Header Ads



நன்மைக்காக மட்டுமா, அல் குர்ஆனை ஓதுவது...?

உம்மு உரைபா உமைரா நூருல் ஹம்ஸா 
முஸ்லிம் மகளிர் அரபுக் கல்லூரி - கள்எளிய.

-சில நிமிடங்கள் ஒதுக்கி கட்டாயம் வாசிக்கவும்-

நன்மை கிடைக்க வேண்டும் என்ற ஒரே நோக்கத்திற்காக,மட்டுமே பெரும்பாலான முஸ்லிம்கள் குர்ஆனை ஓதுகின்றனர்.   அல் குர்ஆனின்  பயன்பாடுகள் குறித்த போதிய அளவு அறிவின்மையே இந்நிலைக்கான பிரதான காரணமாகும். 

ஒரு முஸ்லிம் எந்த நோக்கங்களுக்காக அல் குர்ஆனை ஓதுகின்றானோ, அந்த நோக்கங்களை நிச்சயம் அடைந்து கொள்வான். "செயல்கள் யாவும் எண்ணங்களைப் பொறுத்தே அமைகின்றன. நிச்சயமாக ஒவ்வொரு மனிதனும் தான் எண்ணியதைப் பெற்றுக் கொள்வான்" என்பது நபி மொழி.

அல் குர்ஆன் முழு  மனித சமுதாயத்திற்குமான வாழ்க்கைத் திட்டமாகும்.

எண்ணங்கள்தான்  செயல்களின் தராதரத்தை தீர்மானிக்கின்றன  என்றவகையில் , அல் குர்ஆனை ஓதுவதன் நோக்கங்கள், எண்ணங்கள் எவ்வாறு அமைய வேண்டும் என்பதனை இங்கு ஞாபகப் படுத்திக் கொள்ள விரும்புகின்றேன்.

 அறிவைப் பெற்று, அதன் படி செயலாற்றுவதற்காக அல் குர்ஆனை ஓதுதல் .

 இறைவனின் நேர்வழி காட்டல் கிடைக்க வேண்டும் என்ற எண்ணத்தில்  அல் குர்ஆனை  ஓதுதல் . 

  அல்லாஹ்வின் பாதுகாப்புக் கிடைக்க வேண்டும் என்பதற்காக அல் குர்ஆனை ஓதுதல் .

 உடல், உள நோய்களுக்கான நோய் நிவாரணத்தை வேண்டியவனாக அல் குர்ஆனை  ஓதுதல் .

 அல்லாஹு தஆலா என்னை இருளிலிருந்து வெளியேற்றி ஒளியை நோக்கிச் செலுத்த வேண்டும் என்ற நோக்கில் அல் குர்ஆனை ஓதுதல்  .
 கல் நெஞ்ஜையும் நெகிழ்விக்கக் கூடிய வல்லமை கொண்டதுதான் அல்குர்ஆன்,  அதிலே உள அமைதி உள்ளது. உள்ளத்தை  உயிர்ப்பித்து, அதனை வளப்படுத்தவும் அல் குர்ஆனினால் முடியும். இது போன்ற  அருள்களை வேண்டி அல் குர்ஆனை ஓதுதல் .

 அல் குர்ஆன் அல்லாஹ்வினால் வழங்கப்படும் மகத்தானதொரு விருந்து என்ற எண்ணத்துடன்  அல் குர்ஆனை ஓதுதல் .

 இறை சிந்தனையை அலட்சியம் செய்வோரின் பட்டியலில் எழுதப்படாமல், அல்லாஹ்வை அதிகம் நினைவு கூறுவோர் பட்டியலில் இடம் பெற வேண்டும் என்ற எண்ணத்துடன் அல் குர்ஆனை ஓதுதல் .

  அல்லாஹ் மீதான நம்பிக்கையும் உறுதியும் அதிகரிக்க வேண்டும் எனும் எண்ணத்தில் அல் குர்ஆனை ஓதுதல் .

 "அல் குர்ஆனை ஓதுங்கள்" என்ற இறை கட்டளைக்கு பதிலளிக்கின்றேன் என்ற  எண்ணத்துடன் அல் குர்ஆனை ஓதுதல் .

 "ஒவ்வொரு எழுத்துக்கும் பத்து நன்மைகள் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்  அல் குர்ஆனை ஓதுதல் .

" அல்லாஹ் தான்நாடியோருக்கு இரட்டிப்பாகவும் வழங்குகின்றான்" 

 மறுமையிலே அல் குர்ஆனின் சிபாரிசைப் பெற்றுக் கொள்ளும் நோக்குடன் அல் குர்ஆனை  ஓதுதல் .

 நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் உபதேசத்தைப் பின்பற்றுகின்றேன் என்ற எண்ணத்தில் அல் குர்ஆனை  ஓதுதல்.

 அல்குர்ஆன் மூலம் இறைவன்  என்னையும் இந்த சமுதாயத்தையும் உயர்த்த வேண்டும் என்ற  எதிர்பார்ப்புடன் ஓதுதல் . 

 சுவனத்திலே அந்தஸ்த்துக்களால் உயர வேண்டும்,   கன்னியத்தின் கிரீடம் அணிவிக்கப்பட வேண்டும்,  உலகிலே அணிந்திராத ஆடைகள்    எமது பெற்றோருக்கு அணிவிக்கப்பட வேண்டும் எனும் எதிர்பார்ப்புக்களுடன் அல்குர்ஆனை ஓதுதல் .

