Header Ads



லதீபுக்கு தடை போடும் விஷமிகள் - பின்புலத்தில் மகிந்தவின் விசுவாசிகள்..?

-Tw-

இலங்கையின் அரசியல் வரலாற்றில் முதற்தடவையாக இரு பிரதான கட்சிகள் இணைந்து தேசிய அரசாங்கத்தை முன்னெடுத்து வருகின்றன.

எனினும் அரசாங்கத்திலும், கட்சியிலும் உள்ளக பழிவாங்கல்களும், குழி பறிப்புகளும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றன. இதன் பின்புலத்தில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் விசுவாசிகள் தீவிரமாக செயற்பட்டு வருகின்றனர்.

தற்போது சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பெயருக்கு களங்கும் ஏற்படுத்தும் வகையில், அவருக்கு நெருக்கமான சிலரினால் சதி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அண்மையில் நாட்டிலுள்ள பிரபுக்களின் பாதுகாப்புக்கு பொறுப்பாக பொலிஸ் விசேட அதிரடிபடையின் புதிய கமாண்டோவாக, சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர் லதீப் நியமிக்கப்பட்டிருந்தார்.

சுயாதீன பொலிஸ் ஆணைக்குழுவினால் இந்த நியமனம் கடந்த ஒன்பதாம் திகதி வழங்கப்பட்டது. எனினும் அவர் தனது பணிகளை முன்னெடுக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. வலுவான அரசியல் அழுத்தம் காரணமாக இந்த தடை ஏற்பட்டது.

பிரபு பாதுகாப்பிற்கு பொறுப்பான இலங்கையின் புகழ்பெற்ற அதிகாரியாக கருதப்படும் பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப், சிறப்பு அதிரடி படையின் பிரதானி பதவியை ஏற்றுக் கொள்வதற்கு தடை ஏற்படுத்தும் வகையில், அவர் சேவை செய்யும் பொலிஸ் பயிற்சி பிரிவில் அவரை விடுவிக்காமையே காரணம் என பொலிஸ் மா அதிபர் தெரிவித்துள்ளார்.

இந்த திட்டத்தை ஜனாதிபதியை சுற்றியிருக்கும் விஷமிகளினால் மேற்கொள்ளப்படுவதாக இதற்கு முன்னர் தகவல்கள் வெளியாகி இருந்தன.

எனினும் ஜனாதிபதியின் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் செயற்படும் அந்த விஷமி அடையாளம் காணப்பட்டுள்ளார்.

அவர் வேறு யாரும் அல்ல ஜனாதிபதியின் தற்போதைய பாதுகாப்பிற்கு பொறுப்பாக உள்ள சிறப்பு அதிரடிப்படை பிரதானி என அறிந்து கொள்ள முடிந்துள்ளன.

அவர் ஜனாதிபதியின் பெயரை விற்று “இது ஜனாதிபதி உத்தரவு” என கூறி தனது நோக்கத்தை நிறைவேற்றி கொள்ள முயற்சிப்பதாக தெரியவந்துள்ளது.

சுயாதீன ஆணைக்குழு செயற்படுத்தப்பட்டுள்ள போதிலும், பல அரசாங்க அதிகாரிகள் அது தொடர்பில் எவ்வித விழிப்புணர்வும் இன்றி தொடர்ந்து ராஜபக்ச ஆட்சியின் போது “ஜனாதிபதி கூறினார்” என கூறி செயற்படும் நிலை காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

தனது தனிப்பட்ட நோக்கத்திற்காக பிரபுகள் அனைவரினதும் உயிரை பணயம் வைப்பது குறித்து ஜனாதிபதி உட்பட ஏனைய பிரபுக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டும்.

அண்மையில் பாப்பாண்டவர் இலங்கைக்கு வந்த சந்தர்ப்பத்தில் அவருக்கு பாதுகாப்பு ஏற்பாடு செய்ததும் பிரதி பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லதீப் என்பது குறிப்பிடத்தக்கது.

அது மாத்திரமின்றி ஐக்கிய நாடுகள் அமைப்பினால் பிரபுக்களின் பாதுகாப்பு தொடர்பில் இலங்கையில் தெரிவு செய்யப்பட்டவரும் அவராகும்.

அவ்வாறான ஒருவர் இலங்கை பிரபுவின் பாதுகாப்பிற்கு பொறுப்பாக சிறப்பு அதிரடி படையின் பிரதானியாக்குவதற்கு தடை ஏற்படுத்தப்படுகிறது. இதனடிப்படையில் ஏதோவொரு பாரதூரமான சம்பவங்கள் இடம்பெறவுள்ளதாக ஊகித்துக் கொள்ள முடிகிறது.

