லட்சுமி என்கிற சகோதரியின், நெஞ்சம் நெகிழச் செய்கிற பதிவு
இது தான் ஷஹாதத்!
சத்தியத்துக்கு சான்று பகர்தல் என்பதற்கு பொருள் இது தான்.
நடமாடும் இஸ்லாமாக வாழ்ந்து காட்டுவது என்பதற்கு அர்த்தமும் இது தான்.
முஸ்லிம்கள் எல்லோரிடமும் எதிர்பார்க்கப்படுகின்ற அழகிய நடத்தையும் இதுதான்.
ஆர் எஸ் லட்சுமி என்கிற சகோதர சமுதாயத்தைச் சேர்ந்த சகோதரியின் நெஞ்சம் நெகிழச் செய்கிற அனுபவப் பதிவு இதோ! :
தோஹா விமான நிலையம்….
விமானம் சற்று நேரத்தில் புறப்பட போகிறது என்ற கேப்டனின் அறிவிப்பு அரபிக்கிலும், ஆங்கிலத்திலும் கணிரென வருகிறது…
தோஹாவிலிருந்து சான்ஃபிரான்ஸிஸ்கோ செல்லும் விமானம்….
சுமார் 16 மணி நேர பயணம்…
இருக்கை பட்டையை (seat belt) அணிந்து கொள்ளுமாறு விமான பணிப்பெண் என்னருகே வந்து சொல்லி விட்டுப் போகிறார்…
மூன்று இருக்கைகளில் சன்னலோரத்து இருக்கை காலி.. நான் நடுவில்.. பக்கத்து இருக்கையில் 70 வயது மதிப்புள்ள ஓர் அமெரிக்க மூதாட்டி…
விறு விறுவென்று ஒடி வந்தான் அவ்விளைஞன்…
இஸ்லாமிய இளைஞன்…
வெண்ணிற ஆடை..
நெஞ்சளவு தாடி…
தலையில் தக்கியா…
கரங்களில் பெரிய புத்தகம்..
சன்னலோரத்து இருக்கை என புன்னகைத்தான்…
பக்கத்து இருக்கை மூதாட்டியும் எழ நானும் எழுந்து இருக்கைகளினின்று வெளி வந்து பாதையில் பின்னால் நின்றோம்..
மன்னிக்கவும் என்று சொல்லிக்கொண்டே சன்னலோரத்து இருக்கையில் அமர்ந்தான்..
நாங்களும் வந்தமர்ந்தோம்…
கரங்களில் அப்பெரிய புத்தகத்தை விரித்து சன்னமான குரலில் தொழுதான்..
அதைக் கேட்பதற்கு இனிமையாக இருந்தது…
விழிகளை மூடி அமைதி கொண்டேன்..
விமானம் பத்திரமாக சான்பிரான்ஸிஸ்கோ செல்ல வேண்டும் , அதற்காக பிரார்த்தனை என்று புன்னகைத்தான்.
என் அலைபேசி எடுத்து் இருக்கை எதிரில் இருந்த இணைப்பில் இணைக்க முயற்சித்தேன்…
ஆப்பிளா என வினவினான்…
ஆம் என்றேன்..
இதில் இணைக்க முடியாது .. என்னிடம் power bank இருக்கிறது தருகிறேன் எனக் கொடுத்தான்..
நேரெதிர் தொடுதிரையில் திரைப்படம் பார்க்கலாமென பார்த்தால் அதுவும் சரியாக வரவில்லை…
தொடுதிரையில் எனக்கு என்ன வேண்டுமோ அதை சரி செய்கிறான்….
குளிரில் நடுங்குகிறேன். விமான பணிப் பெண்ணை அழைத்து இன்னொரு போர்வை வரவழைக்கிறான்…
உணவுத் தட்டை அழகாக சாப்பிடும் வண்ணம் அடுக்கித் தருகிறான்.
காலை மாற்றி மாற்றி வைத்து சிரம ப்படுகையில் தான் ஒடுங்கி உட்கார்ந்து எனக்கு நிறைய இடம் தருகிறான்…
எதையாவது தவற விட்டு கீழ் குனிய முடியாமல் தேடுவேன்.. உடன் குனிந்து அவன் எடுத்து தருவான்..
