Header Ads



விந்தணு தானத்தால் கொடூரங்கள் - தந்தையை தேடியபோது கிடைத்த பேரதிர்ச்சி (படங்கள்)


- BBC -

ஈவ் வைலிக்கு அப்போது 16 வயது. அவர் விந்தணு தானம் மூலம் பிறந்தார் என்பது அப்போதுதான் அவருக்குத் தெரிய வந்தது.


அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் வசிக்கும் ஈவுக்கு இந்தத் தகவல் பெரும் ஆச்சரியத்தை அளித்தது. இதைத் தொடர்ந்து, தனது உண்மையான தந்தை யார் என்பதை அறிந்துகொள்ளும் ஆவல் அவருடைய மனதில் எழுந்தது.


இந்த ஆர்வம் அதிகரிக்க, அதிகரிக்க அவர் பல விஷயங்களைத் தேடிப் பயணித்தார். இந்தப் பயணத்தில் அவர் அதிர்ச்சியூட்டும் தகவல்கள் பலவற்றை எதிர்கொள்ளும் நிலை ஏற்பட்டது.


உண்மையில், குழந்தை பருவத்திலிருந்தே ஈவ் தனது தந்தையாகக் கருதி வந்த நபர், ஈவ் 7 வயதாக இருந்தபோதே இதய நோய் காரணமாக உயிரிழந்துவிட்டார்.


இதற்குப் பிறகு, ஈவ் தனது 16வது வயதில் விந்தணு தானம் செய்த தந்தைக்கு அறிமுகமானார். அவரை அப்பா என்றும் அழைக்கத் தொடங்கினார். அதுமட்டுமின்றி, தனது திருமணத்தின்போது, அவருக்கு தந்தைக்கு அளிக்க வேண்டிய மரியாதையையும், மதிப்பையும், அவருக்கான இடத்தையும் அளித்தார்.


நிஜ உலக ஹீரோக்களின் கதைகளை உங்களிடம் கொண்டு வரும் பிபிசி தமிழின் "Being Me" தொடரில் வெளியான கட்டுரைகளை இங்கு படிக்கலாம்.


ஆனால் பின்னொரு காலத்தில் ஈவின் மகனுக்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்ட போதுதான் ஈவின் பிறப்பு குறித்த அதிர்ச்சி கலந்த உண்மைகள் அவருக்குத் தெரிய வந்தன.



திரைப்பட கதையைப் போல் பல ஆச்சரியங்களைத் தாங்கி வரும் இந்தக் கதையை அவரே எழுதுகிறார். தொடர்ந்து படியுங்கள்.


அது ஒரு குடும்ப ரகசியம்

நான் அப்போது கல்லூரி மாணவியாக இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் ஒரு நாள் என் அம்மாவின் மின்னஞ்சலின் இன்பாக்ஸை பார்க்க நேர்ந்தது. குறிப்பிட்ட காரணம் எதுவும் இல்லை என்றாலும், எதேச்சையாக நான் அந்த இன்பாக்ஸை பார்த்துக் கொண்டிருந்தேன்.


அதில், கலிஃபோர்னியா கிரையோபேங்க் என்ற மின்னஞ்சல் கணக்கில் இருந்து என் அம்மாவுக்குத் தொடர்ந்து பல மின்னஞ்சல்கள் வருவதை நான் கவனித்தேன்.


அதில் ஒரு மெயில் எனது பிறந்த நாள் குறித்த விவரங்களைத் தெரிவித்திருந்தது. அந்த மெயிலை பார்த்ததும், எனக்குத் தெரியாமல் ஏதோ ஒரு விஷயம் நடந்திருக்கிறது என்று என் உள்ளுணர்வுகள் தெரிவித்தன.


இதைத் தொடர்ந்து, கூகுளில் கலிஃபோர்னியா கிரையோபேங்க் பற்றிய தகவல்களைத் தேடினேன். அப்போது அது செயற்கை கருவூட்டல் மையம் என்பது எனக்குத் தெரிய வந்தது.


