வடபுல முஸ்லிம்களின் துயர் கூறும் நாகூர்கனியின் படைப்புக்கள்
- யாழ் அஸீம் -
“முஸ்லிம் எழுத்தாளர் உலகில் பத்திரிகைத் துறை சிஷ்யர்களில் ஒருவரான முஸாபிர் என்ற எஸ்.ஐ நாகூர் கனி புது டில்லியில் தலை நிமிர்ந்து நிற்கும் குதூப் மினார் என்ற வானுயர் கோபுரத்தைப் போல் ஒப்பாரும் மிக்காரும் இல்லாதவராக வானுயர்ந்து நிற்கிறார்”
எஸ். டி. சிவநாயம பத்திரிகை துறை ஜாம்பவான்
கடந்த ஜூலை 26ம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் இறையடி சேர்ந்த சத்திய எழுத்தாளர் கலாபூஷணம் எஸ்.ஐ. நாகூர் கனி பற்றி, அவரது பத்திரிகைத்துறை குருவான பத்திரிகைத் துறை ஜாம்பவான் எஸ்.டி.சிவநாயகம் அவர்களது புகழுரையாகும். தமிழ் இலக்கியத்துறைக்கு தொண்டாற்றிய கவிஞராக, கதாசிரியராக கட்டுரையாளராக, நூலாசிரியராக, பேச்சாளராக, நடகாசிரியராக பன்முக ஆளுமை கொண்டவராக அவர் பிரபல்யம் அடைவதற்கு காரணம் அவரிடம் காணப்பட்ட ஆணித்தரமான எழுத்தாற்றல், அசாத்தியத் துணிச்சல், உண்மையை உரத்துச் சொல்லும் நேர்மை என்பவைகளாகும்.
சிந்தாமணி பத்திரிகையில் ‘ முஸாபிர் பார்வையில்’ என்ற பத்தி எழுத்தின் மூலமும், இலங்கை வானொலி முஸ்லிம் சேவையில்’ ஊடுருவல்’ எனும் சமூகச்சித்திர நிகழ்ச்சி மூலமும் விழிப்புணர்ச்சியை ஏற்படுத்திய நாகூர் கனி வட மாகாண முஸ்லிம்கள் அவர்களது தாயக மண்ணிலிருந்து விரட்டப்பட்ட வேளையில் அவர்களுக்கு நிகழ்ந்த கொடுமைகளையும் கவிதைகள் மூலம் ஆக்ரோஷமாக வெளிப்படுத்தியுள்ளார்.
தன் சகோதரனுக்கு ஏற்படும் துன்பமானது தனக்கு ஏற்பட்டதெனக் கருதி செயற்படுபவனே ஒர் உண்மை முஸ்லிமாவான் என்பது அண்ணல் நபிகளாரின் அமுதவாக்காகும்.
.
2012 இல் யாழ் முஸ்லிம் இணையத்தளத்தால் வெளியிடப்பட்ட "வேர் அறுத்தலின் வலி" கவிதைத் தொகுப்பில் வடமாகாணம் அல்லாத ஈழத்தின் பிரபல கவிஞர்களால் எழுதப்பட்ட கவிதைகள் மிகவும் உணர்வுபூர்வமானதாகவும், உயர்தரமானதாகவும் அமைந்திருந்தன. இதமான வார்த்தைகளால் இதயம் தடவும் அக்கவிதைகள் ஒவ்வொன்றும் காலத்தால் அழியாதவை.
வடமாகாண முஸ்லிம்களின் வெளியேற்றத்தை கவிதைகளாகவும், கதைகளாகவும், கட்டுரைகளாகவும் எழுதி வெளிச்சமிட்டுக் காட்டிய வடமாகாணத்தவர் அல்லாத முஸ்லிம் எழுத்தாளர்களுள் "காதிபுல்ஹக்" சத்திய எழுத்தாளர் எஸ்.ஐ. நாகூர் கனியும் பிரதானமானவர் எனலாம்.
"வாருங்கள் பாங்கோசை கேட்கிறது" என்னும் அவரது கவிதையானது வரலாற்றைக் கூறுவதுடன் ஈமானிய உணர்வையும் கட்டியெழுப்பக் கூடிய எழுச்சி மிக்க கவிதையாக அமைந்துள்ளது. அவரது கவிதையில் சில கனமான வரிகள் பின்வருமாறு அமைந்துள்ளன.
