May 09, 2013

நாங்கள் காபிர்களாகி விட்டோமா..? ஆமீனா ஆஸாத் சாலி


உதவாவிட்டாலும் பரவாயில்லை உபத்திரவம் தர வேண்டாம். அமீனா அஸாத்சாலி வேண்டுகோள்

அன்பு நெஞ்சங்களுக்கு, 
அஸ்ஸலாமு அலைக்கும்.

மிகவும் மன வேதனையுடனும், கவலையுடனும் இந்த செய்தியை உங்கள் முன் சமர்ப்பிக்கின்றேன். என்னுடைய தந்தையின் விடுதலைக்காக நானும் எனது தாயும் கங்காராம விகாரையில் மலர்த்தட்டு ஏந்தி வழிபாட்டில் ஈடுபட்டதாகவும் நாங்கள் காபிர்களாகிவிட்டதாகவும், தற்போது பழிச்சொல்லை சுமந்தவர்களாக நாம் இந்த சமூகத்தின் முன் நிற்கின்றோம். நீங்கள் பார்த்த காட்சிகள் உண்மை. அதை நான் மறுக்கவில்லை. ஆனால் அதன் பின்னணி என்ன என்பது பலருக்குத் தெரியாது. நடந்த தவறுக்காக யாரிடம் நாம் பாவமன்னிப்புக் கோரவேண்டுமோ அதை அன்றிரவே நானும் எனது தாயும் அழுது புலம்பி மன்றாடி இதனால் எனது தந்தையின் விடுதலைக்கான மக்கள் ஆதரவில் எந்தப் பாதிப்போ அல்லது அவரின் விடுதலையில் எந்தத் தாமதமோ ஏற்பட்டு விடக்கூடாது என்றும் எல்லாம் வல்ல ஏக இறைவனிடம் மன்றாடிவிட்டோம். 

ஆனால் விமர்சனங்கள் வெளிவந்தபோது தான் எமது சமூகத்தில் எனது தந்தையையும் எமது குடும்பத்தையும் வெளுத்துக் கட்டுவதற்கென்றே ஒரு கூட்டம் தயார் நிலையில் அதற்கான ஒரு சந்தர்ப்பத்துக்காக காத்திருந்திருக்கின்றது என்பதையும் புரிந்து கொண்டேன். இஸ்லாத்தின் மீது இவர்களுக்குள்ள பற்றுதலும், நெருக்கமும் அவர்களின் இஸ்லாமிய உணர்வும். அந்த உணர்வால் உந்தப்பட்டு அவர்கள் பிரயோகித்திருந்த வார்த்தைப் பிரயோகங்களும்.. அப்பப்பா... என்னை நெகிழச் செய்துவிட்டன. 

உண்மையிலேயே என் தந்தை மீதுள்ள பாசத்தால் உந்தப்பட்டவர்களும் என்னைக் கண்டித்தார்கள். நான் சிறியவள். என் தந்தையை உண்மையிலேயே நேசிக்கும், அவர்களுக்கு அதற்கான முழு உரிமையும் உள்ளது. உண்மையில் என்ன நடந்தது என்பது அவர்களுக்குத் தெரியும். இருந்தாலும் அது தெரியாத பலருக்காக இதை கூறுகின்றேன். எனக்கேற்பட்ட இக்கட்டான நிலையை விளக்க முயல்கின்றேனே தவிர நிச்சயம் நான் அதை எந்த வகையிலும் நியாயப்படுத்தவில்லை. அந்த சம்பவத்தால் என்மீது பாவக்கறைகள் படிந்திருக்குமானால் நிச்சயம் சிறியவளாகிய நான் என்னை அறியாமல் செய்த அந்த தவறுக்காக எல்லாம் வல்ல அருளாளன், கருணை மிக்க இறைவன் என்னை நிச்சயம் மன்னிப்பான் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை எனக்குள்ளது.