அதுமட்டுமல்லாமல், நானும் இதே மருத்துவமனையில் இருந்து விந்தணு தானம் பெற்று செயற்கைக் கருவூட்டல் மூலம் பிறந்தேன் என்பதை உணர எனக்கு அதிக நேரம் எடுக்கவில்லை.


இதை உணர்ந்த பிறகு, நான் முதலில் கொஞ்சம் அதிர்ச்சியடைந்தேன். எனக்குக் குழப்பமாக இருந்தது.


ஒவ்வொரு குடும்பத்திற்கும் சில ரகசியங்கள் இருக்கும். ஆனால் எங்கள் குடும்பத்தின் மிகப்பெரிய ரகசியமே "நான்" தான் என்பதை உணர்ந்தேன்.


ஆனால் என்னுடைய தந்தை யார்?

என் தந்தையின் பெயர் டக். அவர் தான் எனது தந்தை என நான் நினைத்துக்கொண்டிருந்தேன். அவர் ஏற்கெனவே எனது இளம் வயதில் இறந்துவிட்டதால், எனக்குத் தந்தை இல்லை என்றே நான் கருதியிருந்தேன்.


என் 16வது வயதில்தான் நான் விந்தணு தானம் மூலம் பிறந்தவள் என்பதே எனக்குத் தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து என் உண்மையான தந்தையைத் தேடத் தொடங்கினேன்.


என் 18வது வயதில் இந்தத் தேடுதல் முயற்சி தீவிரமடைந்தது. அம்மாவின் மருத்துவ ஆவணங்கள் மற்றும் என்னைப் பற்றிய வரலாறு அனைத்தையும் சரிபார்த்தேன்.


1980களில் நான் என் தாயின் வயிற்றில் இருந்தேன். அந்தக் காலகட்டத்தில் அனைத்து மருத்துவமனைகளிலும் உள்ளூர் நன்கொடையாளர்களிடம் இருந்து மட்டுமே விந்தணு தானம் பெறப்பட்டு, பின்னர் செயற்கை கருவூட்டல் செய்யப்பட்டது.


இருப்பினும், விந்தணு தானம் செய்தவர் யார் என்பது குறித்து அதை ஏற்று கருவுறும் பெண்ணுக்கோ, பிற்காலத்தில் அவருக்குப் பிறக்கும் குழந்தைக்கோ தெரிவிக்கப்படுவதில்லை.


சுருங்கச் சொன்னால், விந்தணு தானம் செய்தவர் யார் என்பது சட்டப்படி ஒரு ரகசியம். அந்தத் தகவல் யாருக்கும், எப்போதும் தெரிவிக்கப்படுவதில்லை.


கணவன், மனைவிக்கு இடையே செயற்கை கருவூட்டல் செய்யும்போதும், குறிப்பிட்ட ஓர் ஆணின் விந்தணுவை தனிப்பட்ட விருப்பத்துடன் ஒரு பெண் பெறும் போதும், அந்த ஆண்-பெண் என இருவருடைய சம்மதத்தின் பேரில் விந்தணு தானம் செய்தால் மட்டுமே, தானம் செய்தவர் யார் என்பது தெரிய வரும்.


விந்தணு வங்கிகளில் இருந்து அதைத் தானமாகப் பெறும்போது, தானம் செய்தவர் யார் என்பது ரகசியமாகவே வைக்கப்படுகிறது.


உண்மையில், எங்கள் கிராமம் மிகவும் சிறியது. இருப்பினும், யாருடைய விந்தணு மூலம் நான் பிறந்தேன் என்பதைக் கண்டுபிடிப்பது, வைக்கோல் போரில் ஊசியைத் தேடுவது போன்றது.


