Header Ads



பொதுபல சேனாவே மஹிந்தவை தோற்கடித்தது..!

-எம்.எஸ்.எம்.ஐயூப்-

இலங்கையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை அறிமுகப்படுத்தப்பட்டதன் பின்னர் நடத்தப்பட்ட ஜனாதிபதித் தேர்தல்களின் போது அதிகாரத்தில் இருந்த ஜனாதிபதி தோல்வியடைந்த முதலாவது தேர்தலும் ஒரே தேர்தலும்??? இம் முறை நடைபெற்ற தேர்தலேயாகும். அதேவேளை ஒருவர் மூன்று முறை ஜனாதிபதியாவதற்கு எடுத்த முதலாவது முயற்சியே தோல்வியில் முடிந்துள்ளது.

முதலாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தன 1982ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மட்டுமே போட்டியிட்டார். 1988ஆம் ஆண்டு அவரது கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக ரணசிங்க பிரேமதாசவே போட்டியிட்டார்.

ஜனாதிபதி பிரேமதாச பதவியில் இருக்கும் போது மற்றுமொரு ஜனாதிபதித் தேர்தலை சந்திக்க கிடைக்கவில்லை. அதற்கிடையில் அவர், 1993ஆம் ஆண்டு புலிகளின் தற்கொலைக்குண்டுத் தாக்குதலால் கொல்லப்பட்டார். அவரது பதவிக் காலத்தின் மீதமான காலத்துக்கு நாடாளுமன்றத்தால் தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி டீ.பி. விஜேதுங்கவும் பதவியில் இருக்கும் போது மீண்டும் போட்டியிடவில்லை. அதற்கு பதிலாக ஐ.தே.க. சார்பில் 1994ஆம் ஆண்டு காமினி திஸாநாயக்கவே போட்டியிட்டார்.

1994ஆம் ஆண்டு பதவிக்கு வந்த ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பதவியில் இருக்கும் போது போட்டியிட்ட 1999 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெற்றார். அதன் பின்னர் மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு பதவிக்கு வந்தார். அவர் 2010ஆம் ஆண்டு தேர்தலில் வெற்றி பெற்ற போதிலும் இம் முறை தோல்வியடைந்தார். எனவே, பதவியில் இருக்கும் நிலையில் தோல்வியடைந்த முதலாவது ஜனாதிபதி ராஜபக்ஷவே.

ராஜபக்ஷவின் தோல்விக்கு அவரது ஆட்சியின் மீது, அவரது கட்சியைச் சேர்ந்த எம்.பிக்களும் மாகாண சபை உறுப்பினர்களும் மற்றும் பொது மக்களும் வெறுப்பு கொண்டமை மட்டும் காரணமாகவில்லை. ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைச் சேர்ந்த வாக்காளர்கள் பலர் எதிர்க் கட்சியின் பொது வேட்பாளராகவும் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளராகவும் போட்டியிட்ட மைத்திரிபால சிறிசேனவை ஆதரித்தமை அதற்கு முக்கிய காரணமாகியது.  

ரணில் விக்கிரமசிங்க எதிர்க் கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு இருந்தால் அந்த ஸ்ரீ.ல.சு.க. காரர்கள் அவருக்கு வாக்களித்து இருக்க மாட்டார்கள்.

எனவே, ராஜபக்ஷ வெற்றி பெற்றிருப்பார். அந்த வகையில் எதிர்க் கட்சிகள் ஒரு ஸ்ரீ.ல.சு.க. காரரை போட்டியில் நிறுத்தியமை சரியான உத்தியாக அமைந்தது. ஐ.தே.க.வுக்கு வேட்பாளர் ஒருவரை தேடிக் கொள்ள முடியாமல் போய்விட்டதாக ஆளும் கட்சியினர் கேலி செய்யும் போதும் எதிர்க் கட்சியினர் தமது முடிவில் திடமாக இருந்தமையின் அர்த்தம் அதுவே.

