முஸ்லிம்களின் இழப்புகளும், நீதிக்கான கோரிக்கைகளும்
இலங்கை அரசாங்கத்திற்கும் விடுதலைப்புலிகள் உள்ளிட்ட இயக்கங்களுக்குமிடையிலான மூன்று தசாப்த போரில் இலங்கை முஸ்லிம்கள் சந்தித்த இழப்புகளின் உச்சபட்சமே இந்த பள்ளிவாசல் படுகொலையாகும். கிழக்கிலிருந்து முஸ்லிம்களை வெளியேற்ற வேண்டும் என்பதே அன்று புலிகளின் எதிர்பார்ப்பாக இருந்தது. இதன் காரணமாக காத்தான்குடி பள்ளிவாசல் படுகொலை, ஏறாவூர் படுகொலை, அளிஞ்சிப்பொத்தானை படுகொலை, குருக்கள்மடம் கடத்தலும் படுகொலையும், பல்வேறு குண்டுத் தாக்குதல் சம்பவங்கள், அவ்வப்போதான ஆட்கடத்தல்கள், கல்விமான்களை இலக்கு வைத்த படுகொலைகள் என அக் காலப்பகுதியில் ஆயுதம் தாங்கிய குழுக்களால் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டனர். இவ்வாறான வன்முறைகளால் சுமார் 7000 முஸ்லிம்கள் கொல்லப்பட்டிருக்கலாம் எனக் கணக்கிடப்பட்டுள்ளது. அது மாத்திரமன்றி பல்லாயிரக் கணக்கான ஏக்கர் நிலங்களை முஸ்லிம்கள் இழந்துள்ளனர். இதன் காரணமாக இன்று கிழக்கு மாகாணத்தில் மிகவும் குறுகிய நிலப்பரப்புக்குள் இலட்சக்கணக்கான முஸ்லிம்கள் மிக நெருக்கமாக வாழ்வதற்கு நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர். இது பல்வேறு சுகாதார மற்றும் சமூகப் பிரச்சினைகளுக்கும் வழிவகுத்துள்ளது.
இந்த நாட்டை பிரிவினையிலிருந்தும் பாதுகாப்பதற்காக கிழக்கு மாகாண முஸ்லிம்கள் பாரிய விலையைக் கொடுத்துள்ளனர். வடக்கு முஸ்லிம்கள் தமது தாயகத்திலிருந்து எவ்வாறு விரட்டப்பட்டதன் மூலம் தமது வாழ்வையே தொலைத்தார்களோ அதேபோன்று கிழக்கு முஸ்லிம்களும் மேற்குறிப்பிட்ட வன்முறைகளால் மிக மோசமான பாதிப்புகளைச் சந்தித்துள்ளனர். இருப்பினும் இவற்றுக்கு இதுவரை குறிப்பிட்டுச் சொல்லும்படியான எந்தவித நஷ்டயீடுகளையோ நீதியையோ அவர்கள் பெறவில்லை என்பது கவலைக்குரியதாகும்.
கடந்த காலங்களில் சமாதானப் பேச்சுவார்த்தைகளின்போது முஸ்லிம்களைத் தனித்தரப்பாக அங்கீகரிக்குமாறும் இழப்புகளுக்கு நஷ்டயீடு வழங்குமாறும் கோரிக்கைவிடுத்தும் அவை கவனத்திற் கொள்ளப்படவில்லை. இன்றும் கூட இது தொடர்பில் கிழக்கு முஸ்லிம்கள் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டு வருகின்ற போதிலும் அவற்றுக்கு எவரும் உரிய பதிலளிப்பதாகத் தெரியவில்லை.
முஸ்லிம் அரசியல்வாதிகள் கூட கடந்த காலங்களில் கிழக்கு முஸ்லிம்களின் அவலங்களை வைத்தே அரசியல் செய்து அதிகாரங்களுக்கு வந்தனர். முஸ்லிம் தனித்துவக் கட்சிகள் அனைத்தும் முஸ்லிம்களின் இந்த இழப்புகளை சந்தைப்படுத்தியும் அவற்றுக்கு தீர்வு தருவதாகவும் கூறியே அரசியல் செய்தன. இன்றும் செய்து வருகின்றன. எனினும் மக்களுக்கு எந்தவித நீதியும் கிடைத்ததாக இல்லை.
யுத்த காலத்தில் இடம்பெற்ற மனித உரிமைகள் குறித்து தற்போது பரவலாகப் பேசப்படுகிறது. தற்போது தோண்டப்பட்டுக் கொண்டிருக்கும் செம்மணியில் சுமார் 100 வரையான எலும்புக்கூடுகள் மீட்கப்பட்டுள்ளன. இப் பகுதியில் அநியாயமாகக் கொன்று புதைக்கப்பட்ட மக்களுக்கு நீதி வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கைகள் வலுப்பெற்றுள்ளன. அதேபோன்றுதான் கிழக்கில் குருக்கள்மடம் பகுதியில் நூற்றுக்கணக்கான முஸ்லிம்கள் கடத்தப்பட்டு கொல்லப்பட்டு புதைக்கப்பட்ட இடங்களும் தற்போது அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இது தொடர்பான வழக்கும் தற்போது நடைபெற்று வருகிறது. யுத்த காலத்தில் இவ்வாறு நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற அநீதிகள் வெளிச்சத்திற்குக் கொண்டுவரப்பட்டு நீதி நிலைநாட்டப்பட வேண்டும்.
குறிப்பாக முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட இழப்புகள் தொடர்பில் இதுவரை போதுமான கவனம் உள்நாட்டிலோ அல்லது சர்வதேச நீதிப் பொறிமுறைகளிலோ செலுத்தப்படவில்லை. எதிர்வரும் காலங்களிலாவது இதற்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்கான பொறிமுறைகள் நிறுவப்பட வேண்டும். யுத்த காலத்தில் பாதிக்கப்பட்ட தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள அப்பாவி மக்களுக்கு நீதி நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli -

Post a Comment