மேலும், என் தந்தை யார் என்பதைக் கண்டுபிடிக்க நான் எங்கும் சென்று அலைந்து திரியும் நிலைமையும் இல்லை.


எனவே விந்தணு தானம் பெற்ற மருத்துவமனை தரப்பில் இருந்து விசாரிக்க முடிவு செய்தோம்.


கலிஃபோர்னியா கிரையோபேங்கில், யாருடைய விந்தணு வேண்டும் எனத் தேர்வு செய்ய உங்களுக்கு உரிமை உள்ளது. விந்தணு தானம் அளிப்பவரின் உடல்நிலை, திறமைகள், பொழுதுபோக்கு, ஆர்வங்கள், கல்வி, இரத்த பிரிவு மற்றும் பிற முக்கிய தகவல்களை நீங்கள் அறிந்துகொள்ள முடியும் என்றாலும், அவருடைய பெயரை நீங்கள் தெரிந்துகொள்ள முடியாது.


நாம் விரும்பும் குணாதிசயங்களுடன் கூடிய நபருடைய விந்தணுவை தேர்வு செய்து அதிலிருந்து செயற்கை கருவூட்டல் மூலம் குழந்தை பெறக்கூடிய நடைமுறை இது.


விந்தணு தானம் பெற்றபோது, எனது அம்மா, 106 என்ற எண்ணைக் கொண்ட நபரின் விந்தணுவைth தேர்வு செய்திருக்கிறார். அதற்கான ரசீதை என் அம்மா வைத்திருந்தார்.


முதலில் அந்த நபர் யார் என்று தெரிந்து கொள்ளும் ஆவல் மட்டுமே என்னுள் இருந்தது. ஆனால், பின்னர் அவரை என் தந்தையாகவே பாவித்து, அவர் முன் நிற்கவேண்டும் என ஓர் ஆசை எழுந்தது.


ஈவ் மற்றும் பிளேக்கின் திருமணத்தில் பங்கேற்ற ஸ்டீவ்



இதையடுத்து, 106ஆம் எண்ணாகப் பதிவு செய்து விந்தணு தானம் செய்தது யார் என்பது பற்றி கலிஃபோர்னியா கிரையோபேங்கிடம் கேட்டேன். இந்த முயற்சியில் ஒர் ஆண்டு போராட்டத்துக்குப் பின் எனது தந்தையின் மின்னஞ்சல் முகவரி கிடைத்தது.


முதலில் இ-மெயிலிலும், பிறகு தொலைபேசியிலும் பேசத் தொடங்கினோம்.


என் தந்தையின் பெயர் ஸ்டீவ், அயராத முயற்சிக்குப் பிறகு அவரை நான் உண்மையிலுமே கண்டுபிடித்தேன். அவர் மிகவும் நல்ல ஆளுமையாக இருந்தார்.


அதன் பின் அவரிடம், அமைதியான ஒரு நபரையும் என்னைக் கவனித்துக்கொண்ட ஒருவரையும் கண்டேன். இதை மிகவும் நல்லதொரு கனவாகவே உணர்ந்தேன்.


திகில் படங்களில் நீங்கள் பார்ப்பது போல் எனக்கு வேறு எதுவும் நடக்கவில்லை.


சில ஆண்டுகள் கழித்து எனக்கு திருமணம் நடந்தது. அந்த திருமணத்திற்கு அப்பா ஸ்டீவையும் அழைத்தேன். அவரும் இந்த திருமணத்தில் ஒரு தந்தையாக கலந்து கொண்டார்.


குழந்தையின் டிஎன்ஏவில் இருந்து துப்பு கிடைத்தது

ஓர் ஆண்டில் எனக்கு ஹட்டன் என்ற அழகான ஆண் குழந்தை பிறந்தது. எல்லாம் மிகவும் நன்றாகத் தொடங்கியது.


