யாபா யா மர்ஹபன் பிஷ்ஷஹாதா
அப்துஸ்ஸலாம், இதைவிட (ஷஹாதத்) சிறந்த முடிவு வேறு ஏதேனும் இருக்கிறதா நமக்கு? எனக்கு இப்போது 62 வயதாகிறது. இன்னும் ஐந்தாறு ஆண்டுகள் வாழ்ந்து, நோய்வாய்ப்பட்டு மரணிக்க வேண்டும் என்று நீ நினைக்கிறாயா?
ஹனிய்யா தியாகியாவதற்கு ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு முன்பு யெமனில் இருந்து ஏவப்பட்ட முதல் ட்ரோன் டெல் அவிவில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் அருகே விழுந்தது. அதற்கு பழிவாங்க தனது தந்தையை குறி இலக்கு வைப்பார்களோ? என்ற தனது ஐயத்தை இஸ்மாயில் ஹனிய்யாவிடம் அப்துஸ்ஸலாம் பகிர்ந்துகொண்டபோது, அவர் சொன்ன பதில் தான் மேலே கண்ட வார்த்தைகள்.
ஹனிய்யா தியாகியான அன்று அதிகாலையில், அவரது குடும்பத்தினருக்குத் தகவல் தெரிவிக்க வந்தவர் கதவைத் தட்டியபோது, கதவைத் திறந்த அப்துஸ்ஸலாமிடம், "அப்பா தாக்குதலில் படுகாயமடைந்துள்ளார்" என்று அவர் தெரிவித்தார். உடனே மகன், "இல்லை, அப்பா ஷஹாதத் அடைந்துவிட்டார்" என்று அவரைத் திருத்தினார்.
"என் அப்பாவும் அம்மாவும் ஒருவருக்கொருவர் அளவற்ற அன்பு கொண்டிருந்தனர். பிள்ளைகள் மற்றும் பேரக்குழந்தைகளுக்கு மத்தியிலும், அம்மாவுடன் காதல் மொழிகளில் பேசுவார். அம்மா சமைப்பார்... தூஃபான் அல் அக்ஸா தொடங்கிய பிறகு ஒருமுறை அப்பா அம்மாவிடம் சொன்னார், 'ஹாஜ்ஜா, நீ ஜன்னல் அருகே படுக்காதே. நான் இல்லாதபோதும், பிள்ளைகளுக்கும் குடும்பத்திற்கும் நீதான் நிழலாக இருக்க வேண்டும்.' - தோஹாவிலோ அல்லது துருக்கியிலோ நாங்கள் தங்கியிருந்த எந்த இடத்திலும் ஒரு ஜன்னல் வழியாக ஒரு ஆயுதம் பாயும் என்று நாங்கள் எப்போதும் எதிர்பார்த்தோம். அதனால்தான் கடைசி இரண்டு மாதங்களாக அம்மா அப்பாவிடமிருந்து ஒருபோதும் பிரியாமல் இருக்க முடிந்தவரை முயற்சித்தார். தியாகியாகும் ஏறத்தாழ இரண்டு வாரங்களுக்கு முன்பு ஒருமுறை அம்மா அப்பாவிடம் கூறினார், 'ஹாஜி.. என் கால்கள் எப்போதும் உங்கள் கால்களுடன் இணைந்து இருக்க வேண்டும் (எங்கு சென்றாலும் என்னையும் அழைத்துச் செல்ல வேண்டும்). எனக்கு உங்களோடு ஷஹீதாக வேண்டும்.'
'ஹாஜ்ஜா, நான் இல்லாதபோதும் குழந்தைகளுக்கு நிழலாக நீ இருக்க வேண்டும்.'
'குழந்தைகள் அனைவரும் வளர்ந்துவிட்டனர். பெரியவர்களுக்கு அவரவர் குடும்பங்கள் உள்ளன. சிறியவர்கள் மூவரையும் அல்லாஹ் தியாகிகளாக எடுத்துக்கொண்டான். பிறகு ஏன் நீங்கள் என்னை இங்கே விட்டுவிட்டுச் செல்கிறீர்கள்?' என்று அம்மா கேட்டார்.
ஹனிய்யாவுடன் தியாகியாக வேண்டும் என்ற அம்மாவின் ஆசை நிறைவேறவில்லை. ஆனால், அப்பா தியாகியானதை அறிந்ததிலிருந்து, அம்மா மிகவும் பொறுமையுடன் நிலைமையை எதிர்கொண்டார்.
ஹனிய்யாவுடன் தியாகியான மெய்க்காவலர் வசீம் - அவருக்கும் அப்பாவுக்கும் இடையிலான உறவு குர்ஆனுடன் பிணைக்கப்பட்டிருந்தது. எந்தப் பரபரப்பிலும், வழக்கமான குர்ஆன் ஓதுதல்கள் தடைபடாமல் இருக்க, பயணத்தின்போது ஹாஃபிழ் வசீம் ஹனிய்யாவுக்கு ஓதிக் காட்டுவார். ஹனிய்யாவும் உடன் ஓதுவார். ஹனிய்யாவை விட வசீமின் ஓதுதல் இனிமையாக இருக்கும். தூஃபான் அல் அக்ஸா வந்தபோது தான் காஸாவில் இல்லாததை வசீம் கூறி அழுவார், குறிப்பாக சக ஊழியர்களின் தியாகத்தைப் பற்றி அறியும்போது.
