Header Ads



கபூரிய்யாவின் அமானிதச் சொத்து,, கொழும்பு சுலைமான் மருத்துவமனை காப்பாற்றப்படுமா..?

-தொகுப்பு: ஹெட்டி ரம்சி-

நூர்தீன் ஹாஜியார் அப்துல் கபூர் அவர்கள் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரியை ஆரம்பித்து, அதனை நடாத்திச் செல்வதற்கான முக்கிய வருமான வழியாக கிரேன்ட் பாஸ் வீதியில் காணியொன்றை கொள்வனவு செய்து, அங்கு தனியார் மருத்துவமனையொன்றை நிறுவியுள்ளார். கபூர் ஹாஜியார் தனது சொந்த மைத்துனரான டொக்டர் சுலைமானுடன் இணைந்து 1960ஆம் ஆண்டு காலப்பகுதியில் சுலைமான் மருத்துவமனை என்ற பெயரில் குறித்த காணியில் அந்தத் தனியார் மருத்துவமனையை நிர்மாணித்திருக்கிறார். இந்த மருத்துவமனையின் மூலம் பெறப்படுகின்ற வருமானத்தின் மூலம் கபூரிய்யா அரபுக் கல்லூரியை இயங்க வைப்பதே அவர்களது குறிக்கோளாகக் காணப்பட்டது.

தெளிவான உறுதிப்பத்திரத்துடன் கொழும்பு கிறேன்ட்பாஸ் பகுதியில் இருக்கும் மிகவும் பெறுமதி வாய்ந்த இந்த நம்பிக்கை பொறுப்பு சொத்து,  1918 ஆம் ஆண்டு நில அளவையாளர் எச்.ஜி. டயஸ் என்பவரால் அளவிடப்பட் டுள்ளதாக குறிக்கப்பட்டுள்ளது. 2125 என்ற இலக்கத்தையுடைய காணி உறுதிப் பத்திர தகவல்களின்படி இந்தக் காணியின் பரப்பளவு 2 ஏக்கர், ஒரு ரூட், 32.5 பேச்சஸ் அளவு கொண்டதாகும்.

1935 ஆண்டு நவம்பர் மாதம் 21 ஆம் திகதி நூர்தீன் ஹாஜியார் அப்துல் கபூர் அவர்களால் இது முஸ்லிம் சமூக கல்வி மேம்பாட்டுக்காக நம்பிக்கை பொறுப்பு சொத்தாக வழங்கப்பட்டுள்ளதாக காணி உறுதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதன் நம்பிக்கையாளர்களாக முஸ்லிம் சமூகத்தின் முன்னோடிகள் பலர் அன்று சட்டரீதியாக நியமனம் பெற்றிருந்தனர். இவர்களில் நூர்தீன் ஹாஜியார் அப்துல் கபூர், நூர்தீன் ஹாஜியார் அப்துல் கரீம், அப்துல் ஹமீத் முஹம்மத் இஸ்மாயில் மொஹம்மட் பளீல் அப்துல் கபூர், துவான் புர்ஹானுதீன் ஜாயா, மரிக்கார் பாவா முஹம்மத் சுலைமான், நூர்தீன் ஹாஜியார் முஹம்மத் அப்துல் கபூர், அப்துல் றஹீம் முஹம்மத் கவுஸ், அரிசி மரிக்கார் ஹாஜியார் முஹம்மத் சரீப், அஸீனா மரிக்கார் ஹாஜியார் ஹமீத் ஆகிய பத்து பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த காணி உறுதிப் பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

நம்பிக்கை பொறுப்பாளர்களுள் ஒருவர் மரணித்தாலும் அந்தக் குழுவில் அடுத்த நபர் யார் என்பதை அவர்கள் அறிவிக்க வேண்டும். ஆனால் இந்த நடைமுறை பல காலங்களாக நடைபெறவில்லை. நம்பிக்கைப் பொறுப்பாளர்கள் என்போர் வக்பு நியாய சபையில் பதிவு செய்யப்பட்டவர்களாக இருக்க வேண்டும். வக்பு சபைக்கூடாகவே இவர்களுக்கான உத்தியோகபூர்வ பொறுப்பு வழங்கப்பட வேண்டும். அது கூட வழங்கப்படவில்லை என்றும் இவர்கள் நம்பிக்கையாளர்களாக இருப்பதற்கு எந்தவித தகுதிகளும் இல்லை என்பதே கபூரிய்யா நிர்வாகக் குழு சார்பில் வாதிடும் சட்டத்தரணிகளின் கருத்தாக உள்ளது.