மஹிந்த ராஜபக்ஷ இம்முறை தேர்தல் பிரசாரத்தின் ஆரம்பத்திலிருந்தே கொள்கைப் போராட்டத்தில் தோல்வியடைந்திருந்தார். அவர் கொள்கை என்று எதனையும் முன்வைக்கவில்லை என்றே கூற வேண்டும்.

எதிர்க் கட்சிகள் தமது பொது வேட்பாளரை பிரகடனப்படுத்திய உடன் ஆளும் கட்சியினர் அதனை ஒரு வெளிநாட்டு சதி என்றே கூறினர். இது கொள்கைப் போராட்;டம் அல்ல. ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றால் அதில் ஒரு வேட்பாளர் மட்டும் போட்டியிடுவதில்லை. அவ்வாறிருக்க தமக்கு எதிராக போட்டியிட ஒருவர் முன்வந்தவுடன் அதனை வெளிநாட்டு சதியாக வர்ணிக்க முடியுமா?

ஆளும் கட்சியினர் இவ்வாறு வெளிநாட்டு சதி, நாட்டுப் பிரிவினைக்கான சதி, இரகசிய ஒப்பந்தம் என்றெல்;லாம் கூறிக் கொண்டிருக்கும் போது எதிர்க்கட்சிகள் ஆளும் கட்சிக்கு எதிராக பாரதூரமான குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். குடும்ப ஆதிக்கம், பாரிய ஊழல்கள் மற்றும் அமைச்சர்களை பொம்மைகளாக்கியமை அவ்வாறான சில குற்றச்சாட்டுக்களாகும்.

ஆளும் கட்சியினர் இவற்றுக்கு முறையாக பதிலளிக்க தவறிவிட்டனர். குடும்ப ஆதிக்கம் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளும் கட்சியினர் பதிலளிக்கவே இல்லை. ஊழல் பற்றிய குற்றச்சாட்டுக்களை உறுதிப்படுத்தும் வகையிலேயே ஆளும் கட்சியினர் கருத்து வெளியிட்டனர். அரசாங்கத்தை விட்டுப் போவோரின் 'ஃபைல்கள்' தம்மிடம் இருப்பதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கூறியமை அதற்கு ஓர் உதாரணமாகும். ஆளும் கட்சியினர் போதியளவு சுரண்டியிருப்பதால் அவர்கள் இனிமேல் சுரண்ட மாட்டார்கள் என்றும் எதிர்க் கட்சியினர் பதவிக்கு வந்தால் ஆரம்பத்திலிருந்தே சுரண்ட ஆரம்பிப்பார்கள் என்றும் அமைச்சர் மஹிந்த அமரவீர வெளியிட்டு இருந்த கருத்து மற்றொரு உதாரணமாகும்.

ஜனாதிபதி, அமைச்சர்களை பொம்மைகளாக்கியிருக்கிறார் என்ற குற்றச்சாட்டை எந்தவொரு அமைச்சரும் மறுக்கவில்லை. சிலர் தமக்கும் பல்வேறு பிரச்சினைகள் இருப்பதாகவும் ஆனால், தாம் அரசாங்கத்தை விட்டுப் போவதில்லை என்றும் கூறி அக் குற்றச்சாட்டை உறுதிப்படுத்தினர்.

தேர்தல் பிரசார காலத்தின் ஆரம்பத்திலிருந்தே தமிழ், முஸ்லிம் மற்றும் கிறிஸ்தவ சிறுபான்மை சமூகங்கள் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளரை ஆதரிக்கும் தெளிவான அறிகுறிகள் தென்பட்டன. மலையக தமிழ் மக்களின் நிலை மட்டும் அப்போது தெளிவாக தெரியவில்லை.

ஆனால், அவர்களிலும் பெரும்பாலானோர் மைத்திரிபாலவையே அதரித்துள்ளார்கள் என்பது இப்போது தெளிவாகிறது.

