Header Ads



இலங்கைக்கு தேன்நிலவுக்கு வந்தவர்களுக்கு, இப்படியும் நடந்தது - திட்டித்தீர்க்கும் நண்பர்கள்

தேன்நிலவுக்காக இலங்கை வந்த பிரிட்டன் தம்பதிகள், ‘ரம்’மின் மயக்கத்தினால் கடற்கரை ஓரத்தில் அழகாக அமைந்திருந்த மரத்தால் செய்யப்பட்ட விடுதியை 3 ஆண்டுகளுக்கு ஒத்திக்கு எடுத்துள்ளனர்.

பிரிட்டனைச் சேர்ந்த மார்க் லீ (Mark lee), ஜினா லையான்ஸ் (Gina Lyons), கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் இலங்கைக்கு தேன் நிலவுக்காக வந்திருந்தனர். கடற்கரை ஓரத்தில் அமைந்திருந்த விடுதியில் இவர்கள் தங்கியிருந்தனர். வயதான ஒரு தம்பதி அந்த விடுதியை நிர்வகித்துவந்துள்ளனர். மார்க் - ஜினா இருவருடனும் ஊழியர்களும் நட்புடன் பழக ஆரம்பித்துள்ளனர். அன்று மாலை மார்க்- ஜினா இருவரும் கடற்கரையின் அழகை ரசித்தவாறு அந்த விடுதியில் மது அருந்தத் தொடங்கியுள்ளனர்.

நள்ளிரவு ஆகியும் இவர்கள் தொடர்ந்து மது அருந்தியுள்ளனர். அந்த விடுதியின் ஒத்திக் காலம் முடிவடைந்த தகவல் இவர்களுக்குத் தெரியவந்துள்ளது. மது மயக்கத்தில் இருவரும் அந்த விடுதியை ஒத்திக்கு எடுக்க முடிவுசெய்துள்ளனர். அடுத்த நாள் காலை, இருவரும் உள்ளூரைச் சேர்ந்த இருவருடன் சென்று தங்களின் விருப்பத்தை விடுதியின் உரிமையாளரிடம் தெரிவித்துள்ளனர். ஒரு நீண்ட பேரத்துக்குப் பிறகு, 3 வருட குத்தகைக்கு 30,000 பவுண்ட் என ஒத்துக்கொண்டனர். இதையடுத்து 15,000 பவுண்ட் தொகையை முதல்கட்டமாக வழங்குவதாகவும், மீதித் தொகையை மார்ச் 2019-ல் தருவதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஒத்திகைக்கான சட்ட ரீதியிலான செலவும் மற்றும் புனரமைத்தலுக்கான செலவும் அவர்களின் கையை மீறிச் சென்றுள்ளது. இலங்கை வந்துசென்ற மூன்று மாதத்தில் ஜினா கர்ப்பமாகியுள்ளார். அப்போதுதான் எவ்வளவு பெரிய தவற்றைச் செய்துவிட்டோம் என இருவரும் உணர்ந்துள்ளனர். 

தேன்நிலவு இதுகுறித்து ஜினா ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்துள்ள பேட்டியில், ‘கடற்கரை ஓரத்தில் இருவரும் ரம் அருந்திக்கொண்டிருந்தோம். 12 கோப்பைகளைத் தாண்டி சென்றுகொண்டிருந்தது.  அந்த விடுதியின் குத்தகைக் காலம் முடிவதை அறிந்ததால், அதை நாங்கள் எடுக்க முடிவுசெய்தோம். விலையும் மலிவாக இருந்தது. அதனால், அந்த முடிவுக்கு வந்தோம். மதுபோதையில் அது ஒரு சிறந்த யோசனையாக இருந்தது. உரிமையாளரிடம் பேசி பேரத்தை முடித்தோம். இரண்டு தவணைகளில் பணத்தைக் கொடுக்க ஒப்புக்கொண்டோம். மூன்று மாதத்தில் நான் கர்ப்பம் அடைந்துவிட்டேன். அதன்பின்னர் பல்வேறு சிரமங்கள். சட்ட ரீதியிலான உரிமையை மாற்றுவது, விடுதியைப் புனரமைப்பது என கைமீறிச் சென்றுவிட்டது. இப்போது நாங்கள் சிறிய அளவிலான ஒரு ப்ளாட்டில் குடியிருக்கிறோம். உறவினர்கள் மற்றும் நண்பர்கள், உங்களைப் போன்ற முட்டாளைப் பார்த்ததில்லை என்கின்றனர். திருமணத்துக்காக நிறைய செலவு செய்திருந்தோம். இன்னும் சில மாதங்களில் குழந்தை பிறக்கப்போகிறது'' எனத் தெரிவித்திருந்தார்.

மார்க் லீ - ஜினா லையான்ஸ், தங்களது  விடுதிக்கு LuckyBeachTanqalle என்று பெயரிட்டுள்ளனர். கடந்த ஜூலை மாதம் இது புனரமைப்புக்காக மூடப்பட்டது. அந்தப் பணிகள் நிறைவடைந்ததும் ஆகஸ்ட் மாதம் விடுதி திறக்கப்பட்டது.

No comments

Powered by Blogger.