கபூரிய்யா மத்ரஸா உருவாக்கப்பட்ட துவக்க காலப்பகுதியில் மர்ஹூம் கபூர் ஹாஜியார் அவர்கள் இந்தச் சொத்துக்களை பரிபாலணம் செய்வதற்காக வேண்டி 10 பேர் கொண்ட நம்பிக்கை பொறுப்பு சபையொன்றையும் நியமித்தார். ஆரம்பத்தில் நவாஸ் கபூர் என்பவர் இவற்றுக்குப் பொறுப்பாக இருந்து நடுநிலையான முறையில் இவற்றை பரிபாலித்து வந்துள்ளார். ஆனால் இடைப்பட்ட காலத்தில் அதாவது 19 வருட காலமாக கபூரிய்யா மத்ரஸாவின் பரிபாலன நடவடிக்கைகள் கைவிடப்பட்ட நிலையிலேயே இருந்து வந்துள்ளது.

மத்ரஸாவின் இயக்கத்துக்குத் தேவையான பணம் நம்பிக்கை பொறுப்பாளர்களால் வழங்கப்படவில்லை. மத்ரஸாவுக்கு எவ்வித உள்நாட்டு வெளிநாட்டு உதவிகளும் கிடைக்காத நிலையில் மத்ரஸாவின் இயங்குநிலைக்கு இது பெரும் பிரச்சினையாக அமைந்ததால் கபூரிய்யா நிர்வாகக் குழு சுலைமான் மருத்துவமனையை நாடிச் சென்றுள்ளது.

மத்ரஸாவுக்கு கொடுக்கப்பட வேண்டிய தொகை ஏன் நிறுத்தப்பட்டிருக்கிறது என்ற கேள்வி அங்கு முன்வைக்கப்பட்ட போது மத்ரஸாவுக்கான பணத்தொகை நம்பிக்கை பொறுப்பாளர்களிடம் கொடுக்கப்படுகிறதே அது உங்களுக்கு கிடைப்பதில்லையா? என்ற பதிலை அவர்கள் கொடுக்க, அதன் பின்னர், மத்ரஸாவுக்கு வர வேண்டிய பணத் தொகை நம்பிக்கை பொறுப்பாளர்களுக்கு சென்றுகொண்டுள்ளது என்ற தகவலை மத்ரஸா நிர்வாகம் அறிந்து கொண்டுள்ளது.  

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் வக்கு சபையிடம் முறையிடப்பட்டுள்ளது. நம்பிக்கைப் பொறுப்புச் சபையில் உள்ளவர்கள் திருடர்கள் என சமூகத்துக்கு காண்டிபிக்கும் நோக்கம் எமக்கில்லை என்றும், கபூரிய்யாவுக்கான காணி வக்பு சொத்து என்பதை எல்லோரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், கபூரிய்யா மதரஸாவுக்கு சுலைமான் மருத்துவமனையிலிருந்து வரக்கூடிய வருமானம் தடங்கலின்றி கிடைக்க வேண்டும் என்றும், அதைக் கொண்டு மத்ரஸா இன்னுமின்னும் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும் என்றுமே கபூரிய்யா நிர்வாகக் குழு வக்பு சபையிடம் முறையிட்டுள்ளது.

இதன் பின்னர் வக்பு சபை நம்பிக்கை பொறுப்பாளர்களை அழைத்துப் பேசிய வேளையில் ஆரம்பத்தில் அவர்கள் மாதாந்தம் 2 லட்சம் ரூபாவை வழங்க உடன்பட்டு, பின்னர் அந்தத் தொகை 4 லட்சமாக, நான்கரை லட்சமாக, ஐந்து லட்சமாக  அதிகரித்து இறுதியாக கடந்த வருடம் ஏழரை லட்சம் என்று வழங்கப்பட்டதாக நிர்வாகக் குழு தெரிவித்தது.