தியாகியாகிய அன்று வசீமுக்கு உண்மையில் விடுமுறை. ஆனால் அன்றைய கடமையை அவர் கேட்டுப் பெற்றுக்கொண்டார். தியாகத்திற்குச் சற்று முன்பு வசீமும் அவருடன் இருந்த இரண்டு பேரும் ஹனிய்யாவின் அறைக்கு வெளியே உள்ள கூடத்தில் பேசிக்கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவர் வசீமின் தாடியைத் தடவிக்கொண்டு, "வசீம் இன்று இன்னும் அழகாக இருக்கிறாரே" என்றார்.
"காஸாவில் இருந்திருந்தால் வசீம் இவ்வளவு சீக்கிரம் தியாகியாகியிருப்பார்" - மற்றவர் கூறினார்.
"பிரார்த்தியுங்கள் அன்பர்களே" என்று கூறிக்கொண்டே வசீம் குர்ஆனை எடுத்துக்கொண்டு ஹனிய்யாவின் அறைக்குள் சென்று அங்கு அமர்ந்து ஓதிக்கொண்டிருந்தபோது, சில நிமிடங்களுக்குள் அந்த அறையில் தாக்குதல் நடந்தது. குர்ஆனை கையில் திறந்து பிடித்தபடிதான் வசீம் ஹனிய்யாவுடன் ஷஹாதத் அடைந்தார்.
பிரதமர் பொறுப்பேற்ற பிறகும், காஸாவில் உள்ள பீச் முகாமில் (முகய்யமு ஷாதிஉ) உள்ள வீட்டை விட்டு எங்கும் மாறிச் செல்ல ஹனிய்யா தயாராகவில்லை. ஃப லஸ்தீனத்தில் வாழும் வரை காஸாவில் உள்ள பீச்சிலிருந்து சுமார் 20 மீட்டர் தொலைவில் உள்ள அகதிகள் முகாமிலேயே வாழ்வது அவரது உறுதியான முடிவாக இருந்தது.
பிரதமராகப் பதவிப்பிரமாணம் செய்த அன்று இரவு வீட்டில் அனைவரையும் அழைத்து அவர் கூறினார், "பிள்ளைகளே, நீங்கள் இப்போது ஃபலஸ்தீன பிரதம மந்திரியின் பிள்ளைகள். இதற்கு முன் நீங்கள் எந்த நிலையில் இருந்தீர்களோ, அதே நிலையை இந்த பொறுப்பின்போதும் அதற்குப் பிறகும் வாழ்வில் நிலைநிறுத்திக் கொள்ளுங்கள். நீங்கள் இந்த அகதிகள் முகாமின் பிள்ளைகள், மேற்கு மஸ்ஜிதின் பிள்ளைகள், இஸ்மாயில் ஹனிய்யாவின் பிள்ளைகள். மக்கள் தங்கள் தேவைகளுடன் உங்களை அணுகுவார்கள். தகுந்த முறையில் உதவி செய்யுங்கள், துக்கத்திலும் மகிழ்ச்சியிலும் அவர்களுடன் நில்லுங்கள், பரிசுகள் உங்களுக்கு முன்னால் உள்ள கடினமான சிவப்பு கோடு. நான் ஒருபோதும் சகித்துக் கொள்ள மாட்டேன். நாட்டின் மற்றும் பிராந்தியத்தின் முதல் இஸ்லாமிய அரசியல் பிரதமர் என்பதால் பல குற்றச்சாட்டுகளை நாம் எதிர்கொள்வோம். அவற்றை எதிர்கொள்ள அல்லாஹ்வின் தூதரை விட வேறு எந்த முன்மாதிரியும் நமக்கு இல்லை..."
ஆட்சியில் இருந்த காலத்திலோ அல்லது அதற்கு முன்போ, தனது சொந்த பிள்ளைகளுக்காக ஒரு கோப்பிலும் அபுல் அபாத் கையெழுத்திடவில்லை. கழுத்தில் எந்த சுமையும் இல்லாமல் அல்லாஹ்வை சந்திக்க அவர் விரும்பினார்.
தூஃபான் அல் அக்ஸா தொடங்கிய போது ஹனிய்யா காஸாவில் இல்லாத நிலையில். ஆனால் அறிந்த நிமிடம் முதல் காஸாவுக்கு வெளியே காயிதுத்தூஃபான் (வெள்ளத்தின் தலைவர்) என்ற பங்கை ஏற்றுக்கொண்டு, தொடர்ந்து பயணம் செய்தும் பேசியும் நிலைத்து நின்றார். ஷஹாதத்தின் தேரில் ஏறும் வரை.
- இவைகள் மூத்த மகன் அப்துஸ்ஸலாம் ஹனிய்யாவின் சாட்சியங்களிலிருந்து எடுக்கப்பட்டவையாகும்.
20-21 ஆம் நூற்றாண்டின் இந்த அவசர உலகில் வாழ்ந்து, உயிரையும் வாழ்க்கையையும் அல்லாஹ்வுக்கு சாட்சியமாக்கி, குர்ஆனை தன் வாழ்வின் குணமாகக் கொண்டவர் என்று குடும்பத்தினராலும், சக ஊழியர்களாலும், உள்ளூர் மக்களாலும் சாட்சியப்படுத்தப்பட்ட ஒரு பிரதமர் நமக்கு இருந்தார்.
அவர் காயிதுத்தூஃபான் அபுல் அபாத் இஸ்மாயில் ஹனிய்யா. அவருக்கு சமகாலத்தவராக இருந்தபோதிலும், உலகின் ஒரு முனையில் வாழ வாய்ப்பளித்த இறைவனே, உனக்கே எல்லாப் புகழும்!
DrCK Abdulla

Post a Comment