Header Ads



வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றம் "36" - அதிகாரிகள் புறக்கணிப்பும் தொடருகிறது




- எம்.எஸ். முஹம்மத்  -


ஈழப் போர் ஆரம்பித்த சிலவருங்களில் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்றி தனி தமிழர்களை கொண்ட பிரதேசமாக மாற்ற வேண்டுமென்ற நிலைப்பாடு  புலிகள் இயக்கத்திடம் காணப் பட்டது. 


1987 ஆம் ஆண்டு இந்தியாவில் இருந்து திரும்பி யாழ்ப்பாணத்தில்  கால்பதித்த நிகழ்வுக்கு முன்னாள் சில நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தன.  டெலோ சிறிசபாரத்னம் உட்பட பல நூறு டெலோ உறுப்பினர்கள் கொல்லப்பட்ட மிஞ்சிய டெலோ உறுப்பினர்கள் தப்பி ஓடிவிட்டனர். அதனை தொடர்ந்து EPRLF  மற்றும் PLOTE  அமைப்புக்களும் தடைசெய்யப்பட்டு. அதன் உறுப்பினர்களில் பெரும்பாலானவர்கள் இந்தியாவிலும் ஒரு தொகையினர் வவுனியா போன்ற இடங்களிலும் தஞ்சமடைந்தனர். 


இந்த நிகழ்வுக்கு பின்னர் வடக்கு கிழக்கில் காணப்பட்ட ஏனைய பல ஆயுத அமைப்புகள் தமது போராட்டத்தை கைவிட்டு ஒதுங்கி விட்டன. ஈரோஸ் அமைப்பு LTTE யுடன் இணைந்து கொண்டது. வடக்கு தனக்கு பாதுகாப்பாக இருக்கின்றது என்பதை உறுதி படுத்திய பின்னர் பிரபாகரன் யாழ்ப்பாணம் திரும்பும் நிகழ்வு இடம்பெற்றது. 


ஆனால் தனது பாதுகாப்புக்கு முஸ்லிம்களால் அச்சுறுத்தல் வரலாம் என்ற ஒரு சிந்தனை பிரபாகரனுக்கு இருந்தது. அதனால் இந்தியாவிலிருந்து நாடு திரும்பிய பிரபாகரனால்  உடனடியாக எல்லா மாவட்ட புலி  தலைமைகளுக்கு  ஒரு அறிவுறுத்தல் எழுத்து மூலமாக இரகசியமாக வழங்கப் பட்டது. 


அதாவது வடக்கு கிழக்கிலிருந்து முஸ்லிம்களை எவ்வாறு வெளியேற்றுவது என்பது சம்பந்தமான திட்டமிடல்கள் அந்த பைலில் இருந்தது. 1986 ஆம் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அப்போதைய அரசியல் பொறுப்பாளர் திலீபன் 'தமிழீழத்தில் முஸ்லிம்கள் தொடர்ந்து பார்வையாளர்களாக வாழமுடியாது' என்று சொன்ன அந்த கருத்து முஸ்லிம்களை வெளியேற்றும் திட்டத்தின் ஆரம்பகருவாகும். 


தொடர்ந்து வவுனியா காட்டுக்குள் இடம்பெற்ற ஒரு கூட்டத்தில் புலிகளின் தளபதி ஒருவர் கூறியதாக முஸ்லீம் புலி உறுப்பினர் மூலம் தகவல் கிடைக்கப் பெற்றது. 