இவர்கள் கபூரிய்யாவுக்கான பணத்தை கொடுக்க ஆரம்பித்த வேளையில் இருந்து கபூரிய்யா மத்ரஸாவுக்கான காணியை தனியார் காணியாக காண்பிக்க வேண்டிய தேவை அவர்களுக்குள் இருந்து வந்திருப்பதாக கபூரிய்யா நிர்வாகம் தெரிவிக்கின்ற தகவல்களிலிருந்து அறிய முடிகின்றது. வக்பு சொத்தாக அல்லாமல் இதனை அவர்களது குடும்பச் சொத்தாக ஊர்ஜிதப்படுத்துவதற்கான போலி ஆவணங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதாகவும் இவர்கள் குற்றம் சுமத்துகின்றனர். இதன் உடனடி வெளிப்பாடாக சுலைமான் மருத்துவனை உடைக்கப்பட்டுள்ளது. அந்தக் காணி நோலிமிட் ஆடை நிறுவனத்திற்கு குத்தகைக்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்நடவடிக்கை கடந்த வருடத்திலேயே மேற்கொள்ளப்பட்டுள்ளது. மருத்துவமனையும் உடைக்கப்பட்டு பிறகு கபூரிய்யாவுக்கு கொடுக்கப்பட்டு வந்த பணத்தொகையையும் படிப்படியாக குறைக்கப்பட்டுள்ளது என்று கபூரிய்யா நிர்வாகம் தெரிவிக்கின்றது. இவை தவிர 30 வருடங்களுக்கு மேலாக மஹரகமவில் உள்ள கபூரியா அரபுக் கல்லூரியின் பதினேழரை ஏக்கர் காணிக்கும் வரி செலுத்தி வந்ததாகவும் இந்தக் காணியை அவர்களது குடும்பத்திலுள்ள நான்கைந்து பேர்களின் பெயரை இட்டு ஒரு தனியார் காணியாக அதன் பெயர் மாற்றப்பட்டுள்ளது என்றும் கபூரிய்யா நிர்வாகக் குழுவினர் குற்றம் சாட்டுகின்றனர்.

இத்தகைய காரணங்களின் அடிப்படையில் இனிமேலும் பொறுமை காக்க முடியாமல் கபூரிய்யா நிர்வாகம் இந்தச் சொத்துக்களை வக்பு சொத்து என்பதாக உறுதிப்படுத்துவதற்காக வேண்டி வக்கு நியாய சபையில் வழக்குப் பதிவு செய்தது. இவ்வழக்கில் நான்கு அமர்வுகள் தற்போது முடிந்துள்ளது. சுலைமான் மருத்துவமனை அமையப்பெற்றிருந்த காணியை குத்தகை அடிப்படையில் வாங்கியிருக்கும் நோலிமிட் ஆடை நிறுவனமும் வக்பு நியாய சபைக்கு அழைக்கப்பட்டு இது வக்பு சொத்தென்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர்கள் சட்டத்தரணிகள் சகிதம் ஆஜராகி குத்தகை உடன்படிக்கையை இரத்துச் செய்துள்ளனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

இது அவர்களுக்கு மிகப் பெரும் இழப்பு என்பதால் கபூரிய்யா நிர்வாகத்தை பலி வாங்கும் முயற்சிகளை தொடராக மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். கபூரிய்யா காணி திடீரென ஒரு நாள் தீப்பற்ற ஆரம்பித்துள்ளது. அதனைத் தொடர்ந்து மறுதினம் நான்கைந்து பேர் மத்ரஸாவுக்குள் நுழைந்து கற்கள் வீசி நீங்கள் இங்கு இருக்க வேண்டாம் என சிங்கள பாஷைகளாலும் திட்டிச் சென்றிருக்கிறார்கள். இதன் பின்னர் வலுக்கட்டாயமான முறையில் மத்ரஸா வளாகத்தில் காவலாளியொருவரையும் கூலிக்கு அமர்த்தியிருக்கிறார்கள். இப்படியான நடவடிக்கைகளை மேற்கொண்டு எப்படியேனும் கபூரிய்யா மத்ரஸாவை பூட்டிவிட வேண்டும் என்பதே அவர்களது உள்நோக்கம் என்றும் மத்ரஸாவின் இயக்கத்தை முடிக்க அவர்கள் போட்ட முடிச்க்களை ஒவ்வொன்றாக அவிழ்த்திருப்பதாகவும் நிர்வாகக் குழு தெரிவிக்கின்றது.

இது மாத்திரமல்லாமல் சவூதி அரேபியாவுடன் தொடர்புகொண்டு மத்ரஸாவுக்கான புதியதொரு கட்டிடத்தை நிர்மாணிப்பதற்கு 14 மில்லியன் ரூபா பெறப்பட்டதாகவும், அதற்கான காசோலை தூதரகத்திற்கூடாக வழங்கப்பட்டதாகவும், மத்ரஸாவின் பெயரில் காசோலை வழங்கப்படுவதால் நம்பிக்கை பொறுப்பு சபையை சேர்ந்தவர்களும் அழைக்கப்பட்டார்கள் என்றும், ஆனால் அவர்கள் அந்த அழைப்பை ஏற்கவில்லை என்றும் நிர்வாகம் தெரிவிக்கின்றது. அத்துடன், 14 மில்லியன் ரூபா பணம் கபூரிய்யா மத்ரஸா கணக்கில் இடப்பட்டிருப்பதாகத் தெரிவிக்கும் நிர்வாகக் குழு புதிய கட்டிடத்தை அமைப்பதற்கு நம்பிக்கையாளர்கள் விடுவதில்லை என்றும் தெரிவிக்கின்றது.