அன்றைய தினம் மாலையில் தெவட்டகஹ பள்ளிவாசலில் ஒரு பிரார்த்தனை நிகழ்வும் கங்காராம விகாரையில் ஒரு கூட்டமும் இடம்பெறுவதாகத் தான் எமக்கு அறிவிக்கப்பட்டது. நானும் என்னுடைய தாயும் எமது வாழ்க்கையில் ஒரு விகாரைக்குள் பிரவேசித்தது இதுவே முதற்தடவையாகும். இது சத்தியம். அங்கு என்ன நடக்கும், அவர்களின் கலாசாரம், வழிபாட்டு முறை எதையும் அறிந்தவர்களாக நாம் இருக்கவில்லை. என்னுடைய தந்தைக்கு இந்த விடயங்கள் நன்கு தெரியும். நம் மத்தியில் இது போல் பூத்தட்டு ஏந்தித் திரிந்த பல தலைவர்கள் இருந்தார்கள் இன்னமும் இருக்கின்றார்கள். ஆனால் எனது தந்தை ஒரு போதும் இவ்வாறான நெருக்கடிகளில் சர்ச்சைகளில் சிக்கியதில்லை. அவர் இந்த விடயங்களில் மிகவும் கவனமாக நடந்து கொள்பவர். நானும் எனது தாயும் ஒரு ஓரத்தில் தான் நின்றிருந்தோம். 

அங்கு வந்த பலரும் அதை அவதானித்திருப்பார்கள் என்று நம்புகின்றேன். தொலைக்காட்சி கமராக்களும், படப்பிடிப்பாளர்களும் சற்று தூரத்தில் இருந்தனர். எங்களுக்குத் தெரிந்த ஒரு சிங்களக் குடும்பம் அங்கு வந்திருந்தது. நானும் தாயும் அவர்களுடன் பேசிக்கொண்டிருந்தோம். அங்கு வந்திருந்த அரசியல்வாதிகள் பலரும் கெமராக்களுக்கு முன்னால் நின்று தமது கருத்துக்களைச் சொல்லிக் கொண்டிருந்தனர். என் அருகில் இருந்த எமது குடும்ப நண்பர் ஒருவர் உங்களையும் அழைப்பார்கள் ஏதாவது பேசத் தயாராக இருங்கள் என்றார். 

சற்று நேரத்தில் கெமராக்கள் வேறு புறம் நோக்கி நகர்ந்ததும் என்னை கூப்பிட்டார்கள். நானும் எனது தாயும் அந்த இடத்துக்கு சென்றோம். இன்னும் பலர் எமது பின்னால் வந்தனர். நான் அந்த இடத்தை அடைந்தபோது அங்கு ஏற்கனவே நின்றிருந்த பலரில் ஒருவர் தனது கையில் வைத்திருந்த பூத்தட்டை திடீரென என்னிடம் நீட்டினார். நான் என்ன செய்வது என்று தெரியாமல் எதற்காக அது தரப்படுகின்றது என்று தெரியாமல் கையில் எடுத்தேன். அதற்கிடையில் மறுபுறத்தில் எனது தாயின் கையிலும் அதேபோல் ஒரு தட்டு வழங்கப்பட்டுவிட்டது. அவரின் நிலையும் அதே நிலைதான். அதற்கிடையில் உள்ள கெமராக்கள் அனைத்தும் தமது கடமையை செய்து முடித்துவிட்டன. ஒன்றில் நாம் அதை தூக்கி வீசியிருக்க வேண்டும். அப்படி செய்திருந்தால் அதன் விளைவுகள் எப்படி இருக்கும் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. வேறு வழியில்லாமல் அதை மேலே கொண்டுபோய் வேறு ஒருவரின் கையில் கொடுத்தோம். இது தான் உண்மையில் நடந்தது. இதில் பக்தியோ வழிபாட்டு நோக்கமோ அணு அளவும் கிடையாது. இது ஒரு தற்செயலான நிகழ்வு. இறைவன் மனிதனின் செயல்களுக்கன்றி எண்ணங்களுக்கே கூலி கொடுக்கின்றான் என்பதை சிறியவளாகிய நான் படித்துள்ளேன். அந்த வகையில் எனது எண்ணத்தில் எந்த குழப்பமும் இல்லை.

இருந்தாலும் இது குற்றம் அல்லது பாவம் என்று என் மனம் உடனேயே உருத்தத் தொடங்கிவிட்டது. எனது தந்தையின் நண்பர்கள் பலர் அந்த இடத்திலேயே என்னை எச்சரித்தார்கள். 'அமீனா உங்கள் வாப்பாவை விரும்பாதவர்களின் வாய்களுக்கு நீங்கள் அவல் கொடுத்துவிட்டீர்கள். இனி எப்படி சப்பித் துப்பப் போகிறார்கள் என்று பாருங்கள்' என்று அவர்களில் ஒருவர் எச்சரித்தார். அது எந்தளவுக்கு பலித்துவிட்டது என்பதை இப்போது நான் உணருகின்றேன். நடந்த உண்மை இதுதான். எதற்காகவும் யாருக்காகவும் எதையும் மறைக்க வேண்டிய தேவை எனக்கில்லை. என்னுடைய தந்தையின் நிழலில் வளர்ந்தவள் நான். அவருக்குள்ள நேர்மையும் துணிச்சலும் எனக்கும் உண்டு. 