டெலோ அழிப்புக்கு பின்னர்  1986 ஆம் ஆண்டு தீட்டப் பட்ட இந்த திட்டம், 1987 இல் ஆவணமாக்கப் பட்டது. 1987 ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆபரேஷன் லிபரேஷன் போன்ற இராணுவ நடவடிக்கைகள் இந்த திட்டத்தை தள்ளிப் போட்டது. 1987 ஜூலை மாதம் 29 ஆம் திகதி மேற்கொள்ளப் பட்ட ராஜிவ் -ஜெ ஆர் ஒப்பந்தத்தை தொடர்ந்து இந்திய இராணுவம் வடக்கு கிழக்கில் நிலை கொண்டதாலும் பிறகு அவர்களுடன் யுத்தம் மூண்டு புலிகள் காடுகளுக்குள் தங்கியிருந்ததாலும் முஸ்லிம்களை வெளியேற்றும் புலிகளின் திட்டம் பின்போடப்பட்டது  அல்லது செயற்படுத்த முடியாத நிலைமைக்கு உள்ளாகியது. 


1990 மார்ச்  மாத இறுதியில் இந்திய   இராணுவம் வெளியேறிய  சந்தர்ப்பத்தில்  நகர்களுக்குள் உள்நுழைந்த புலிகள் பொதுமக்கள் விடயத்தில் கடுமையாக நடந்து கொண்டனர். முஸ்லிம்கள் விடயத்தில் இன்னும் கடும்போக்கு கொண்டிருந்தனர். 


இவ்வாறு இருக்கும் கட்டத்தில் ஜூன் 11 அன்று கிழக்கு மாகாணத்தில் LTTE ஆள் தொடக்கப் பட்ட  சண்டை வடக்குக்கு நகர்ந்தது. கிழக்கு மாகாணத்தில் ஒந்தாச்சிமடம் படுகொலை , அக்கரைப்பற்று படுகொலை, காத்தான்குடி ஏறாவூர் படுகொலைகள் முஸ்லிம்களை தற்காப்புக்காக ஆயுதங்களை ஏந்த வைத்தது. அவர்கள் எந்த வகையில் பொதுமக்களை பள்ளிவாசல்களிலும் வீடுகளுக்குள்ளும் வைத்து கொள்கிறார்களோ அதே  வகையில் முஸ்லிம்களும் தாக்குதல்களை நடத்தவில்லை.  முஸ்லிம்களின் நோக்கம்  புலி உறுப்பினர்களை இலக்குவைப்பதாக இருந்தது. முஸ்லிம்களின் தாக்குதல்களால் சில உறுப்பினர்கள் கொல்லப் பட மற்றும் சிலர் காயப்பட்டனர். ஒரு கட்டத்தில் புலித்தலைமைகளுக்கு கிழக்கு மாகாணத்தை இருக்க முடியாத நிலைமை ஏற்பட்டது. 


அதே வேளை முனாஸ் குழு மற்றும் ராசிக் குரூப் என முஸ்லீம் பெயரில் இயங்கிய   தமிழ்  ஆயுத  குழுக்கள் மேற்கொண்ட கொலைகள் முஸ்லிம்கள் மேல் விழுந்தது. ராசிக் குழுவின் தலைவர் முத்தலிங்கம் கணேஷ்குமார் என்பவராவார். இவர் ராசிக் என்ற புனைபெயரில் இயங்கியதாக  கூறப்படுகின்றது. முனாஸ் என்பவரும் அவருக்கு கீழ் இயங்கியவர்களும் முஸ்லிம்கள் அல்ல.


முஸ்லிம்களால் சில மரணங்கள் நடந்தன என கட்டுரை செய்திகள் கூறுகின்றன. பொதுமக்கள் கொலைகளை நியாய படுத்த கட்டுரையாளர் முயலவில்லை என்பதை தெரிவித்துக் கொள்கின்றேன். ஆனால் அவ்வாறான கொலைகளை புலிகள் தான் முதலில் தொடக்கி வைத்தார்கள் என்பது கசப்பான உண்மையாகும்.