வடக்கு, கிழக்கு வாழ் தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் தமிழீழ விடுதலை புலிகள் அமைப்பினருக்கும் அரச படையினருக்கும் இடையிலான போர் நடைபெற்ற காலத்திலிருந்தே மஹிந்த ராஜபக்ஷவை வெறுத்து வந்தனர். அந்த வெறுப்பு எந்தளவு என்றால் 2010ஆம் ஆண்டு போர் முடிவடைந்த உடன் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது அந்த தமிழ் மக்கள், மஹிந்த ராஜபக்ஷவை எதிர்க்க வேண்டும் என்பதற்காகவே போரின் போது இராணுவத்துக்கு தலைமை தாங்கிய இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு ஆதரவு வழங்கினர்.

போர் முடிவடைந்ததன் காரணமாக ஆகக் கூடுதலான நன்மையை அடைந்தவர்கள் அந்த தமிழ் மக்களே. ஆனால், அந்த மக்களை அரசியல் ரீதியாக வென்றெடுக்க அரசாங்கம் தவறிவிட்டது.

முஸ்லிம் மக்களைப் பொறுத்தவரையில் அவர்கள் 2012ஆம் ஆண்டு வரை இரு பிரதான கட்சிகளையும் ஆதரித்து வந்தனர். ஆனால,; அதன் பின்னர் ஏற்பட்ட 'கிரீஸ் யக்கா' பிரச்சினையும் முஸ்லிம்களுக்கு எதிரான பிரசாரங்கள் மற்றும் வன்செயல்களும் முஸ்லிம்கள் அரசாங்கத்தை ஒட்டுமொத்தமாக வெறுக்கச் செய்தன. இந்தப் பிரச்சினைகளின் போது முஸ்லிம்கள் அரசாங்கத்திடம் வேறெதனையும் எதிர்பார்க்கவில்லை, நாட்டின் சட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்றே அவர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால,; அரசாங்கம் அதனை செய்யவில்லை. சட்டப்படி நடவடிக்கை எடுப்பது ஒரு புறமிருக்க அரசாங்கத்தின் சில முக்கிய புள்ளிகள் இந்த பிரசாரங்கள் மற்றும் வன்முறைகளின் பின்னால் இருக்கிறார்களோ என்று சந்தேகிக்கும் அளவில் சம்பவங்கள் இடம்பெற்றன. எனவே ஒட்டுமொத்தமாகவே முஸ்லிம்கள் அரசாங்கத்தை விட்டு ஒதுங்கிக்கொள்ளும் நிலை ஏற்பட்டது.

முஸ்லிம்கள் கடந்த முறையைப் போல் இம்முறையும் பிரிந்து வாக்களித்து இருந்தால் நிச்சயமாக மஹிந்த வெற்றி பெற்றிருப்பார். எனவே, அவரை தோற்கடித்ததன் பெருமை பொது பல சேனா, ராவணா பலய மற்றும் சிஹல ராவய போன்ற பௌத்த தீவிரவாத அமைப்புக்களையே சாரும்.

இதே கால கட்டத்தில் பள்ளிவாசல்கள் மீது போலவே பல கிறிஸ்தவ ஆலயங்கள் மீதும் தாக்குதல்கள் இடம்பெற்றன. அப்போதும் கிறிஸ்தவர்கள் எதிர்பார்த்த நியாயம் அரசாங்கத்திடம் கிடைக்கவில்லை. எனவே அவர்களும் அரசாங்கத்தை விட்டு விலக ஆரம்பித்தனர். இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது ஆளும் கட்சியைச் சேர்ந்த கிறிஸ்தவத் தலைவர்கள் தேர்தல் பிரசாரத்தில் அவ்வளவாக ஈடுபடவும் இல்லை.