ஆஸ்பத்திரியில் எனது தந்தையிடம் பேசக்கிடைத்த ஒரு சில நிமிடங்களில் நான் அவரின் கவனத்துக்கு இந்த விடயத்தைக் கொண்டு வந்தேன். அவரால் அவ்வளவாகப் பேசமுடியவில்லை. தலையில் கையை வைத்தவாறு தனது கவலையை வெளியிட்ட அவர் சைகை மூலமே மேலே கையைக்காட்டி இறைவனிடம் மன்றாடு என்றார்.

ஒளிவு மறைவின்றி நடந்ததை சொல்லிவிட்டேன். இதற்கு மேலும் என்னை விமர்சிப்பதும் தூஷிப்பதும் அவரவர் விருப்பம். இப்போதெல்லாம் எனது தொழுகைகளின் பின் நான் இன்னும் ஓர் பிரார்த்தனையையும் சேர்த்து வருகின்றேன். 'யா அல்லாஹ் ஒரு இளம் பெண் என்று கூட பார்க்காமல் என்மீது பழிசுமத்தி எனது படங்களில் தேவையற்ற வார்த்தைகளைப் புகுத்தி சிலர் தமது முழு நேர பொழுது போக்காக என்மீது அவதூறு சுமத்தி வருகின்றனர். மற்றவர்களின் தவறுகளை மறைப்பது இஸ்லாமிய பண்பா அல்லது தவறுகளுக்கு கை, கால் எல்லாம் வைத்து அதை அம்பலப்படுத்திக் கொண்டிருப்பது இஸ்லாமிய பண்பா என்று தெரியாமல் இஸ்லாமிய பற்று கொண்ட சில முஸ்லிம்கள் நடந்து கொள்கின்றார்கள். இறைவா நான் செய்தது பாவமெனில் அதை மன்னிக்கும் அதே வேளை அந்த பாவத்தைப் பறைசாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கு நல்ல புத்தியை கொடுத்து அவர்களின் பாவத்தையும் மன்னிப்பாயாக' என்பதுதான் அந்தப் பிரார்த்தனை. 

என்னுடைய தந்தையின் விடுதலைக்காக சட்டப்படி நாங்கள் போராடிக் கொண்டிருக்கின்றோம். தினசரி நூற்றுக்கணக்கானவர்கள் எம்மோடு தொடர்பு கொண்டு தமது ஆதரவுகளை வழங்கியவண்ணம் உள்ளனர். இன்றும் கூட பலர் நோன்பிருந்து அவரின் விடுதலைக்காக பிரார்த்தனையில் ஈடுபட்டுள்ளார்கள். இந்த துஆக்கள் நிச்சயம் பலன் தரும். அநீதிக்கு எதிராக குரல்கொடுத்த எனது தந்தைக்கு நிச்சயம் நீதி கிடைக்கும். சத்தியம் வந்தால் அசத்தியம் அழியும். நிச்சயம் அசத்தியம் அழிந்தே தீரும். இதில் எவ்வித சந்தேகமும் இல்லை. எங்களுக்கு உதவாவிட்டாலும் பரவாயில்லை. உபத்திரவம் தராமல் இருந்தால் அதுவே போதும். அதுதான் நாகரிகம்.

4 கருத்துரைகள்:

owworu muslimum sinthikkawendiya widayam aduthawarin manam punpadumalawukku nadakkathirhal

Allah is the most merciful and the most forgiving.
Most of us do many SHIRK by our words. Some people say "If this person/party comes to power this and that will happen or everything will be alright", which is a big SHIRK...
Situations make people do wrong things but the most beautiful thing is they realize it and repent.. Allah likes it a lot...

சகோதரரே தயவு செய்து இந்த போஸ்டை Jaffna Muslim இருந்து எடுத்து விடவும். ஒரு முஸ்லிமின் அதுவும் ஒரு பெண் பிள்ளையின் மானத்தை பகட்ட அரசியலுக்காக பயன்படுத்த வேண்டாம்.

Post a Comment