கிழக்கு மாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை , திருகோணமலை, பொலநறுவை போன்ற மாவட்டங்களில் புலிகளால் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் கொலை செய்யப் பட்டார்கள்.    இவற்றை விட  உழைப்புக்காக போலீசில் சேர்ந்திருந்த 800 முஸ்லிம்களும் , புலி இயக்கத்தில் சேர்ந்திருந்த 200 முஸ்லிம்களும்  கொல்லப்பட்டதும் கிழக்கு மாகாண முஸ்லிம்களை கவலையில் மூழ்கடித்திருந்தது. அதிலும் ஆயுதங்களை வீசி விட்டு சரணடைந்த தமது வாலிப வயதுகளில் இருந்த முஸ்லீம் போலீசார் கொல்லப்பட்டதை  முஸ்லிம்களின் உள்ளம் ஏற்றுக் கொள்ளவில்லை. இதனால்   முஸ்லிம்கள் தமது ஊர்களை பாதுகாக்க ஆயுதங்களை கேட்டார்கள். ஊர்காவல் படைகளும் உருவாக்கப் பட்டன. முஸ்லிம்கள் கொல்லப் பட்டால் பதில் தாக்குதல்களும் மேற்கொள்ளப் பட்டன. இதனால் கிழக்கில் புலிகளால் நிலைகொள்ள முடியவில்லை. கிழக்கு புலிகளின் தலைவர்கள் வடக்குக்கு தப்பியோடினர்.  தமது வரவை நியாய படுத்த அவர்கள் பல  கதைகளை கூறி வடக்கிலுள்ள முஸ்லிம்களை துரத்த  வேண்டுமென்ற கோரிக்கையையும் முன்வைத்தார்கள். 


கிழக்கில் முஸ்லிம்கள் புலிகளின் அச்சுறுத்தல் தொடர்ந்து காணப்பட்டதால் அரசியல் ரீதியான நிலைப்பாடு ஒன்றை அவர்கள் எடுக்க வேண்டிய நிர்ப்பந்தம் உருவானது. வடக்கு கிழக்கு  மாகாண சபைகள் பிரிக்கப் பட வேண்டுமென்ற கோரிக்கையின் மூலம் புலிகள் முஸ்லிம்கள் மீது மேற்கொள்ளும் படுகொலைகளை நிறுத்தசெய்யலாம் என நினைத்தனர். 


ஆனால் அந்த கோரிக்கை முன்வைத்து அடுத்த இரண்டு தினங்களில் புலிகள் வேறு முடிவை எடுத்திருந்தனர். படிப்படியாக முஸ்லிம்களை துரத்த அவர்கள்  ஏற்கனவே எடுத்திருந்த முடிவை உடனடியாக செயல் படுத்தினார்கள். 


சாவகச்சரியில் வர்த்தகர்களாக இருந்த முஸ்லிம்கள் நால்வர்  கடத்தப்பட்டு அவர்களிடம் ஒரு கோடி ரூபாய் கப்பம் கேட்கப் பட்டது. அவர்கள் அந்தளவு செல்வந்தர்கள் அல்ல. இந்நிலையில் 14 ஒக்டோபர் 1990 அன்று சாவகச்சரி பள்ளிவாசலில் தொழுது விட்டு வந்த முஸ்லிம்களுடன் சில தமிழ் வாலிபர்கள் ( சிவில் உடையில் இருந்த புலிகள்) வீணான வாக்குவாதத்தை உருவாக்கினார்கள். புலிகள் தான் அவர்கள் என இனம் கண்ட முஸ்லிம்கள் அமைதியாக சென்றுவிட்டனர். மறுநாள் காலையில்  வாகனத்தில் வந்த புலிகள் சில முஸ்லிம்களை கடத்திச் சென்றனர். பின்னர் மக்கள் அழுத்தம் கொடுத்ததால் அவர்கள் விடுவிக்கப் பட்டனர். 15 ஆம் திகதி இரவு மீண்டும் பள்ளிவாசல் முன்னிலையில் வந்த LTTE  சாவகச்சேரியை விட்டு முஸ்லிம்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என்று சொல்லிச் சென்றனர்.   மறுநாள் காலை ஒக்டோபர் 16, 1990 அன்று மீண்டும் காலையில் வந்த புலிகள் முஸ்லிம்களை உடனடியாக வெளியேற வேண்டுமென்று கடுமையாக எச்சரித்தனர். 