ஆனால் சில நாட்களிலேயே ஹட்டனுக்கு சில மருத்துவப் பிரச்சினைகள் இருந்தது எனது கவனத்துக்கு வந்தது. அவனுடைய உடலில் எப்போதும், எல்லா நேரத்திலும் ஏதோ ஒரு பிரச்சினை இருந்தது. அது என்ன பிரச்சினை என மருத்துவர்களால் கூட தெளிவாக கண்டறிய முடியவில்லை.


ஹட்டனுக்கு 3 வயதாக இருந்தபோது அவருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்தோம். அவனுக்கு மரபணு நோய் இருப்பதாக மருத்துவர் கூறினார். ஹட்டனுக்கு செலியாக் நோய் என்ற அரிய ஆட்டோ இம்யூன் நோய் இருந்தது.


ஈவின் தாய் மார்கோ வில்லியம்ஸ் தனது பேரக்குழந்தைகளான வின்னி, ஸ்கார்லெட் மற்றும் ஹட்டனுடன்


இது அவனுக்கு பரம்பரை நோயாக வந்ததாகவும் மருத்துவர்கள் கூறினர். என் மூலமாக அவனுக்கு இந்த நோய் வந்திருக்க வாய்ப்புள்ளது என்றும், ஆனால் சில காரணங்களால் அது என்னை பாதிக்கவில்லை என்றும் மருத்துவர்கள் தெரிவித்தனர்.


அதைக் கேட்டு நான் ஆச்சரியப்பட்டேன். ஏனென்றால் எனது குடும்பத்திலோ அல்லது தந்தை ஸ்டீவ் குடும்பத்திலோ எவருக்கும் இதுபோன்ற அறிகுறிகள் எதுவும் இல்லை. இதற்கிடையே, ஹட்டனின் டிஎன்ஏ எனது தந்தை ஸ்டீவின் டிஎன்ஏவுடன் பொருந்தவில்லை.


சோதனையின் போது ஹட்டனின் DNA உடன் பொருந்திய சிலரின் பட்டியலைக் கண்டேன். அப்போது என் அம்மா, "இவர்கள் உன்னுடைய சகோதரர்களாக இருக்கலாம் இல்லையா?" எனக் கேட்டார்.


அதன் பிறகு அந்த நபர்களை கண்டுபிடிக்க முயற்சி செய்ய ஆரம்பித்தேன். அதில் ஒருர் என்னை விட வயதில் மூத்தவர் எனத்தெரியவந்தது.


சில நாள் தேடலுக்குப் பிறகு எனது முயற்சி வெற்றியடைந்தது. எனது மகனின் டிஎன்ஏவுடன் பொருந்தியவர்களின் பட்டியலில் முதல் நபரை சந்தித்தேன்.


ஆனால் அந்த நபரின் பேச்சில் எந்த ஆச்சரியமும் இல்லை. நீண்ட நேர உரையாடலுக்குப் பின், அவர், "ஆம் நான் உன்னோட சகோதரனாக இருக்க முடியும் என்பது மட்டுமல்ல, உனது உண்மையான தந்தை யார் என்பதும் எனக்குத் தெரியும்," என்றார்.


அவர் சொன்ன பெயரைக் கேட்டதும் என் காலுக்குக் கீழே நிலம் அசைந்தது போல் தெரிந்தது.


எங்கள் இருவருக்கும் கிம் மெக்மோரிஸ் என்பவர் தான் தந்தை என்றும், எனது தாய் விந்தணு தானம் பெற்று செயற்கை கருவூட்டல் செய்த மருத்துவமனையில் அவர் மருத்துவராக இருந்ததாகவும் அந்த நபர் கூறினார்.


என்னுடைய அம்மாவுக்கும் அந்த மருத்துவர் தான் சிகிச்சை அளித்ததாகவும் அவர் என்னிடம் தெரிவித்தார். அதில் கவலைப்பட ஒன்றுமில்லை என்று நான் தொடக்கத்தில் நினைத்தேன்.


