தர்மப் பொருள் எதுவாக இருந்தாலும், அதை அல்லாஹ்வுக்காகக் கொடுக்கும்போது...
குதிரைக் குட்டிகள் பிறந்தவுடன் அவற்றின் கால்கள் இப்படித்தான் இருக்கும். 'தங்கச் செருப்புகள்’ இவை அழைக்கப்படுகின்றன.
இதன் அறிவியல் பெயர் 'எப்போனிச்சியம்’ (Eponychium) என்பதாகும். அதாவது குதிரைக் குட்டியின் குளம்புகளை மறைக்கும் மென்மையான மெத்தை போன்ற அடுக்கு என்று பொருள்.
கருவில் இருக்கும்போது தாயின் கருப்பையை கூர்மையான உதைகளில் இருந்து பாதுகாத்து, குளம்புகளுக்கு தீங்கு ஏற்படாமல், பாதுகாப்பான பிரசவம் ஏற்பட வேண்டும் என்பதற்கான இறைவனின் ஏற்பாடு இது.
குதிரைக் குட்டி பிறந்தவுடன் இந்த அடுக்கு வறண்டு படிப்படியாக உதிர்ந்து, கீழே இருக்கும் கடினமான குளம்புகள் வெளிப்படும். சில மணி நேரங்களுக்குள் இந்த 'தங்கச் செருப்புகள்’ ஒருபோதும் இல்லாதது போல், வலியின்றி எந்தத் தடயமும் இல்லாமல் மறைந்துவிடும்.
பின்னர் அந்தக் குதிரைக் குட்டிகளை அதீத கவனத்துடன் பராமரிக்க வேண்டும். இல்லையேல் அவை வீணாகி பயணத்திற்கும் போருக்கும் ஏற்ற குதிரைகளாக இருக்காது.
இறைவன் எவ்வளவு அற்புதமான படைப்பாளன். அவனுடைய படைப்பாற்றல்தான் என்னே...!
நமது தர்மங்களிலும் இப்படித்தான் உச்சபட்ச எச்சரிக்கை உணர்வுடன் இருக்க வேண்டும். இல்லையேல் அவை வீணாகிவிடும்.
தர்மப் பொருள் எதுவாக இருந்தாலும் அதை அல்லாஹ்வுக்காகக் கொடுக்கும்போது தமது வலக்கரத்தால் அதை அவன் ஏந்திக்கொள்கிறான்.
பின்னர் என்ன நடக்கும்..? இறைத்தூதர் (ஸல்) அவர்களே அதைக் கூறுகிறார்கள்:
"யார் தூய்மையான சம்பாத்தியத்தில் ஒரு பேரீச்சம் பழத்தின் மதிப்புக்குத் தர்மம் செய்தாரோ, அதை நிச்சயம் அல்லாஹ் தனது வலக் கரத்தால் ஏற்றுக்கொள்கிறான். பிறகு உங்களில் ஒருவர் தமது குதிரைக் குட்டியை கவனத்துடன் வளர்ப்பது போன்று, அதன் நன்மையை மலைபோல் உயரும் அளவுக்கு அவருக்காக வளர்ச்சி அடையச் செய்கிறான்”. (புகாரி)
இந்த நபிமொழியையும் அந்தத் தகவலையும், ஒப்பிட்டு நோக்கும்போது வியப்புதான் ஏற்படுகிறது.
✍️ நூஹ் மஹ்ழரி

Post a Comment