Header Ads



ஷஃபான் மாதமும், அதன் முக்கியத்துவம்.

   இறையச்சம், இறைவனுக்கு அடிபணிதல், தியாகம், இரக்க சிந்தனை, எதையும் தாங்கும் மனப்பக்குவம், உளக்கட்டுப்பாடு, மனவுறுதி, ஏழை எளியோரின் கஷ்ட நிலை உணர்தல் போன்றவைகள் பொதுவாக நோன்பு கற்றுத் தரும் மிகப் பெரும் பாடங்களாகும். சுருங்கக் கூறின், நோன்பு ஒரு முஸ்லிமை பூரண மனிதனாக்குகிறது. ரமழான் மாத நோன்பு, ஷவ்வால் மாத ஆறு நோன்புகள், வியாழன், திங்கள் ஆகிய வார நோன்பு, ஆஷுரா, அரபா மற்றும் ஷஃபான் மாத சுன்னத்தான நோன்புகள் மேற்கூறப்பட்ட உயரிய குறிக்கோள்களின் அடிப்படையில் எப்பொழுதும் வாழவே முஸ்லிம்களைப் பயிற்றுவிக்கின்றன. 

   இந்த வகையில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள ஏனைய மாதங்களில் கூடுதலாக நோன்பு நோற்ற ஒரு மாதமென்றால் அது ஷஃபான் மாதம்  என்பதை ஹதீஸ்களில் மூலம் நாம் காணலாம். இதன் மூலம் ஷஃபான் மாத நோன்பின் சிறப்பையும் அதன் மகத்துவத்தையும் விளங்கிக் கொள்ளலாம்.

    நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் ரமழானைத் தவிரவுள்ள வேறு எந்த மாதத்திலும் பூரணமாக நோன்பு நோற்றதை நான் கண்டதில்லை. அவ்வாறே ஷஃபான் மாதத்திலே தவிர வேறு எந்த மாதங்களிலும் அதிகமாக அவர்கள் நோன்பு நோற்றதையும் நான் பார்த்ததில்லை என அன்னை ஆயிஷா (ரலியல்லாஹு அன்ஹு ) அவர்கள் அறிவிக்கின்றார்கள். (நூல் : புகாரி, முஸ்லிம்)

    நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் ஷஃபான் மாதம் முழுவதும் நோன்பு நோற்பவர்களாக இருந்தார்கள். (ஸஹீஹ் முஸ்லிம்) 

     ஷஃபான் மாதத்தில் நோன்பு நோற்பதால் அம்மாதம் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களுக்கு மிக விருப்பத்திற்குரிய மாதங்களில் ஒன்றாக இருந்தது. மிகச் சில நாட்கள் தவிர மீதமுள்ள அனைத்து நாட்களிலும் அம்மாதத்தில் அவர்கள் நோன்பு நோற்பவர்களாகவே காணப்பட்டார்கள். எனினும், அவர்கள் அம்மாதம் முழுவதும் நோன்பு நோற்பார்கள். (நூல் : நஸஈ)

     ஷஃபான் மாதம் முழுவதும், அம்மாத்தின் அதிகமான நாட்களில் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அம்மாதத்தின் அனைத்து நாட்களிலும் நோன்பு நோற்காது அம்மாதத்தின் பெரும்பாலான நாட்களில் மாத்திரம் தான் நோற்றிருக்கின்றார்கள் என்பதை குறித்து ஹதீஸ்களை ஆழ்ந்து சிந்திக்கும் போது எவ்வித முரண்பாடுகளுமின்றி விளங்கிக் கொள்ளக் கூடியதாக உள்ளது.