இருப்பினும், அதன் பின், எனது மகனுடைய டிஎன்ஏவுடன் பொருந்திய நபர்களின் பட்டியலில் இருந்த மேலும் இரண்டு மூன்று பேரைச் சந்தித்துப் பேசினேன்.


அவர்களுடனான கலந்துரையாடலுக்குப் பிறகு, அவர்கள் சொன்ன விவரங்களை அலசி ஆராய்ந்ததில் எனக்குக் கிடைத்த ஒரே பெயர் கிம் மெக்மோரிஸ்.


இறுதியில் வெளிச்சத்துக்கு வந்த அதிர்ச்சயூட்டும் உண்மை

என் அம்மாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் கிம் மெக்மோரிஸ் பற்றிய உண்மை இறுதியாக எனக்கு தெரிய வந்தது. 106-ம் எண்ணாகப் பதிவு செய்யப்பட்டிருந்த நபரிடமிருந்து விந்தணுவைப் பெற எனது அம்மா விரும்பிய போதிலும், அந்த விந்தணுவுக்குப் பதிலாக எனது தாயை கருவூட்டுவதற்கு கிம் தனது சொந்த விந்தணுவைப் பயன்படுத்தியுள்ளார்.


மருத்துவர் கிம் மெக்மோரிஸ் பல நோயாளிகளிடமும் இதைச் செய்திருக்க வேண்டும் என்றும் அப்போது எனக்குள் சந்தேகம் எழுந்தது.


இது எனக்கு உண்மையிலேயே அதிர்ச்சியாகவும், எரிச்சலாகவும் இருந்தது. என் தந்தை ஸ்டீவும், நானும் இந்த உண்மையை கண்டுபிடித்தோம். அதன் பின், அந்த மருத்துவரைத் தாண்டி, எனது அப்பாவைத் தேடும் முயற்சிகளை நிறுத்திவிட்டேன்.


பல ஆண்டுகளாக எனது தந்தை யார் என அறிந்துகொள்வதில் அவ்வளவு ஆர்வம் காட்டிய நான், மருத்துவர் கிம்மை எனது தந்தையாக ஏற்க முடியவில்லை. அம்மாவுக்கு அவர் செய்த துரோகத்தை நினைத்து என் உள்ளங்கால்களில் தீப்பிடித்தது போன்ற உணர்வு ஏற்பட்டது.


அதுமட்டுமின்றி, நான் ஏற்கெனவே எனது தந்தையாக பாவித்து வரும் தற்போதைய தந்தை ஸ்டீவை இழந்துவிடுவோமோ என்ற அச்சமும் என்னுள் ஏற்பட்டது. கடைசியில் அம்மாவைப் பற்றிய நினைவுகளும் வந்து என்னுள் ஒரு இனம்புரியாத கவலையை ஏற்படுத்தியன.


இந்த உண்மைகளை எல்லாம் அவர் அறிந்தால் அவருடைய மனம் எவ்வளவு வருத்தப்படும் என்று என்னால் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.


அவரிடம் சொல்லலாமா, வேண்டாமா என்ற குழப்பத்தில் மூழ்கியதால் பின்னர் எனது செல்ஃபோனை அணைத்துவிட்டேன். ஒரு கட்டத்தில், இப்போது நான் தெரிந்துவைத்துள்ள தகவல்களை அவரிடம் சொல்லவேண்டாம் என்றும், அப்போது தான் அவர் மகிழ்ச்சியுடன் இருப்பார் என்றும் நினைக்கத் தொடங்கினேன்.


ஆனால், முழுமையாக யோசித்த பிறகு, என்னவானாலும் சரி, நாம் உண்மையை எதிர்கொள்ளவேண்டும் என முடிவு செய்தேன்.