வழமையாக மலையக மக்கள், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் வழிகாட்டலிலேயே அநேகமான தேர்தல்களின் போது வாக்களிப்பர். ஊவா மாகாண சபைத் தேர்தலின் போதும் அது ஓரளவுக்கு காணக்கூடியதாக இருந்தது. ஆனால், இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது அந்த நிலைமை வெகுவாக மாறியிருப்பதையே காணக்கூடியதாக இருந்தது.

ஊவா மாகாண சபைத் தேர்தலின் போது மலையக மக்கள் தம்மை ஆதரித்ததற்கு ஆதாரமாக பசறை தொகுதியைவே ஆளும் கட்சியினர் எடுத்துக் காட்டினர். ஆனால், அந்தத் தொகுதியிலும் ஜனாதிபதித் தேர்தலின் போது மைத்திரிபால சிறிசேனவே வெற்றி பெற்றிருந்தார். இவ்வாறு இ.தொ.கா.வின் நிலைப்பாட்டுக்கு மாறாக மலையக மக்கள் நடந்து கொள்வதற்கு தமிழ் ஊடகங்களே அடிப்படைக் காரணமாகும்.

வழமையாக கொழும்பு, கண்டி மற்றம் காலி ஆகிய பிரதான நகரங்களில் வாழும் பெரும்பாலான மக்கள் ஐ.தே.க.வையே அதரிப்பர். ஆனால் இம்முறை சிறு நகரங்களின் நிலைமையும் மாறியிருந்தது. அவையும் பொது எதிரணியை ஆதரிக்கும் நிலை ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.

'அபிவிருத்தி' என்பது மஹிந்த ராஜபக்ஷ தமது தேர்தல் பிரசாத்தின் போது பாவித்த பிரதான துருப்புச் சீட்டுக்களில் ஒன்றாகும். அதற்கு ஆதாரமாக அவர்கள் அதிவேக பெருந்தெருக்களையும் கொழும்பில் அமைக்கப்பட்ட ஆர்கேட் போன்ற இடங்களையுமே எடுத்துக் காட்டினர்.

ஆனால், இவற்றால் சாதாரண மக்கள் பயன்பெறுவதில்லை என்பதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. அல்லது விளங்கிக்கொண்டாலும் அவற்றைக் காட்டி அம் மக்களையும் ஏமாற்ற முயற்சித்தார்களோ தெரியாது. இறுதியில் அவற்றால் பயன்பெற்ற நகர்புற உயர் மத்திய மற்றும் உயர் வகுப்பினரும் ஆளும் கட்சியை கைவிட்டு விட்டனர். கீழ் மட்டத்தினரிடம் அவை எவ்வித தாக்கத்தை ஏற்படுத்தவும் இல்லை.

இறுதியில் தமிழர்களும் முஸ்லிம்களும் கிறிஸ்தவர்களும் நகரப்புற மக்களும் கிராமப்புற சிங்கள பௌத்த மக்களில் சிலரும் சேர்ந்து மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்கினர். கிராமப்புற சிங்கள பௌத்த மக்களில் பெரும்பாலானோர் மட்டுமே மஹிந்தவை ஆதரித்தனர்.

போர் வெற்றி பற்றிய கோஷமும் இம்முறை அவ்வளவாக எடுபடவில்லை. மஹிந்த ராஜபக்ஷ ஆரம்பத்தில் போரிட தயங்கியதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கூறியதை ஆளும் கட்சியினர் மறுக்கவும் வில்லை. போருக்காக மஹிந்த என்ன செய்தார் பொன்சேகா என்ன செய்தார் என்று சிங்கள மக்களே கேட்கும் அளவுக்கு நிலைமை மாறியது.

மைத்திரிபாலவை ஆதரித்த சமூகக் குழுக்களில் ஒன்றேனும் மறுபுறம் திரும்பியிருந்தால் இம் முறையும் மஹிந்தவின் வெற்றி நிச்சயமாகும். எனவே, அந்த அத்தனை குழுக்களும் நாம் தான் மைத்திரிபாலவின் வெற்றிக்கான காரணம் என்று கூறலாம். அதனை எவரும் மறுக்கவும் முடியாது. அதேவேளை 2010ஆம் ஆண்டு தாம் இழந்த பேரம் பேசும் சக்தியை சிறுபான்மையிர் பெற்றுக்கொண்டுள்ளனர் என்பதும் தெளிவாக தெரிகிறது.