இதனடிப்படையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட அனைவரும் மிகவும் எச்சரிக்கையாக இருப்பது காலத்தின் கட்டாயம் என எச்சரிக்கப்படுகிறது.

2

-Tw-

இலங்கையின் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்பை வலுவற்றதாக்கி, கொலைகளை செய்யும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்கொள்ள பாரிய சதித்திட்டம் ஒன்று முன்னெடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதில் பிரதான அங்கமாக தற்போது முக்கிய பிரமுகர்களுக்கு பாதுகாப்பு வழங்கி வரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரின் ஆற்றலை குறைக்கும் சதித்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புதிய கட்டளை அதிகரியாக சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர்.லத்தீபை நியமிக்குமாறு சுயாதீன பொலிஸ் ஆணைக்குழு பரிந்துரை செய்திருந்தது.

எனினும் அவருக்கு அந்த பதவியை வழங்காது, ராஜபக்சவினரின் ஆதரவாளர் ஒருவருக்கு வழங்கும் முயற்சி காரணமாக இந்த சதித்திட்டம் அம்பலமாகியுள்ளது.

ஜனாதிபதிக்கு அருகில் உள்ள சிலரே இந்த சதித்திட்டத்தில் ஈடுபட்டுள்ளதால், ஆபத்து பல மடங்காக அதிகரித்துள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் லத்தீப், பயங்கரவாதிகளின் தாக்குதல்களில் இருந்து முக்கிய பிரமுகர்களை பாதுகாத்தன் மூலம் சர்வதேச ரீதியில் புகழ் பெற்றவராவார்.

அவுஸ்திரேலியாவில் நடந்த ஒலிம்பிக் போட்டிகளின் போது பயங்கரவாத தாக்குதல் நடந்தால், அதனை தடுப்பதற்காக திட்டங்களை முன்வைப்பது தொடர்பில் நடைபெற்ற சர்வதேச பாதுகாப்பு பிரதானிகளின் கருத்தரங்கில் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் முதல் தர திட்டத்தை முன்வைத்திருந்தார். இதன் மூலம் அமெரிக்க பாதுகாப்பு பிரதானிகளை தோற்கடித்துள்ளார்.

இதனால், இப்படியான அதிகாரி ஒருவரை இலங்கையின் முக்கிய பிரமுகர்களின் பாதுகாப்புக்கு பொறுப்பான அதிகாரியாக நியமிப்பது, இலங்கையின் முக்கிய பிரமுகர்களின் உயர் பாதுகாப்புக்கு சாதமானதாக இருக்குமேயன்றி பாதகமானதாக இருக்காது என அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இதனை கவனத்தில் கொண்டே லத்தீப்பை அதிரடிப்படையின் கட்டளை அதிகாரியாக நியமிக்குமாறு பரிந்துரைத்துள்ளது. இவர் கடந்த 9ஆம் திகதி பதவியேற்கவிருந்தார். எனினும் பொலிஸ் மா அதிபருக்கு கொடுக்கப்படும் அழுத்தம் காரணமாக அவர் பதவியேற்பது இதுவரை தடுக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி செயலகத்தில் இருக்கும் எவரேனும் அழுத்தம் கொடுத்து இதனை தடுப்பார்களாயின் அவர்களின் நோக்கம் இலங்கையின் முக்கிய பிரமுகர் அல்லது பிரமுகர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவதே வேறொன்றும் இல்லை.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சுற்றியிருக்கும் மகிந்த ராஜபக்சவாதிகளின் நோக்கங்கள் இரகசியமானவைகளாக இருக்கக் கூடாது. இதற்கு இடமளிக்காமல் இருப்பது ஜனாதிபதியின் பொறுப்பாகும்.

அவ்வாறில்லாது போனால், தனக்கு தானே புதைக்குழியை வெட்டிக்கொண்டது போல் ஆகிவிடும் எனவும் அவதானிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.ஆர். லத்தீப், ராஜபக்சவினரின் கடும் கோபத்திற்கு உள்ளான அதிகாரி என்பது நேர்மையான அதிகாரி என பொலிஸ் தலைமையக தகவல்கள் கூறுகின்றன.

1 comment:

  1. மிக அவசரமாக முடிவு எடுக்க வேண்டிய விடயமே ஜனாதிபதி என்ன செய்து கொண்டு இருக்கிறார்

    ReplyDelete

Powered by Blogger.