உடனடியாக அம்மாவைப் பார்க்க புறப்பட்டுச் சென்றேன். அவரிடம், "அம்மா, நான் உன்னிடம் பேச விரும்புகிறேன். ஸ்டீவ் என் தந்தை அல்ல. என் தந்தை டாக்டர் கிம் மெக்மோரிஸ். அந்த நேரத்தில் உனக்கு சிகிச்சை அளித்த மருத்துவர் அவர்," என்றேன்.


அம்மா அதிர்ந்து போனது முற்றிலும் இயல்பானதே. நான் சொன்னதைக் கேட்டவுடன் அவருடைய கைகள் நடுங்க ஆரம்பித்தன. அவள் கண் முன்னே சட்டென்று இருள் வந்தது போல் தோன்றியது.


சிறிது நேரம் கழித்து அம்மா சொன்னார், "அப்படி இருக்க வாய்ப்பில்லை. அந்த மருத்துவர் மிகவும் நல்ல மனிதர். இதை எப்படி அவர் செய்திருப்பார்?"


நாங்கள் அமைதியாக அவருக்கு விளக்கினோம்.


நான் அம்மாவிடம், "அம்மா, நடந்தது மோசமானது. ஆனால் இந்த மோசமான நிகழ்வின் தொடர்ச்சியாக நான் உன் வாழ்க்கையில் வந்தேன். இப்போது உன் மகள் உன்னுடன் இருக்கிறாள். அவள் எப்போதும் உன்னுடன் இருப்பாள். மற்ற விஷயங்கள் குறித்து விஷயங்கள் குறித்து சிந்திக்கவோ, கவலைப்படவோ வேண்டாம்," என்று சொன்னேன்.


இருப்பினும் அம்மா அதிர்ச்சியில் மூழ்கியிருந்ததை என்னால் உணர முடிந்தது. டாக்டர் கிம், எங்கள் அனுமதியின்றி நிரந்தரமாக எங்கள் வாழ்வில் நுழைந்துவிட்டார்.


டாக்டர் கிம் மெக்மோரிஸின் விளக்கம்

டாக்டர் கிம் மெக்மோரிஸுக்கு எதிராக எந்த குற்றவியல் அல்லது சிவில் சட்டமும் எனக்கு உதவவில்லை. ஏனெனில் அப்போது இந்த விவகாரம் சட்டத்தின் எல்லைக்குள் வரவில்லை.


ஆனால், நான் டாக்டர் மெக்மோரிஸுக்கு ஒரு கடிதம் எழுதினேன். அந்த மோசமான சம்பவம் குறித்து பதில் அளிக்குமாறு அவரிடம் மிகவும் பணிவாகக் கேட்டேன்.


அதற்கு அவர் அளித்த பதில், "ஆமாம், இருக்கலாம். ஆனால் அதற்கான பதிவுகள் எங்களிடம் இல்லை. ஏனென்றால் நாங்கள் ஏழு வருடங்கள் மட்டுமே அந்த பதிவேடுகளை வைத்திருப்போம். அந்த வங்கிக்கு விந்தணு தானம் அளித்தவர்கள் சிலரின் விந்தணுக்கள் உரிய தரத்தில் இல்லாததால் என்னுடைய விந்தணுக்களை நான் தானமாக அளித்திருந்தேன். உனது தாய் செயற்கை கரூவீட்டலுக்கு வந்த போது, அவருக்கு தவறுதலாக எனது விந்தணுக்கள் அளிக்கப்பட்டிருக்கலாம்," என்றார்.


மேலும் பேசிய அவர், "உன் அம்மா எப்படி இருந்தாலும் தாயாக வேண்டும் என்று விரும்பினார். அதற்காக அவர் நீண்ட நாட்களாக முயற்சி செய்து கொண்டிருந்தார். அதனால் அவருக்கான மாதிரிகளில் எனது விந்தணுவின் குப்பியையும் வைத்தேன்," என்றார்.


