Header Ads



"அவருக்கான மத சடங்குகளை செய்யுங்கள்..." என புலிகளிடமிருந்து வந்த செய்தி


"தாவூத் மாஸ்டர்" கடத்தப்பட்டார் என்கிற செய்தி விடிகிற நாள் ஹஜ்ஜூப் பெருநாளாக இருக்கத்தக்கதாய் 03-07-1990 இன் இரவைப் பதற வைத்தபோது, அன்றும், அதற்கடுத்த பெருநாள் உட்பட்ட நாட்களிலும் ஏறாவூர் எப்படி இருந்திருக்கும் என்பதை மீண்டுமொரு முறை நினைவுபடுத்த விளைகிறது மனது.  


33  வருடங்கள் கடந்தோடிவிட்ட தருணத்தில் இந்த தலைமுறையினர்  அந்த ஆளுமையைப் பார்க்கவோ, பழகவோ வாய்ப்புக் கிடைக்காமல், 


பெரியவர்களால் அவ்வப்போது நினைவு கூறப்படும் அவரது நினைவுகளிலிருந்தும், அவர் ஆசிரியராக, அதிபராக, எழுத்தாளராக, பள்ளிவாயல் நிர்வாக சபை தலைவராக, யுத்தத்தின் முனைகள் இந்த ஊரினை நோக்கித் திருப்பப்பட்ட போதெல்லாம் அஞ்சாது முகம் கொடுத்தவராக அவர் எழுத்துக்களில் பதிந்து சென்ற நினைவுகளிலிருந்தும் அவரைப் பார்க்க இப் பதிவுகள் துணையாக அமையட்டும்.


எங்களது ஊரின் முதல் பட்டதாரி அவர். அதிலும் எங்களது ஊரின் முதல் பட்டதாரி ஒரு ஆசிரியர் என்று சொல்வதில் இரட்டிப்புப் பெருமை எமக்கு. 


அதனாலேதான் இன்று இந்த ஊரின் சிறந்த ஆளுமைகளாக கல்வி, அரசியல், விளையாட்டு, வியாபாரம் என்கிற அத்தனையிலும் நல்ல நிலையில் உள்ள  வயதில் மூத்த பெரியவர்களில் அநேகமாக எல்லோரும்  ,  அவரது மாணாக்கராய் இருந்திருக்கக் காண்கிறேன்.


அலிகாரில் அதிபராக  அவர் இருந்த நாட்களில் காலை நேர ஒன்று கூடல்கள் எல்லாம் குண்டூசி விழுந்தால் கேட்கும் அமைதி நிலவும், 


அதையும் மீறி மாணவர்களிடத்திலிருந்து சத்தம் வந்தால் அவரது குரலும். பார்வையும் போதும் மீண்டும் அமைதியைக் கொண்டு வர. 


பாடசாலைக்கு வெளியே ஊருக்கான பிரச்சினைகள் வரும் போதெல்லாம் தாவூத் மாஸ்டர் அங்கிருப்பார்,  அது அன்றைய ஆயுதக் கும்பல்களின் பிரச்சினையான போதிலும் கூட....! மட்டக்களப்பு நகரில் நடைபெற்ற கூட்டமொன்றில் அவர் ஆற்றிய காரசாரமான உரையொன்றுதான் இனியும் இவரை வைப்பது ஆபத்து என்கிற எண்ணத்தை புலிகளுக்கு கொடுத்திருக்கக் கூடும்.


எங்கு புத்தகங்கள் அழிக்கப்படுகிறதோ அங்கு மிக விரைவில் மனிதர்கள் அழிக்கப்பட இருக்கிறார்கள் என்கிற கூற்றுக்கு இணங்க எல்லா வகையான ஆளுமைப் பண்புகளும் நிறைந்து உரிய உரிய இடங்களில் அவற்றை சமூகத்துக்கு ஆதரவாயும், எதிரிகளுக்கு எதிராயும் பிரயோகித்து வந்த தாவூத் மாஸ்டர் உட்பட்ட கல்வியலாளர்கள் கடத்தப்பட்டு, கொல்லப்பட்ட வக்கிரங்கள் அரங்கேறி நான்கைந்து மாதங்களில் ஒரே இரவில் 121 உயிர்களை இந்த ஊர் பறிகொடுத்த துயர் நிகழ்ந்த போதுதான், அதுவரை விவசாயத்திலும், இதர வியாபாரங்களிலும் நாட்டம் கொண்டிருந்த இந்த ஊரின் பொதுமக்களின் மூளைகளில் ஒரு விடயம் தட்டுப்பட்டது; 


கருமையாக தெரியும் எதிர்காலத்தை வெல்லவும், தாவூத் மாஸ்டர் போன்ற ஆளுமைகளை மீண்டும் உருவாக்கவும் எமக்கான ஆயுதம் 'கல்வி' ஒன்றே....! அன்று அவர்கள் எடுத்த திருப்பம்தான் இன்று கல்வியில் நாம் இந்த நிலையிலே இருப்பதற்கு காரணம்.


ஆசிரியர் பதவிகளுக்குள் மட்டும் கட்டுட்டு கிடந்த நம்மை வைத்தியர்களாக, பொறியியலாளராக, அரச நிருவாகிகளாக, துறை சார்நிபுணர்களாக என்று பல்வேறு துறைகளிலும் ஆட்கொள்ள வைத்திருப்பது இவர்களது இழப்பின் வலிமைதான் என்றால் மிகையாகாது. 


"அவருக்கான மத சடங்குகளை செய்யுங்கள்..." என்று புலிகளிடமிருந்து வந்த செய்தி நாம் சதாகாலம் முன்னேறிச் சென்று உலகை வெல்ல வேண்டும் என்கிற உயிர்ப்பை எங்களுக்குள் விதைத்தபடி இருப்பதற்காய் நினைவிற் கொள்ள வேண்டிய செய்தி.


தாவூத் மாஸ்டர் மீண்டும் மீண்டும் பேசப்பட வேண்டியவர், எழுதப்பட வேண்டியவர், வாசிக்கப்பட வேண்டியவர், அடுத்த சந்ததிக்கு கொண்டு செல்லப்பட வேண்டியவர்.


ஏறாவூர் நஸீர்..

No comments

Powered by Blogger.