Header Ads



ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் முடிவெடுக்கப்படவில்லை - மைத்திரி தடாலடி

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி சார்பிலோ அல்லது ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி சார்பிலோ ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் இன்னமும் முடிவெடுக்கப்படவில்லை. இரு கட்சிகளும் இது தொடர்பில் பேச்சு நடத்துகின்றனர். அந்தப் பேச்சு சுமுகமாகப் போகின்றது. இறுதியில் தீர்க்கமான முடிவெடுக்கப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தடாலடியாகத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக கோத்தபாய களமிறங்குவார் என்றும், அதற்கு மகிந்த ராஜபக்ச இணங்கியிருக்கின்றார் செய்திகள் வெளியாகியிருந்த நிலையில் மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பு கொழும்பு அரசியலில் புதிய குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தனித்துவத்தை இழந்துவிட்டு பொது எதிரணியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியுடன் கூட்டணி அமைப்பதற்குத் தாம் தயாரில்லை எனவும்,

மைத்திரிபால சிறிசேனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் எனவும் அந்தக் கட்சியின் பொதுச்செயலரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தயாசிறி ஜயசேகர கண்டியில் நேற்றுமுன்தினம் நடைபெற்ற கூட்டமொன்றில் அறிவித்திருந்தார்.

இந்த நிலையிலேயே, சர்வதேச ஊடகம் ஒன்றின் கேள்விக்குப் பதிலளிக்கும்போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-

"எந்தத் தேர்தலை முதலில் நடத்துவது என்பதில் இழுபறி தொடர்கின்றது. முதலில் அது தொடர்பில் முடிவெடுக்கப்படும். அதன் பின்னர் ஜனாதிபதி வேட்பாளர் யார் என்ற முடிவு எடுக்கப்பட்டு அறிவிக்கப்படும்.

எந்தத் தேர்தலையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி இணைந்து சந்திக்க வேண்டும் என்பதே இரு கட்சிகளிலும் உள்ள பெரும்பாலானவர்களின் கோரிக்கையாக உள்ளது.

இந்த விடயம் தொடர்பில் நாம் விரிவான கலந்துரையாடல்களை நடத்தி வருகின்றோம். அவசரப்பட்டு முடிவெடுக்கமாட்டோம்" - என்று குறிப்பிட்டுள்ளார்.

No comments

Powered by Blogger.