தனது விந்தணுவை இவ்வாறு பயன்படுத்துவதில் தவறேதும் இல்லையென்றால், ஏன் அப்போதே அவர் சொல்லவில்லை. “எனது விந்தணுவைப் பயன்படுத்தினால் கர்ப்பம் தரிப்பதற்கான வாய்ப்புகள் அதிகம்,” என்று அவர் அப்போது என் அம்மாவிடம் சொல்லியிருக்க வேண்டும்.


அப்படிச் செய்திருந்தால் அம்மாவுக்குக் கூட இதுபற்றித் தெளிவான யோசனை இருந்திருக்கும். ஆனால் அவருக்கு அது பற்றி எதுவும் தெரியாது என்பதுதான் உண்மையான பிரச்சனை. அவர் இதைப் புரிந்துகொண்டிருந்தால், அவர் அதை மறுத்திருப்பதற்கும் வாய்ப்பு இருந்திருக்கும். உண்மையில் அதை அவர் மறுத்திருப்பார். ஏனென்றால் அந்த மருத்துவரின் விந்தணு அவருக்குப் பிடித்த விந்தணுக்களின் பட்டியலில் இல்லை.



மொத்தத்தில் டாக்டர் கிம் மெக்மோரிஸால் இவ்வாறு ஏமாற்றப்பட்ட 13 பேரை நான் சந்தித்தேன். அதிர்ஷ்டவசமாக, நான் கண்டுபிடித்த என் தந்தை ஸ்டீவ், இதையெல்லாம் புரிந்து கொண்டார். என்னை விட்டு விலகவில்லை. மாறாக, அவருடனான எங்கள் உறவும் மேலும் நெருக்கமாக மாறியது.


சட்டத்தில் கொண்டுவரப்பட்ட மிகப்பெரிய மாற்றம்

ஈவ் வைலியின் வழக்கு வெளிச்சத்திற்கு வந்த பிறகு, அமெரிக்காவின் பல மாநிலங்களில் இந்த வகையான செயல் குற்றம் என அறிவிக்கப்பட்டு, அது சட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. மேலும், பல மாநிலங்களில் இதுபோன்ற குற்றங்களுக்கு கடும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.


ஈவ் வைலி தனது கதையை பிபிசி அவுட்லுக் நிகழ்ச்சியில் கூறிய பிறகு, பலர் அவரைத் தொடர்பு கொண்டனர். தங்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் இருந்ததாகவும், தாங்கள் பெரும் தவறுகளுக்கு உள்ளாக்கப்பட்டதாகவும் பலர் ஒப்புக்கொண்டனர்.


ஈவ் வைலியின் சட்டப் போராட்டம் டெக்சாஸில் தொடங்கியது. அதன் பின்னர், சுமார் 11 மாநிலங்கள் செயற்கை கருவூட்டல் தொடர்பான புதிய சட்டத்தை இயற்றியுள்ளன.


பிபிசி முண்டோவுடன் தனது கதையைப் பகிர்வதன் மூலம், செயற்கை கருவூட்டுதல் துறையில் உள்ள மோசடிகள் மற்றும் நம்பிக்கையின்மை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த ஈவ் வைலி முயல்கிறார்.


அவர் சொல்கிறார், "என் மன வேதனையின் காரணமாகவே இது போன்ற விழிப்புணர்வை ஏற்படுத்தவேண்டும் என்ற விருப்பம் எழுந்தது. இப்போது, எனது மனவேதனையை நான் மறக்கவேண்டும் என்றால், இந்த விழிப்புணர்வு பணிகளை நான் தொடர்ந்து செய்யவேண்டும். அதைத் தான் தற்போது செய்துகொண்டிருக்கிறேன்."


இந்த விவகாரம் தொடர்பாக, டாக்டர் கிம் மெக்மோரிஸை தொடர்பு கொள்ள பிபிசி முயன்றது. ஆனால் அவர் எந்தப் பதிலையும் அளிக்கவில்லை.

No comments

Powered by Blogger.