Header Ads



தாயின் அன்பு இன்னொரு வெற்றியைத் தருமா..? குரோஷியாவை வீழ்த்துமா மொரக்கோ..??



உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் அரையிறுதிப் போட்டிக்குள் நுழைவதற்கான மொரக்கோவின் வெற்றியின் ஒவ்வொரு தருணத்துக்குப் பின்னரும் அக்ரஃப் ஹக்கிமி அவரது தாயை அன்புடன் கட்டித்தழுவும் புகைப்படங்கள் வைரல் ஆகின.


கத்தாரில் மொரோக்கோ அணிக்கான  மறக்கமுடியாத வரலாற்று சிறப்பு மிக்க போட்டியின்போது சிறப்பான பல புகைப்படங்கள் எடுக்கப்பட்டன. அவற்றில் சில மட்டும் வைரல் ஆகின.  மொரோக்கோவுக்கு இன்னும் ஒரு கடைசியான ஆட்டம் மிச்சம் இருக்கிறது.


மொரோக்கா அணியும் ஹக்கிமியும் குரோஷியாவை சனிக்கிழமை எதிர்கொள்வது, வீடு திரும்பும் ஆப்ரிக்க தரப்பின் ரசிகர்களை பொறுத்தவரை இது இன்னொரு கொண்டாட்ட மாலைவேளையாக இருக்கும் வாய்ப்பாக கருதப்படுகிறது.


மொரோக்கோ அணியின் மையமாக ஹக்கிமி திகழ்வதற்கான பின்னணியில் பாரீசின் செயின்ட்-ஜெர்மைன் கிளப் இருக்கிறது. பிரான்ஸ் நாட்டுடனான அரையிறுதிப் போட்டியில் தோற்கடிக்கப்பட்ட பிறகு, ஒட்டு மொத்த நாடு, அணியின் கனவு முடிவுக்கு வந்து விட்டது என்று அவர் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.


உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி வரை சென்ற முதல் ஆப்ரிக்க நாடு என்ற பெருமையை ஏற்கனவே பெற்று விட்ட மொரோக்கோவுக்கு இன்னும்  ஒரு சிறப்பான இரவு வருமா?


'தியாகங்கள் தந்த வெற்றி'


மொரோக்கோவின் மிகவும் வெற்றிகரமான கால்பந்து வீரர் என்ற அந்தஸ்தை ஹக்கிமி ஏற்கனவே பெற்று விட்டார். ஸ்பெயினுக்கு எதிரான அவர்களின் வரலாற்று வெற்றியை அவர் உறுதி செய்தார்.


120 நிமிட விளையாட்டுக்குப் பின்னர் வெற்றியா, தோல்வியா என்று கணிக்க முடியாத பரபரப்பான நிலையில் பதற்றமான பெனால்டி ஷூட்அவுட்டுக்கு மத்தியில் ஹிக்கிமி, தேசத்தின் நிறைய எதிர்பார்ப்புகளை தமது தோளில் சுமந்தபடி  வெற்றியை நோக்கி கோலை அடித்தார்.


3-0 ஷூட்அவுட் வெற்றியை தனது தாயுடன் உணர்வுபூர்வமாக கொண்டாடும் முன், பந்தை ஒரு டிராப் ஷாட் மூலம் உதைத்தார். அவரது இந்த வெற்றிக்கான உதை ரசிகர்களிடையே உற்சாக ஆரவாரத்தை தூண்டியது.


பெல்ஜியத்துக்கு எதிரான வெற்றிக்கு முன்பும் பின்பும், ஐ லவ் யூ மாம் என்ற வாசகத்துடன் தனது தாய் முத்தம் கொடுக்கும் புகைப்படத்தை  தமது சமூக வலைதளத்தில் ஹக்கிமி பகிர்ந்து கொண்டார்.


ஹக்கிமியின் கால்பந்து பயணத்தில் அவரது குடும்பத்தின் பாரம்பரியம் பெரும் பங்கைக் கொண்டிருந்தது. மொராக்கோ மீது அவர் ஏன் அதிக அன்பு வைத்திருக்கிறார்?


மாட்ரிட்டின் புறநகர்ப் பகுதியான கெடாஃபே பகுதியில் வளர்ந்த போதிலும் - ஹக்கிமி ஸ்பெயின் அணிக்கு விளையாடுவதற்கு கிடைத்த வாய்ப்புகளை நிராகரித்தார். அவரது தாயார் ஸ்பெயினின் தலைநகரில் வீடுகளை சுத்தம் செய்யும் பணியாளாராக இருந்தார். அவரது தந்தை ஒரு தெரு வியாபாரியாக உள்ளார்.


"நாங்கள் வாழ்வாதாரத்திற்காக போராடும் ஒரு சாதாரண குடும்பத்தில் இருந்து வருகிறோம்," என்று ஹக்கிமி 2018ஆம் ஆண்டு கூறினார். "இன்று நான் அவர்களுக்காக ஒவ்வொரு நாளும் போராடுகிறேன்,"  என்றும் அவர் குறிப்பிட்டார்.


"என் பெற்றோர் எனக்காகத் தியாகம் செய்தார்கள். நான் வெற்றிபெறுவதற்காக என் சகோதரர்களுக்குப் பல விஷயங்கள் கிடைக்கவில்லை," என்றும் கூறினார்.


ஹக்கிமியின் தந்தை, "அக்ராஃப் மாட்ரிட் வந்தடைந்தபோது, நான் அவரை தினமும் 16:30 மணிக்கு பயிற்சிக்கு அழைத்துச் செல்ல வேண்டியிருந்தது, நான் 21:30 மணிக்கு வீட்டிற்கு வருவேன். பயிற்சி முகாமிற்கு அவரை அழைத்துச் சென்று விட்டு வீட்டிற்கு 50 கிமீ பயணித்து திரும்புவது வழக்கம்," என்று கூறியுள்ளார்.


"பெற்றோர்களுக்கு எனது செய்தி என்னவென்றால்,  தங்கள் குழந்தைகள் வெற்றிபெற விரும்பினால் பெற்றோர் தியாகங்கள் செய்ய வேண்டும். எல்லாவற்றிற்கும் நான் கடவுளுக்கு நன்றி கூறுகிறேன், ஏனென்றால் நான் செய்த தியாகங்கள் நல்ல முடிவுக்கு வழிவகுத்தன," என்றார்.


"குறிப்பாக அரேபியர்களுக்கும் மொராக்கோ மக்களுக்கும் ஹக்கிமி முன்மாதிரி என்று சொல்லும் நபர்களை நான் சந்திக்கும் போது. அக்ராஃபின் வெற்றி என்னைப் பெருமைப்படுத்துகிறது," என்றார் அவரது தந்தை.


தாய்வழி அன்பு சனிக்கிழமை இரவில் மீண்டும் வெளிப்படலாம்.  ஏனெனில் மூன்றாவது இடத்துக்கான பதக்கத்தைப் பெற்று, சிறந்த ஆப்பிரிக்க அணிகளில் ஒன்றாகத் தங்கள் நிலையை கத்தாரில் உறுதிப்படுத்தி விட்டு செல்ல வேண்டும் என்று மொரோக்கோ அணி நினைக்கிறது.

No comments

Powered by Blogger.