Header Adsநாட்டில் கடும் வறட்சி - மின்சாரம், குடிநீரில் விநியோகத்தில் தடை வரலாம் - முற்றுகை குறித்தும் எச்சரிக்கை


விவசாய நடவடிக்கைகளுக்கான நீர் பிரச்சினை தொடர்பில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (06) விசேட கலந்துரையாடல் ஒன்று நடைபெறவுள்ளது.


இந்த கலந்துரையாடல் இன்று பிற்பகல் 03.00 மணிக்கு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


இது தொடர்பான கலந்துரையாடலுக்காக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர மற்றும் மகாவலி அதிகார சபையின் அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.


வறட்சியான காலநிலை காரணமாக, நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் வரட்சியான காலநிலை காரணமாக விவசாய நடவடிக்கைகளுக்கு தேவையான நீரைப் பெற்றுக்கொள்வதில் பாரிய நெருக்கடி ஏற்பட்டுள்ளது.


உடவலவ நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாக வீழ்ச்சியடைந்து வருவதால் விவசாய நிலங்களுக்கான நீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.


மின்சார சபைக்குட்பட்ட சமனல குளம் நீர்த்தேக்கத்தில் இருந்து அந்த விளைநிலங்களுக்கு தண்ணீர் திறந்து விடக்கோரி வளவ பிரதேச விவசாயிகள் தற்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.


இதேவேளை, தற்போதைய வறட்சியான காலநிலை காரணமாக குடிநீர் விநியோகம் தடைபடலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை வலியுறுத்தியுள்ளது.


அவ்வாறு ஏற்பட்டால் நீர் விநியோகத்தை மட்டுப்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என அதன் பிரதிப் பொது முகாமையாளர் பியால் பத்மநாத தெரிவித்துள்ளார்.


நாட்டில் நிலவும் கடும் வரட்சியின் போது விவசாயிகள் எதிர்நோக்கும் சிரமங்களை கருத்தில் கொண்டு மின்சார சபை வளைந்து கொடுத்து பயிர்களுக்கு தண்ணீர் விடுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.


கடும் வரட்சி காரணமாக உடவளை நீர்த்தேக்கத்தின் நீர் மட்டம் தொடர்ந்து குறைந்து வருகின்றது.


இன்று காலை நிலவரப்படி நீர் கொள்ளளவு 0.68 சதவீதமாக குறைந்துள்ளது.


எவ்வாறாயினும், நீர் வெளியேற்றத்தை நிறுத்துவதற்கான உத்தரவு எதுவும் பிறப்பிக்கப்படவில்லை, ஆனால் நீர்த்தேக்கத்திலிருந்து தண்ணீரை வெளியேற்றுவதற்கு போதுமான அழுத்தம் இல்லை என்று நீர்த்தேக்கம் தொடர்பான அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.


வறட்சியால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள உடவளை நீர்த்தேக்கம் தற்போது கிட்டத்தட்ட வறண்டு போயுள்ளது.


அப்போது நீர்த்தேக்கத்தில் மூழ்கியிருந்த கிஞ்சிகுனே புராதன கங்காராம ஆலயத்தின் இடிபாடுகள், நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வேகமாகக் குறைந்த நிலப்பகுதியில் காணப்பட்டது.


இதேவேளை, விவசாயத்திற்கு தேவையான தண்ணீரை வழங்க அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால் நாளை இலங்கை மின்சார சபையின் தலைமை அலுவலகத்தை முற்றுகையிடவுள்ளதாக பாராளுமன்ற உறுப்பினர் காமினி வலேபொட தெரிவித்துள்ளார்.


இதேவேளை, தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக நீரைச் சிக்கனமாகப் பயன்படுத்தாவிட்டால், குடிதண்ணீர் நெருக்கடி ஏற்படலாம் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

1 comment:

  1. நீர் என்பது அல்லாஹ்வின் மிகப் பெரிய அருள். அருள் ஒரு கணம் இல்லாவிட்டால் மனித இனமே அழிந்துவிடும். இந்த நீர் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு உடனடிக்காரணம் மனிதர்கள் செய்யும் பாவங்களும் அநியாயங்களும் அட்டூழியங்களுமாகும். அல்லாஹ்வின் பூமியில் நீதியையும் சத்தியத்தையும் நிலைநாட்டுவதுதான் மனித இனத்தின் அடிப்படைக் கடமையாகும். இந்தக் கடமையைப் புறக்கணித்து கஞ்சத்தனமும் களவும் கொள்ளையிலும் ஈடுபடும் அரசாங்கமும் மனிதர்களும் இந்தப் பூமிக்கும் மக்களுக்கும் ஒருபோதும் நன்மை செய்யமாட்டார்கள், அதற்குப் பதிலாக பாவச் செயல்களின் இயல்பான நேரடி விளைவுதான் கடும் வரட்சியும்,பஞ்சமும் பல்வேறு இயற்கை அழிவுகளுமாகும். எனவே இந்த கடும் வரட்சியை அவனும் இவன்களும் சேர்ந்து கூட்டங்களும் உரையாடல்களும் செய்து ஒரு போதும் கடும்வரட்சியையையும் பஞ்சத்தையும் நீக்க முடியாது. அத்தனை பாவிகளும் அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கேட்டு பஞ்சமா பாதகச் செயல்களை உடனடியாகக் கைவிட்டு இறைவனிடம் இறைஞ்சி நன்மைகளை செய்ய ஆரம்பித்தால் மனிதனுக்கு பயன்படும் வகையில் மழை பொழியும்.இது தவிர வேறு மேற்கொள்ளப்படும் அத்தனை கூட்டங்களும் நேரங்கள் கால வீணடிப்பு மாத்திரம்தான்.

    ReplyDelete

Powered by Blogger.