Header Ads



A/L பரீட்சை எழுதியவர்களே, இதையும் வாசியுங்கள்

A/L Result, பரீட்சை முடிவுகள் உங்கள் வாழ்க்கையைத் தீர்மாணிப்பதில்லை, பில்கேட்சைப் பாருங்கள், டெண்டுல்கரைப் பாருங்கள் என்று ஆறுதலுக்கு கட்டுரை வேண்டுமென்றால் எழுதலாம்...

ஆனால் இலங்கைச் சூழலில் ஒரு மாணவனின் வாழ்க்கையில் மிக முக்கியமான Turning Point இந்த A/L Result என்பதை யாராலும் மறுக்க முடியாது.

இலங்கையில் ஒரு மாணவனுக்கு, ஒரு அங்கீகாரம் பெற்ற கல்வித் தகைமையைப் பெற்றுக் கொள்ள இருக்கும் மிக இலகுவான சந்தர்ப்பம் உயர்தரத்தில் சித்தி அடைந்து ஒரு தேசிய பல்கலைக்கழகத்துக்குச் சென்று ஒரு பட்டப்படிப்பை நிறைவு செய்து கொள்வதுதான்.

இதைத் தவிர நிறைய வாய்ப்புகள் வெளிவாரியாக இருந்தாலும் மிகச் சிறந்த தெரிவு உயர்தரத்தில்சி த்தியடைந்து ஒரு தேசிய பல்கலைகழகத்துக்கு செல்வதுதான்.

சில சந்தர்ப்பங்களில் O/L இல் கூட சரியாக பாசாகாதவர்கள் வாழ்க்கையில் நல்ல நிலையில் இருப்பார்கள், படிக்க வேண்டிய படிப்பெல்லாம் படித்தவர்கள் வாழ்க்கையில் கஷ்டப் பட்டுக் கொண்டு இருப்பார்கள்.

இப்படியான ஒரு சில உதாரணங்கள் மட்டுமே நம் வட்டத்தில் இருக்கும் ஆனால் சரியான கல்வித்தகைமை இல்லாமல் தனது வாழ்க்கையின் திசை எது என்பதை தீர்மானிக்க முடியாமல் நூற்றுக்கணக்கான இளைஞர், யுவதிகள் நம் ஊர்களில் இருக்கிறார்கள்.

இவர்களிடம் கேட்டால்தான் தெரியும்,  உயர்தரப் பரீட்சையை கோட்டைவிட்டது  அவர்களது வாழ்க்கையில் எவ்வளவு தாக்கம் செலுத்தி இருக்கிறது என்பதை.

உயர்தரம் முடிந்ததும் வெளிநாடு செல்லலாம்,

ஏதாவது Course செய்யலாம் என்று இப்போதே  சிலர் தீர்மானித்து இருக்கலாம்.

இந்த தீர்மாணம் எவ்வளவு பிழையானது என்பது...

அங்கீகாரமில்லாத ஒரு தனியார் நிறுவனத்தில் பணத்தையும், காலத்தையும் கரைத்துவிட்டு திரும்பிப் பார்க்கையில் புரியும்  அல்லது மத்திய கிழக்கு நாடொன்றுக்குச் சென்று  வருடக்கணக்கில் கஷ்டப்பட்டு கையில் பணமும்  இல்லாமல் நாட்டில் தொழிலும் இல்லாமல் தலையில் முடியும் இல்லாமல் வந்து சேரும்போது புரியும்.

வாப்பாவின் கடையை செய்வதாக இருந்தாலும்,  நாநாவோடு வெளிநாடு செல்வதாக இருந்தாலும் நாம் படித்து இருக்க வேண்டும். எமக்கென்று ஒரு கல்வித்தகைமை இருக்க வேண்டும்.

அது எப்போதும் எமக்கு மரியாதையையும் நம்பிக்கையையும் பெற்றுத்தரும்.

ஒரு மாணவனுக்கு பாடசாலை மூலம் மூன்று முறை உயர்தரப் பரீட்ச்சைக்கு தோற்றும் வாய்ப்பு இருக்கிறது இந்த மூன்று தடவைகளையேனும் பொறுமையோடு முயற்சி செய்து ஒரு சரியான கல்வித் தகைமையைப் பெற்றுக் கொண்டால்  தனது வாழ்க்கையின் திசையை மிக நேர்த்தியாகஇறைவன் நாட்டத்தோடு அமைத்துக் கொள்ள முடியும்

அப்படி இல்லாமல் அவசரமாக சம்பாதிக்க வேண்டும், சாதிக்க வேண்டும் என்று A/L முடிந்த  கையோடு கிளம்புபவர்கள்.  சுவரில் மோதிய றப்பர் பந்தைப்போல எங்கயாவது அடிபட்டு இருந்த இடத்துக்கே வந்துசேர நேரிடும்.

-Safwan Basheer-

No comments

Powered by Blogger.