாவத்தை மஸ்ஜித்தின் கீழ்ப் பகுதியை சிலரது பங்களிப்புடனும் மேல்ப் பகுதியை மகனது உதவியுடனும் சிஹாபுத்தீன் ஹாஜியார் கட்டி முடித்தார்.

இவர் சிறிது காலம் நோய்வாய்ப்பட்டு தனது 77 ஆவது வயதில் 21.04.2019 இல் வசித்து வந்த வெள்ளவத்தையிலுள்ள வீட்டில் இறையடி எய்தினார்.

மர்ஹூம் சிஹாபுத்தீன் அவர்களுக்கு அல்லாஹ் ஜென்னத்துல் பிர்தௌஸ் எனும் மேலான சொர்க்கத்தை அளிப்பானாக. ஆமீன்.

1 comment:

Powered by Blogger.