     ஷஃபானில் அதிகம் நோன்பு நோற்கும்படி பணிக்கப்பட்டதன் ரகசியம் :

     உஸாமா (ரலியல்லாஹு அன்ஹு ) இந்த ரகசியம் பற்றி இவ்வாறு அறிவிக்கின்றார்கள் :

   நான் நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் ) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! ஷஃபான் மாதத்தில் நீங்கள் நோன்பு நோற்பதைப் போன்று ஏனைய மாதங்களில் நீங்கள் நோன்பு நோற்பதை நான் காணவில்லையே! என்று கேட்டேன். அதற்கவர்கள், அது ரஜபுக்கும், ரமழானுக்குமிடையில் வரும் மாதமாகும். இம்மாதம் பற்றி மக்கள் கவனயீனமாக இருக்கின்றார்கள். இம்மாதத்தில் அடியார்களுடைய அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகின்றன. இம்மாதத்தில் நோன்புடன் இருக்கும் நிலையில் எனது அமலும் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்பட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன் எனக் கூறினார்கள். (நூல் : அபுதாவூத், நஸஈ, ஸஹீஹ் இப்னு ஹுஸைமா).

     மக்கள் அலட்சியமாக  காட்டும் ஷஃபான் மாதம் சிறப்பு வாய்ந்தது. அடியார்கள் செய்யக் கூடிய அமல்கள் அம்மாதத்தில் அல்லாஹ்விடம் எடுத்துக் காட்டப்படுகிறது. அமல்கள் எடுத்துக் காட்டப்படும் பொழுது, நோன்புடன் இருந்தால் தன் சிறப்பு மென்மேலும் அதிகரிக்கிறது என மேற்படி ஹதீஸ் எமக்கு மிகத் தெளிவாக உணர்த்துகிறது.      அதுமட்டுமின்றி ஷஃபான் மாத நோன்பு ரமழான் மாத நோன்பிற்கான சிறந்ததோர் பயிற்சியாகவும் அமைகிறது. இயல்பிலேயே - திடீரென ஏற்படும் உடல், உள ரீதியான கஷ்டங்களைத் தாங்கிக் கொள்ளும் பக்குவம் மனித மனங்களுக்கு இல்லை. ஆனால், அதை முன் கூட்டியே ஒரு பயிற்சியாகக் கொண்டு வரும் போது சோர்வடையாது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் மனித மனங்களுக்கு இல்லை. ஆனால் அதை முன்கூட்டியே ஒரு பயிற்சியாககக் கொண்டு வரும் போது சோர்வடையாது ஏற்றுக் கொள்ளும் பக்குவம் உண்டாகிறது. எனவேதான் பசி, தாகம், இச்சை போன்றவற்றை அடக்கி ஷஃபான் மாத நோன்பை கஷ்டமாகக் கருதாது இலகுவாக நோற்று விடுவான். 

     ஷவ்வால் ஆறு நோன்புகள் நோற்பவன் அந்த வருடம் முழவதும் நோன்பு நோற்றவனைப் போலாவான். (ஸஹீஹ் முஸ்லிம்)

     வியாழன், திங்கள் ஆகிய இரு தினங்களிலும் அடியார்களின் அமல்களை அல்லாஹ்விடம் காட்டப்பட வேண்டுமென நபியவர்கள் விரும்பினார்கள். (நூல் : திர்மிதி)

    ஆஷுரா நோன்பு நோற்பவனுக்கு கடந்த வருடம், எதிர்வரும் வருடம் (என இரண்டு வருடங்களில்) பாவங்கள் மன்னிக்கப்படும். (நூல் : ஸஹீஹ் முஸ்லிம்)
    இத்தகைய உத்தரவாதங்கள் கூறப்பட்ட நோன்புகளை எமது முஸ்லிம்களின் அதிகமானோர் அலட்சியம் செய்கிறார்கள். கடந்த வருடம் ஷஃபானில் எம்முடன் இருந்தவர்களுல் அனேகர் நோயாளிகளாக மாறிவிட்டார்கள். இன்னும் பலர் மரணித்து விட்டார்கள். சந்தர்ப்பங்கள் அமைவதெல்லாம் அல்லாஹ்வின் அருளாகும். அதை சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

எனவே, நாம் ஷஃபானில்அதிகமாக நோன்புகள் நோற்று இறையன்பைப் பெறுவோமாக!!!!!

S.A. அப்துல் ஹலீம் ஷர்க்கி

No comments

Powered by Blogger.