இலங்கையில் இருப்பதைப் போன்ற நிறைவேற்ற அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை இருக்கும் நாடொன்றில் அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதியை தேர்தல் மூலம் பதவி நீக்கம் செய்வதானது ஒருவித கனவேயன்றி யதார்த்தத்துக்கு அவ்வளவு சமீபமானதல்ல. ஏனெனில் அதிகாரத்தில் உள்ள ஜனாதிபதி அனைத்து அரச அதிகாரங்களையும் அரச வளங்களையும் தேர்தலுக்காக உபயோகிப்பார். நாடாளுமன்ற உறுப்பினர்களின் அதிகாரங்கள் மற்றும் அவர்களது கட்டுப்பாட்டில் உள்ள அரச வளங்கள் ஆகியவற்றையும் உபயோகிப்பார்.

அரச ஊடகங்களை மட்டுமன்றி ஏனைய ஊடகங்களையும் அச்சுறுத்தல், மிரட்டல், இலஞ்சம் ஆகியவற்றின் மூலம் தமக்கு சாதகமாக்கிக்கொள்வார். ஏனைய வேட்பாளர்கள் இவை எதுவும் இல்லாமல் போட்டியிட வேண்டியுள்ளது.  

அவற்றை மட்டுமல்லாது இம்முறை ஜனாதிபதித் தேர்தலின் போது ஆளும் கட்சியினர் தமிழர்களை பற்றியும் முஸ்லிம்களை பற்றியும் சிங்கள மக்கள் மனதில் அச்சத்தை ஊட்டி சிங்கள மக்களின் வாக்குகளை கொள்ளையடிக்க முயற்சித்தது. ஆளும் கட்சியின் தேர்தல் விளம்பரங்கள் பல அவதூறானதாகவே அமைந்து இருந்தன. நாட்டில் பல இடங்களில் எதிர்க் கட்சியினருக்கு கூட்டம் நடத்தவும் இடங்களை ஒதுக்கிக் கொள்வது பெரும் பிரச்சினையாக இருந்தது. பல இடங்களில் எதிர்க் கட்சியினர் தாக்கப்பட்டனர். அவர்களது கூட்ட மேடைகள் மற்றம் சோடனைகள் அடித்து நொறுக்கப்பட்டன.

எனவே, மைத்திரிபாலவின் வெற்றியானது அசாதாரணமானதொன்று என்றே கூற வேண்டும். இந்த விடயத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவும் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவும் ஆற்றிய பங்கு மிகப் பெரியதாகும்.

தற்போது புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பெரும் சவாலை எதிர்நோக்கியிருக்கிறார். அவரது 100 நாள் வேலைத் திட்டத்தை நிறைவேற்றுவதே அந்த சவாலாகும். குறிப்பாக நிறைவேற்று ஜனாதிபதி முறையில் மாற்றத்தை கொண்டு வர அவருக்கு நாடாளுமன்றத்தில் மூன்றில் இரண்டு வாக்குப் பலம் வேண்டும். அதனை அவர் எவ்வாறு தேடிக் கொள்ளப் போகிறார் என்பது இன்னமும் தெளிவாகவில்லை.

அவ்வாறு நிறைவேற்று ஜனாதிபதி முறையை இரத்துச் செய்யாது அதன் சில அதிகாரங்களை மட்டும் இரத்துச் செய்தாலும் அது ஐ.தே.க.வுக்கு ஏமாற்றமாகவே அமையும். ஏனெனில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமராக வரவே ரணில் விகிகரமசிங்க மைத்திரிபாலவை ஜனாதிபதியாக்க விரும்பினார்.      

No comments

Powered by Blogger.