Header Ads



சிறிலங்காவில் சூறையாடும் கடன், தந்திரத்தைக் கையாளும் சீனா – அமெரிக்க தளபதி குற்றச்சாட்டு

சிறிலங்கா உள்ளிட்ட சில நாடுகளில் சூறையாடும் கடன் தந்திரோபாயங்களை சீனா கையாளுகிறது என்று அமெரிக்காவின் கூட்டுப்படைகளின் தளபதி ஜெனரல் ஜோசெப் டன்போர்ட் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செனட்டின், ஆயுதப்படை சேவைகள் குழுவின் முன்பாக விளக்கமளித்த போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.

”சீனாவின் இந்த தந்திரோபயத்துக்கு சில உதாரணங்கள் உள்ளன.

சூறையாடும் சீன கடன்களைச் சுமக்க முடியாமல், ஆழ்கடல் துறைமுகத்தின் 70 வீத பங்குகளை சீனாவுக்கு 99 ஆண்டு குத்தகைக்கு சிறிலங்கா வழங்கியுள்ளது.

எல்லாக் காலத்திலும் நண்பன் என்று பாகிஸ்தான் கூறுகின்ற சீனாவிடம், குவடார் துறைமுகம் மற்றும் ஏனைய திட்டங்களுக்காக 10 பில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது.

கேந்திர முக்கியத்துவம் மிக்க குவடார் துறைமுகம் பலுசிஸ்தான் மாகாணத்தில், சீனாவினால் கட்டப்படுகிறது.

சீனாவிடம் கட்டுமான வேலைகளுக்காக 1.5 பில்லியன் டொலர் கடன்பட்டுள்ளது மாலைதீவு. இது மாலைதீவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 30 வீதமாகும்.

சூறையாடும் பொருளாதாரம் மூலம், தனது செல்வாக்கை விரிவுபடுத்தி, சீனா ஒரு அனைத்துல வலையமைப்பை வலுக்கட்டாயமாக கட்டியெழுப்பி வருகிறது.

சீனாவின் சூறையாடும் கடன் தந்திரோபாயங்களைக் கவனிக்காவிட்டால், அது அமெரிக்க இராணுவத்தில் தீவிரமான தாக்கங்களை ஏற்படுத்தும்.

சீனா தனது இராணுவத்தை விரிவுபடுத்தவதன் மூலமும் அண்டைநாடுகள் மீதான கட்டாய செயற்பாடுகளின் மூலமும், அதன் எல்லைகளை விரிவுபடுத்துகிறது.

இந்தோ – பசுபிக் பிராந்தியத்தில், குறிப்பாக தென் சீனக் கடலில், சீனாவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகள் அதிகரித்துள்ளமை அனைவரையும் கவலை கொள்ள வைக்கிறது” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments

Powered by Blogger.