"சூழ்நிலை துரத்தியதால்
சுந்தர நபி வாழ்வில்
"ஹிஜ்ரத்" எனும் இடம்பெயர்வு இஸ்லாமிய வரலாறு்
. யாழ் மண்ணின் ஈமானிய இதயங்களை விரட்டியதால் இன்னொரு "ஹிஜ்ரத்" ஏற்பட்டமை இன்றைய முஸ்லிம்களின் வரலாறு. பழங்கால வரலாறும்
சமகால சரித்திரமும்
இடைவெளியில் இரண்டே தவிர "எடை"யில் ஒன்றேதான்
. ஈமானிய இதயங்களை
சாமானிய மனிதராய்
எடைபோட்டு விடாதீர்கள்
இரும்பை நிகர்த்த அவர்களின்
ஈமானிய இதயம்- அது
உருகவும் செய்யும்
உறுதியும் கொள்ளும்-
எங்கள் அதிசய நாட்டிலும்
ற இன்னொரு பலஸ்தீனம்
சிதறிக் கிடக்கிறது!
சிந்திய பாலை அள்ள முடியாது
சிதறிய மக்களை
அல்லாஹ் அழைத்திடுவான்
இன்ஷா அல்லாஹ்!
.உணர்வூட்டும் கவிதைகளுடன் நாகூர் கனியவர்கள் வடபுல தமிழ்முஸ்லிம் உறவை வலுப்படுத்தும் நோக்குடன் அத்தகைய கருப்பொருளை நோக்கமாகக் கொண்டு பல தரமான கதைகளையும் எழுதியுள்ளார். அகில இலங்கை ரீதியாகவும், சர்வதேச ரீதியாகவும் நடாத்தப்பட்ட சிறுகதைப் போட்டிகளில் எழுதி எமது வரலாற்றை சர்வதேசமயப்படுத்தியுள்ளதுடன் பல பரிசுகளைப் பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. அவர் வடக்கு முஸ்லிம்கள் குறித்து எழுதிய படைப்புகள் ஒன்றல்ல இரண்டல்ல அவை பின்வருமாறு,
1. "இவர்கள் மனிதர்கள்" கொழும்புத் தமிழ் சங்கத்தால் நடாத்தப்பட்ட இலங்கையர் கோன் நினைவு சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை.
2. "பண்பெனப்படுவது" ஜேர்மனி தமிழ் எழுத்தாளர் சங்கம் தனது பத்தாவது ஆண்டு நிறைவையொட்டி நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் இரண்டாம் பரிசு பெற்ற சிறுகதை
3. "யாழ் மண்ணுக்குரியது""ஞானம்" சஞ்சிகையில் (2015) அமரர் செம்பியன் செல்வன் ஆ இராஜகோபால் ஞாபகார்த்தமாக நடாத்தப்பட சிறுகதைப் போட்டியில் முதற்பரிசு பெற்ற சிறுகதை.
4. "ஒரு போத்தல் தண்ணீர்" - "ஞானம்" சஞ்சிகையால் அமரர் செம்பியன் செல்வன் ஆ.ராஜகோபால் ஞாபகார்த்தமாக நடத்தப்பட்ட சிறுகதைப் போட்டியில் (2020) முதற் பரிசு பெற்ற சிறுகதை.
5."ஒரு பிடி மண்" வடபுல முஸ்லிம்களின் வெளியேற்றத்தின் நினைவாக 2020 ஒக் டோபரில் விடிவெள்ளி" பத்திரிகையில் வெளியானது.
6. "பேதங்களுக்கப்பால் மனிதன்" - அவுஸ்ரேலியா அக்கினிக் குஞ்சுகள் அமைப்பு எஸ்.பொ. நினைவாக நடத்திய சிறுகதைப் போட்டியில் (2016). முதற் பரிசு பெற்ற கதை.
7. அவுஸ்திரேலிய அக்கினிக் குஞ்சுகள் நடத்திய குறுநாவல் போட்டியில் (2017) இவரது குறுநாவல் இரண்டாம் பரிசு பெற்றது. இதை தவிர பல கட்டுரைகளையும் எழுதி வடபுல முஸ்லிம்களுக்காகக் குரல் கொடுத்தவர் நாகூர் கனி அவர்கள்.
இவ்வாறாக சமூகத்துக்கும், ஈழத்து முஸ்லிம் இலக்கிய உலகத்துக்கும் மட்டுமன்றி வடபுல முஸ்லிம்களின் வலிகளையும் வாழ்வியலையும் வெளிச்சமிட்டுக் காட்டிய நாகூர் கனியவர்களின் மறைவானது ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும். இன்று அவர் எமைவிட்டு மறைந்தாலும்,2 அவரது பத்திரிகைத் துறை ஆசான் எஸ்.டி. சிவயநாயகம் குறிப்பட்டது போல் எமது இதயங்களில் டில்லியின் குதுப்மினார் போல் உயர்ந்தது நிற்கிறார்.



Post a Comment