கொழும்பு கிறேன்ட்பாஸ் வீதியிலுள்ள சுலைமான் மருத்துவமனை இயங்கி வந்த காணி, முஸ்லிம் சமூகத்தின் கல்வி நலன்களுக்காக அன்றைய முஸ்லிம் தலைவர்களால் நம்பிக்கை பொறுப்பாக, அமானிதமாக வழங்கப்பட்ட பெறுமதிமிக்க ஒரு சொத்தாகும். சுலைமான் மருத்துவமனை இலங்கையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் மிகவும் பழமைவாய்ந்த ஒன்றாகும். இந்த மருத்துவமனை அண்மையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டதால் மூடப்பட்டது. கடந்த காலங்களில் மாதாந்த வாடகையாக ஒரு சிறிய தொகையே சுலைமான் நிர்வாகத்தினால் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.

சுலைமான் மருத்துவமனை மூடப்பட்டதன் பின்னர் குறித்த காணி நம்பிக்கை பொறுப்பு சொத்து என்று கருத்திற் கொள்ளப்படாமல் நோலிமிட் ஆடை வர்த்தக நிறுவனத்துக்கு கைமாற்றப்பட்டிருக்கிறது. யாருக்கும் விற்பனை செய்ய முடியாத, கைமாற்ற முடியாத பெறுமதியான இந்த சொத்தின் கைமாறல் தொடர்பாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது  சர்ச்சைகள் எழ ஆரம்பித்திருக்கிறது.

வக்பு மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு சொத்துக்களை பராமரிக்கும் இலங்கை வக்பு சபைக்குக் கூட இந்த பெறுமதியான சொத்தின் கைமாற்றம் தொடர்பாக எந்தத் தகவல்களும் வழங்கப்படவில்லை என்றும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இந்தக் காணியிலிருந்து கிடைக்கும் வருமானம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் கல்வித் தேவைகளுக்கு பயன்படுத்தப்பட வேண்டும் என்பதே இதை சமூகத்திற்கு வழங்கிய எமது முன்னோடி மூதாதையர்களின் இலக்காக இருந்திருக்கிறது.

இந்த காணியின் உறுதிப்பத்திரத்தில் இது தொடர்பாக உறுதியாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. முஸ்லிம் சமூகத்தின் கல்வித் தேவைகளுக்காக அமானிதமாக முன்னோர்களால் வழங்கப்பட்ட இந்த பெறுமதி மிக்க சொத்து தொடர்பாக முஸ்லிம் சமூகத் தலைமைகள் அவதானம் செலுத்த வேண்டியுள்ளனர்.

நம்பிக்கை பொறுப்பு சொத்தாக எமக்குக் கிடைத்த இந்த காணியிலிருந்து கிடைக்கும் வருமானம் முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்தப் பட வேண்டும் என்று கட்டாயமாக குறிக்கப்பட்டு இருந்தும், கடந்த காலங்களில் நாம் அந்த இலக்கை அடைந்தோமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.

ஒரு நல்ல நோக்கத்தில், அமானிதமாக எமது மூதாதையர்களினால் எமக்குக் கிடைக்கப் பெற்ற இந்தச் சொத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு வழங்கும் பொறுப்பு எமக்கிருக்கிறது. அந்தப் பொறுப்பிலிருந்து விலகி பொடுபோக்காக இருப்பதற்கு யாருக்கும் உரிமையில்லை. இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமான இந்த நம்பிக்கை பொறுப்பு சொத்து தொடர்பான பிரச்சினையில் உலமாக்கள், அரசியல் தலைமைகள், புத்தி ஜீவிகள் தலையிட வேண்டும்.

சுலைமான் மருத்துவமனைக் காணி கபூரிய்யாவுக்கு வக்பு செய்யப்பட்ட சொத்து என்பது காணி உறுதிப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அந்தச் சொத்தின் நம்பிக்கையாளர்களாக நியமிக்கப்பட்டிருப்பவர்கள் அதனை முழுமையாக தங்களது உரிமைச்சொத்தாக அபகரிக்க முயல்வது வேலியே பயிரை மேய்வதற்கு ஒப்பான செயலாகும்.

1 comment:

  1. Not only these places but many waqf properties have been taken by many people..
    There is no system to manage this ..Islamic groups are busy in internal fights...they do not have any system to monitor all this and make them productive to wider community and humanity?
    Each group care about themselves and their colleges and mosques....
    So sad our situations

    ReplyDelete

Powered by Blogger.