Header Ads



மனதை விட்டு நீங்காத, மர்ஹூம் ஆதில் பாக்கீர் மாக்கார்

மர்ஹூம் ஆதில் பாக்கீர் மாக்காரின் ஞாபகார்த்தமாக களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் ஏற்பாடு செய்துள்ள மாபெரும் உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் இறுதிப் போட்டி நாளை 31ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பேருவளை கோல்டன் கேட் சர்வதேச பாடசாலை மைதானத்தில் நடைபெறுகிறது.

மரணத்தைத் தழுவும் மனிதர்கள் இவ்வுலகை விட்டு மறைந்தாலும் அவர்கள் வாழும் காலத்தில் செய்த சேவைகள், நற்பணிகள் மங்காப் புகழுடன் என்றும் மறைவதில்லை. அந்த வகையில் இளைஞர் சட்டத்தரணி மர்ஹூம் ஆதில் பாக்கிர் மாக்காரின் பணிகளும் என்றும் மறையாமல் நிலைத்திருக்கின்றன.

இளைஞர் ஆதில் தனது 26 ஆவது வயதில் காலமானார். 2016 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 12 ஆம் திகதி லண்டனில் அவர் காலமானார்.

தென் மாகாண முன்னாள் ஆளுநரும், முன்னாள் சபாநாயகருமான தேசமான்ய எம்.ஏ. பாக்கீர் மாக்காரின் பேரனும் முன்னாள் அமைச்சர் இம்தியாஸ் பாக்கீர் மாக்காரின் புதல்வருமான ஆதில் லண்டனின் ஸ்கூல்ஒப் எகொனமிக் இன் பொலிடிக்ஸ் என்ற பல்கலைக்கழகத்தில் சமகால அரசியல் பற்றி பட்டப்படிப்பை மேற்கொள்வதற்காக 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 15 ஆம் திகதி புறப்பட்டார்.

ஒரு வருட கால கற்கை நெறியை மேற்கொள்வதற்காகச் சென்ற இந்த இளைஞர் ஒரு மாத காலம் கல்வி கற்றுக் கொண்டிருந்த நிலையில் இவ்வுலகை விட்டுப் பிரிந்து விட்டார். கொழும்பு றோயல் கல்லூரி மற்றும் ஆசியா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்ற அவர், பாடசாலையில் சகல துறைகளிலும் சிறந்து விளங்கி பரிசில்களையும் பெற்றுக் கொண்டார். இவர் லண்டன் எல்.எல்.பி பட்டம் பெற்று இலங்கை சட்டக் கல்லூரியில் சட்டத்தரணியாக சத்தியப்பிரமாணம் செய்து கொண்டிருந்தார்.

பாடசாலைக் கல்வியை பூர்த்தி செய்த பின்னர் சமூக சேவையிலும் தனது தந்தையின் அரசியல் பணிகளிலும் ஒத்துழைத்தார். உலமாக்கள், புத்திஜீவிகள், சர்வமத தலைவர்கள், அரசியல்வாதிகள், பொதுமக்களுடன் மிகவும் இனிமையாக பழகி அவர்கள் அனைவரினதும் நன்மதிப்பை சிறுவயது முதல் பெற்றுக் கொண்டார். பலஸ்தீன ஒருமைப்பாட்டு இயக்கத்திற்கு இந்த இளைஞர் உரமூட்டினார். அதற்காக இளைஞர்கள் மத்தியில் பாரிய பிரசாரப் பணியில் ஈடுபட்டார்.

அகில இலங்கை முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனத்தின் வளர்ச்சியிலும் அதிக பங்களிப்புச் செய்தவர் மர்ஹூம் ஆதில் பாக்கீர்மாக்கார். ஐக்கிய தேசிய கட்சியின் வளர்ச்சியில் இளைஞர்களின் பங்களிப்பினையும் பெற்றுக் கொள்ள பணி செய்தவர். தேசிய ஐக்கியத்திற்கான பாக்கீர் மாக்கார் நிலையத்தின் முன்னேற்றத்திற்கு பாரிய பங்களிப்பை செய்தார்.

ஆதில் பாக்கீர் மாக்கார் தேசிய இளைஞர் சேவைகள் மன்றத்தின் பணிப்பாளர் சபை உறுப்பினராக தெரிவானார். ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உட்பட ஆளும் கட்சி, எதிர்க் கட்சி அரசியல்வாதிகளுடன் நல்ல தொடர்பு வைத்திருந்த இவர் எல்லா அரசியல்வாதிகளாலும் மதிக்கப்பட்டார்.

மர்ஹூம் ஆதில் பாக்கீர் மாக்காருக்கு ஐக்கிய நாடுகள் சபைக்கு செல்ல வாய்ப்புக் கிட்டியது. அங்கு வரலாற்று முக்கியத்துவம் மிக்க உரையாற்றினார்.இவரது திடீர் மரணம் ஈடு செய்ய முடியாத இழப்பாகும். ஆதில் பாக்கீர் மாக்கார் ஞாபகார்த்த வெற்றிக்கிண்ணத்திற்காக களுத்துறை மாவட்டத்தில் உள்ள உதைப்பந்தாட்ட கழகங்களுக்கிடையே உதைப்பந்தாட்ட சுற்றுப் போட்டியை களுத்துறை மாவட்ட முஸ்லிம் லீக் வாலிப முன்னணிகள் சம்மேளனம் நடத்துகிறது.இதன் இறுதிப்போட்டி 31ஆம் திகதி மாலை பேருவளை கோல்டன் கேட் சர்வதேச பாடசாலை விளையாட்டரங்கில் நடைபெறும். அமைச்சர் ஹரீன் பெர்ணாந்து பிரதம அதிதியாக கலந்து கொள்வார்.

பீ.எம். முக்தார்

1 comment:

  1. Inna Lillahi Wainna Ilaihi Rajioon. (from Allah we come and unto Him is our return). May Allah grant him Jennathul Firdous.

    ReplyDelete

Powered by Blogger.