Header Ads



அல்லாஹ் தவ்பீஃக் செய்வானாக, அல்லாஹ் நஸீப் ஆக்குவானாக..!


இந்த இரண்டு பிரயோகங்களையும் நாம் அடிக்கடி  கேட்கிறோம், ஆனால் அவற்றின் கருத்தாழத்தை உள்வாங்குகிறோமா? என்பது கேள்வி.


நாம் ஒரு கருமத்தில் ஈடுபட திட்டமிடுகிறோம், அதில் வெற்றிகரமாக ஈடுபடவும் நிறைவேற்றவும் அல்லாஹ் துணை நிறாபானாக, அதனை எமக்குரிய செயலாக அடைவாக ஆக்கி விடுவானாக!  என்பது தான் அவற்றின் மேலோட்டமான பொருள்.


நாம் ஒன்றை நாடி திட்டமிட்டு அதனை செய்ய முடியாமல் போவது, அல்லது பாதியில் தோல்வியில் முடிவது என்ற நிலை வருவதுமுண்டு அவ்வேளை அது எமக்கு நஸீப் ஆக வில்லை என சொல்லிக் கொள்வோம்.


தாம் எதிர்பார்ப்பவை நடக்காது விட்டால், தோல்வியில் முடிந்தால் அதனை விட சிறந்ததை அல்லாஹ் தருவான் என்று உண்மையான விசுவாசிகள் நம்புகிறார்கள்.


ஆனால், எமது பொடுபோக்கு, குறை குற்றங்கள், பாவங்கள், உண்மையான ஆர்வம் இன்மை காரணமாக ஒரு விடயம் தவறிப் போகின்ற சந்தர்ப்பங்களும் இருக்க முடியும்.


எம்மை நாங்கள் சுயவிசாரணை செய்து தவ்பா இஸ்திஃபார் செய்து தவறுகள் பாவங்களில் இருந்து மீண்டு அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கை இழக்காது அந்த தவ்பீஃக், நஸீபினை அடைந்து கொள்ள முயற்சிக்க வேண்டும்.


அதாவது அவற்றிற்கு அருகதை பாக்கியம் பெற்றவர்களாக எம்மை ஆக்கிக் கொள்ள வேண்டும்., அருகதையற்றவர்களாக,  பாக்கியம், கொடுப்பினை இல்லாதவர்களாக, நஸீபில்லாதவர்களாக ஆகிவிடாது எம்மை நாம் பாதுகாத்துக் கொண்டு அல்லாஹ்விடம் பாதுகாவலும் தேடல் வேண்டும்!


குறிப்பாக அமல் இபாதத்கள், வணக்க வழிபாடுகள், தான தர்மங்கள், அறப்பணிகள், பொதுப் பணிகள், தனிநபர் குடும்ப சமூக பொறுப்புகள் கடமைகளை முறையாக நிறைவேற்ற பாக்கியம்  பெற்றவர்களாக, அருகதை உடையவர்களாக, நஸீபுடையவர்களாக, தவ்பீஃக் பெற்றவர்களாக நாம் ஆக முயற்சிக்க வேண்டும்!


அவற்றில் உண்மையான எண்ணம், உளப்பூர்வமான ஆர்வம் எமக்குள் ஏற்படாத வரை, அவற்றில் எம்மை நாம் ஈடுபடுத்திக் கொள்ள முடிவதில்லை!


ஆனால், அவற்றை சிறந்த முறையில் நிறைவேற்றும் பலரை நாம் கண்டு ஆச்சரியப் படுகிறோம், அவர்களுக்கு அல்லாஹ் தவ்பீஃக் செய்திருக்கிறான், நஸீபாக்கி இருக்கிறான்.


எல்லாம் வல்ல அல்லாஹ் அல்குர்ஆன் அருளப்பட்ட புனிதமிகு  ரமழான் மாதத்தை சிறப்பாக கழிக்கும் அருகதையை பாக்கியத்தை பெற்ற நல்லடியார்களாக ஆகி விட எமக்கும் நஸீபாக்கி தவ்பீஃக் செய்வானாக!


எல்லாம் வல்ல அல்லாஹ், சொல்லொனாத் துயரங்களுக்கும் கொடுமைகளுக்கும் ஆளாக்கப்பட்டுள்ள பலஸ்தீன் காஸா மக்களுக்கு இப்புனித மாதத்தில் விடுதலை விமோசனத்தையும் வெற்றிகளையும் தருவானாக!


என்னையும் உங்களையும் எமது பெற்றார் உடன் பிறப்புகள், மனைவி மக்கள், உறவினர்கள் ஆசான்கள், அறப்பணிகள் புரிவோர் அனைவரையும் எல்லையில்லா தன் கருணை கொண்டு அரவணைத்துக் கொள்வானாக!


மஸீஹுத்தீன் இனாமுல்லாஹ்

No comments

Powered by Blogger.