இதனால் அச்சமடைந்த சில குடும்பங்கள் அங்கிருந்து வெளியேறி வவுனியாவுக்கு அப்பால் சென்று விட்டனர். 1990 ஒக்டோபர்  16, 17 மற்றும் 18 ஆம் திகதிகளில் 160 குடும்பங்களை சேர்ந்த சுமார் 1000 பேர் சாவகச்சரியை  விட்டு வெளியேறினர். 


இவர்கள் தமது கைகளில் உடைகள் போன்றவற்றை எடுத்து செல்ல அனுமதிக்கப் பட்டனர். இவர்களின் பணம் நகை தவிர்ந்த மற்ற பொருட்கள், வீட்டுத்தளபாடங்கள், வாகனங்கள் , வர்த்தக பொருட்கள் புலிகளால் எடுத்து செல்லப் பட்டன. 


1990 ஒக்டோபரில் கடத்தப் பட்ட வர்த்தகர்கள் சுமார் 565 நாட்களின் பின்னர்   1992 ஆம் ஆண்டு   விடுவிக்கப்பட்டனர். 


இன்றைய நிலை :

2009 மே மாதம் யுத்தம் முடிவடைந்த பின்னர் 2010 ஆம் ஆண்டு தான் பொதுமக்கள் போக்குவரத்துக்காக பாதைகள் திறக்கப் பட்டது. அப்போது சாவகச்சரி சென்ற முஸ்லிம்கள் தமது வீடுகள் வர்த்தக  நிலையங்கள் எல்லாம் கொள்ளையடிக்கப் பட்டிருப்பதையும் வீடுகள் மற்றும் பள்ளிவாசல் என்பன உடைக்கப் பட்டு கதவு நிலை ஜன்னல்கள் கூரைகள் சுவர்கள் என்பன எடுத்துச் செல்லப்பட்டிருந்தன. இதனால் மக்கள் ஏமாற்றத்துக்கும் மனஉளைச்சலுக்கு உள்ளாகினர். 


பள்ளிவாசல் முன்சுவர் மட்டும் இருந்தது. ஏனைய சுவர்கள்  மற்றும் கூரைகள், மின்னுபயோகப் பொருட்கள் களவாடப் பட்டிருந்தன. பள்ளிவாசலுக்கு சொந்தமான அறைகள் மற்றும் 5 வீடுகள் முறையாக உடைத்து கொள்ளையடிக்கப் பட்டிருந்தது. அவற்றிலிருந்த சுவர்கள் மற்றும் கூரைகள், மின்னுபயோகப் பொருட்கள் , தளபாடங்கள் களவாடப் பட்டிருந்தன. இன்றும் அவை அவ்வாறே காணப் படுகின்றன. 


சாவகச்சேரியில் பள்ளிவாசலுக்கு ஏற்பட்ட இழப்புகள் இன்றைய மதிப்பில் பள்ளிவாசல் கட்டிடம் 15 மில்லியன், பள்ளிவாசல் அறைகள் 5 மில்லியன், பள்ளிவாசல் வீடுகள் 10 மில்லியன் ரூபாய். பொதுமக்களின் வீடுகள் மற்றும்  வர்த்தக நிலையங்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் 650 மில்லியனுக்கும் அதிகமானதாகும்.


இவ்வளவு இழப்புகளை சந்தித்த முஸ்லிம்களின் பள்ளிவாசல்களையும் அதற்கு சொந்தமான கட்டிடங்களையும்     புனரமைப்பு செய்ய வடக்கில் செயற்படும்  அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என தெரிகின்றது. வடமாகாண சபையும் இந்த சொத்துக்களையும் வணக்கஸ் தலங்களையும் மீளமைக்க எந்த ஒரு நிதி ஒதுக்கீடும் செய்ததாக அறியப் படவில்லை.

No comments

Powered by Blogger.