ஒவ்வொரு முறை அவன் தொழுகையிலும் நானும் விழிகள் மூடி என்னை அமைதிப் படுத்திக் கொள்வேன்..
கழிவறைக்கு செல்ல வேண்டும் போலிருந்தால் பக்கத்து இருக்கை மூதாட்டியை எழுப்ப மாட்டேன்.. அவர் அயர்ந்த தூங்கிக் கொண்டிருப்பார்..
அவர் எழும் வரை காத்திருப்பேன்.. அவர் எழுகையில் எழுவேன். அதே போல் அவனும் காத்திருந்திருப்பான் போலும்.. பாவம் தூங்கிக் கொண்டிருந்தார் என சொல்லி வெளி வருவான்…இந்த வயதில் இத்தனை பொறுப்பா!!!
விமானதிற்குள்ளேயே கால் வலிபோக நடப்பேன் . சூடாக எதுவும் குடிக்கிறீர்களா என டீ வாங்கித் தருவான்… நான் நடக்கும் வரை நின்று கொண்டே இருப்பான்…Children please come என அம்மூதாட்டி அழைக்கையில் இருவரும் வந்து அமர்ந்து விடுவோம்….
ஏறக்குறைய என் மகன்கள் விமானப் பயணத்தில எப்படி என்னைக் காப்பார்களோ அப்படி என்னைக் காத்தவன் அவன்..
ஒர்முறை கூட , உங்கள் பெயர் என்ன, எதற்கு அமெரிக்கா போகிறீர்கள் என்ற ஓர் வினா கூட அவன் கேட்டதில்லை..
ஆனால் நான் மட்டும் அவனது பெயர் கேட்டேன்.. முகமது அலி என்றான்..
இறங்கும் நேரம் வந்தது….
விழிகள் பனிக்க கரங்கள் கூப்பினேன்..
அழகாக தலையசைத்தான்..
அவனை மகனே என விளிக்க ஆசை…
போய்வருகிறேன் மகனே எனத் தமிழில் உரைத்தேன்…
அரபி பேசும் அவனுக்கு எப்படி புரியும்?
புரியாமல் விழித்து புன்னகைத்தான்…
அன்பு மகனே,
நீ எதற்காக அமெரிக்கா செல்கிறாய் எனத் தெரிய வில்லை..
உன் அம்மா அப்பா எங்கிருக்கிறார்கள் எனக் கேட்க வில்லை…
படிக்கிறாயா? பணி புரிகிறாயா ?
திருமணம் ஆக விட்டதா? பிள்ளைகள் எவ்வளவு?
எதுவும் நான் கேட்க வில்லை..
ஆனால் ஆனால் நீ நலமாக அனைத்து வளங்களையும் பெற வேண்டும் என மனது கோருகிறது…
சான்பிரான்ஸிஸ்கோ விமான நிலையத்தில் மகன் பூங்கொத்து அளித்து எனைக் கட்டி அணைத்து வரவேற்ற போது , நீ ஓர் சிறு புன்னகையுடன் எங்களைக் கடக்கிறாய்…
அப்புன்னகை இன்னும் இன்னும் என் மனதில் உறைந்து போயிருக்கிறது
பூமி உருண்டை எனில், உனை ஒர் நாள் மறுபடியும் சந்திப்பேன்..
என் தாய்த்திரு நாட்டிற்கு உனை அழைப்பேன்.
என் கரங்களால் சமைத்த உணவை பரிமாறுவேன்…
எனை உன் தாயாக ஏற்றுக் கொள்வாயா என
விண்ணப்பம் தொடுப்பேன்..
ஏற்றுக் கொள்வாயா மகனே???
.........
இதனைப் பகிர்ந்து உதவிய தமிழ்நாடு ஹஜ் சர்வீஸ் சொசைட்டி தன்னார்வத் தொண்டர் சகோதரர் ஷம்சுத்தீன் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகள்!

Post a Comment