 அல்லாஹ்வுடன் உரையாடுவதன் மூலம் அவனை நெறுங்குகின்றேன் எனும் எண்ணத்தில் அல் குர்ஆனை ஓதுதல் .

 "  அல்லாஹ்வின் சிறப்புக்குரிய இறை நேசர்கள் "  பட்டியலில் இடம்பெற வேண்டும் என்ற எண்ணத்துடன்  அல் குர்னை ஓதுதல் .
 அல் குர்ஆனைத் திறன்பட ஓதுபவர் சங்கைமிக்க, நல்ல வானவர்களுடன் இருப்பார் என்ற எண்ணத்துடன் அல் குர்ஆனை ஓதுதல் .

 அல் குர்ஆன் அல்லாஹ்வின் தண்டனையிலிருந்தும், நரக நெருப்பிலிருந்தும் பாதூகாக்கக் கூடிய பாதுகாப்புக் கவசம் என்ற எண்ணத்துடன் அல் குர்ஆனை ஓதுதல்   .

 அல்லாஹ்வின் கண்கானிப்பில் இருப்பதற்காக வேண்டி அல் குர்ஆனை ஓதுதல் . 

 தள்ளாடும் வயது வரை உயிர் வாழ்ந்து, பிறருக்குச் சுமையாக இருக்கும் நிலைமை ஏற்படாமல் இருக்க அல் குர்ஆனை ஓதுதல் .

 அல்குர்ஆன் எனக்கு எதிராக அன்றி  எனக்கு சார்பாக மறுமையிலே வாதாட வேண்டும் என்பதற்காக அல் குர்ஆனை ஓதுதல் .

 'அல் குர்ஆனைப் பார்ப்பதும் வணக்கமாகும்' என்ற எண்ணத்துடன் அல் குர்ஆனை  ஓதுதல் .

 "என் மீது அமைதி இறங்குவதுடன் இறையருளும் என்னைச் சூழ்ந்து கொள்ள வேண்டும் ,  அல்லாஹ் மலக்குகளிடம் என்னைப் பற்றிச் சொல்ல வேண்டும்" என்ற எண்ணத்துடன் அல் குர்ஆனை ஓதுதல் .

 அல்லாஹ்வின்  அருட் கொடைகளைப் பெற்றுக் கொள்ளும் எண்ணத்தில்   அல் குர்ஆனை ஓதுதல் .

 என்னுள் நறுமணம்  வீச  வேண்டும் என்ற எண்ணத்தோடு அல் குர்ஆனை ஓதுதல் .

 இவ்வுலகில் வழி தவறி, மறுமையில் துர்ப்பாக்கிய நிலைக்கு ஆளாகாமல் இருப்பதற்காக அல்குர்ஆனை ஓதுதல் .

 'அல் குர்ஆன் மூலம் அல்லாஹ் கவலைகளை நீக்குவான்.  மனக் கஷ்டங்களையும் துக்கங்களையும் போக்குவான்' என்ற எண்ணத்துடன் அல்குர்ஆனை ஓதுதல் .

 'அல் குர்ஆனானது கப்ரிலே எனது நெருங்கிய நண்பனாக இருக்கும், அஸ்ஸிராதுல் முஸ்தகீம் பாலத்தைக் கடப்பதற்கு எனக்கு வெளிச்சத்தைத் தரும்,  இவ்வுலகில்  என்னை சரியான பாதையில் செலுத்தக் கூடிய நேர்வழி காட்டியாகவும், மறுமையில் சுவனத்திற்கு  ஓட்டிச் செல்லக் கூடிய சாரதியாகவும் இருக்கும்' என்ற நம்பிக்கையுடன் அல் குர்ஆனை ஓதுதல் .

 ' அல்லாஹ் என்னைப் பயிற்றுவித்து,  நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் குணங்களால் என்னையும் அவன் பண் படுத்த வேண்டும்' என்ற எண்ணத்துடன் அல் குர்ஆனை ஓதுதல்.

 'அசத்தியத்தில் என்னை ஈடுபடுத்தாமல், சத்தியத்தில் மாத்திரமே என்னை ஈடுபடுத்திக் கொள்வதற்காக '  அல் குர்ஆனை ஓதுதல்.

 'உள்ளம், மனோ இச்சை ,  ஷைத்தானுடன் போராடுகின்றேன்' என்ற எண்ணத்துடன் அல் குர்ஆனை ஓதுதல் .

 'எனக்கும் இறை நிராகரிப்பாளர்களுக்குமிடையில் மறுமையில் அல்லாஹ் ஒரு திரையை ஏற்படுத்த வேண்டும் என்ற எதிர்ப்பார்ப்புடன் அல்  குர்ஆனை ஓதுதல் .

 *வாருங்கள்! நாம் அல் குர்ஆனிய மனிதர்களாக இருப்போம்.* 

 *இது , உத்தரவாதப்படுத்தப்பட்ட, இலாபகரமான அல்லாஹ்வுடனான வியாபாரமாகும்* 

இவ்வியாபாரத்திலே அல்லாஹ் அவனது முடிவடையாத  அருள்களை தாராளமாகத் வழங்குகின்றான். 

 *" நினைவு படுத்துங்கள், நினைவு படுத்துதல் இறை விசுவாசிகளுக்குப் பயனளிக்கின்றது".*

  *அல்லாஹ் என்னையும் உங்களையும் அல் குர்ஆனிய மனிதர்களாக ஆக்குவானாக....

1 comment:

Powered by Blogger.