Header Adsமக்கள் ஒற்றுமையுடன் செயல்பட்டால், இலங்கை பிரச்சினைகள் பனிபோல் மறைந்துவிடும்


 மணிச்சுடர் நாளிதழில் இன்று  வெளியாகியுள்ள ஆசிரியர் தலையங்கம் இது. இதை எழுதியவர் பேராசிரியர் கே‌.எம். காதர்மோகிதீன், 

ஆசிரியர், மணிச்சுடர் நாளிதழ் 

அண்டை நாடான ஸ்ரீலங்காவில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் விரைவில் தீர்க்கப்படவேண்டும் என்று இந்திய மக்கள், குறிப்பாக, தமிழ்நாட்டினர் விரும்புவது இயல்பானது ஆகும்.

தொப்புள்கொடி உறவு உள்ள நாடாகவே, ஸ்ரீலங்கா இந்தியர்களால் கருதப்பட்டு வந்திருக்கிறது. அங்குள்ள 2 கோடி 20 இலட்சம் மக்களில் 20 இலட்சம் தமிழ் பேசும் மக்கள், யாழ்ப்பாணத்துத் தமிழர்கள், தோட்டத் தொழிலாளத் தமிழர்கள் எல்லோரும் தமிழகத்துடன் மதம், கலாச்சாரம், ஆன்மீகம் அனைத்திலும் ஒன்றிணைந்தவர்கள்.

அதைப் போலவே இலங்கையில் வாழும் சோனக முஸ்லிம்கள் -20 இலட்சம் பேர், தமிழ்மொழி பேசுவோர்; தமிழகத்துடன் எல்லா வகையிலும் தொடர்புடைய வரலாற்றைப் பெற்றிருப்பவர்கள்.

இந்த சமயத்தையும் இஸ்லாமிய மார்க்கத்தையும் சேர்ந்திருக்கும் சற்றொப்ப 50 இலட்சம் ஸ்ரீலங்கா குடிமக்கள் தமிழகத்துடன் நீண்ட நெடிய தொடர்புகள் உள்ளவர்கள்.

மற்றுமுள்ள ஸ்ரீலங்கா சிங்கள மக்களும் புத்த மதத்தில் இருந்தாலும், அவர்களும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்களே. புத்த நெறியைப் பின்பற்றி பீகார், வங்காளம், ஒடிசா போன்ற பகுதியில் இருந்து இலங்கைச் சீமைக்குக் குடியேறியவர்கள் என்பதே வரலாறு ஆகும்.

மொத்தத்தில் ஸ்ரீலங்கா - இலங்கை, இன்றைக்குத் தனி நாடாக இருந்தாலும், அது இந்தியாவுடன் எல்லா வகையிலும் கலந்திருக்கும் பூமிதான்.

இன்றைக்கு அந்த அழகுமிகுந்த எழில் தேசத்தில் பொருளாதாரச் சிக்கல்கள் தீர்வு காணாமல் தொடர்ந்து இலங்களை மக்களை அலைக்கழித்து வருகிறது.

இலங்கையின் ஜனநாயக அரசு நிலையற்றதாகிவிட்டது. ஜனாதிபதி ஆட்சி முறைக்கும் ஜனநாயக ஆட்சி முறைக்கும் மோதல் உருவாக்கப்பட்ட பூமியாகிவிட்டது. ஜனாதிபதி ஆட்சி முறைக்கு முடிவு ஏற்படுத்தும் முயற்சி நடக்கிறது; இன்னும் முடிந்த முடிவை எட்டாமல் திரிசங்கு சொர்க்க நிலையே நீடித்துக் கொண்டிருக்கிறது.

இலங்கைப் பொருளாதாரம் வீழ்ச்சிமேல் வீழ்ச்சியடைந்து வருகிறது என்றும் உலக வங்கி, சர்வதேச நிதி நிறுவனம் போன்றவை கூட அந்த நாட்டுக்கு நிதியுதவி தருவதற்கு ஆயிரம் கேள்விகளை எழுப்பி, உதவிதர முன்வராத நிலையே நீடிக்கிறது என்றும் தகவல்கள் வந்தவாறு உள்ளன.

இலங்கைக்கு நெருங்கிய நாடாக சீனா உருவானதாக சொல்லப்பட்டது; ஆனால், """"உடுக்கை இழந்தவன் கைபோல"" தவிக்கும் இலங்கைக்கு """"இடுக்கண்"" களைவதற்கு சீனா முன்வரவில்லை.

ஆனால், இந்தியாதான் இதுவரை இயன்ற வழிகளில் எல்லாம் உதவிக்கரம் நீட்டிக் கொண்டிருக்கிறது. தமிழ் நாடு, ‘தானாடாவிட்டாலும் தனது தசையாடும்’ என்பதற் கொப்ப, தன்னால் ஆன உதவிகளை தமிழக முதல்வர் தளபதி மு.க.ஸ்டாலின் பேருபகாரம் என்ற அளவில் அனுப்பியிருக்கிறார்.

இன்றைக்கு இலங்கை, அரசியலில் நிலையற்றும், பொருளாதாரத்தில் வீழ்ச்சியுற்றும், விலைவாசி ஏற்றம், எரிபொருள் இல்லாமை, வேலையின்மை, தொழில் முடக்கம், வெளிநாட்டுப் பயணிகள் வராமை, அயல்நாட்டு உதவிவரும் வழிகள் எல்லாம் 

மூடியுள்ள நிலைமை என்பன போன்ற பல்வேறு சிக்கல்களில் மூழ்கித் தவித்துக் கொண்டிருக்கிறது.

அண்டை நாடான இலங்கையில் ஏற்பட்டுள்ள சிக்கல்கள் யாவும் விரைவில் தீரவேண்டும் என்று வாழ்த்துவதும் பிரார்த்திப்பதும் நமது கடமையாகும்.

இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் என்ன? அதைத்தான் இலங்கை மக்களும் இந்திய மக்களும் எண்ணிப்பார்க்க வேண்டும்.

சிறிய சிங்கார இலங்கைச் சீமையில் சிங்கள இனவாதம் கிளப்பப்பட்டது; இரண்டரை கோடி மக்களை இனத்தால், மொழியால், மதத்தால் பிரித்து, இலங்கை மக்களுக்கு மத்தியில் பிளவையும் பிரிவினையையும் ஏற்படுத்தி, தேசத்தின் ஒற்றுமையைக் குலைத்தனர். அரசியல் ஆதாயத்துக்காக, இந்தப் படுபாதகச் செயலைச் செய்தனர். இவ்வாறு செய்தவர்கள், அவர்களுக்குத் துணைநின்றவர்கள், பிரிவினைச் செய்து பெரியவர்கள் ஆகிவிட வேண்டும் என்று நினைத்தவர்கள் எல்லோரும் இப்போது இருந்த இடம் தெரியாமல் மறைந்து கொண்டிருக்கிறார்கள்.

ஒற்றுமைதான் உயர்வைத் தரும்; ஒற்றுமையின்மை அழிவுக்கே வழிவகுக்கும் என்பதற்கு இலங்கை இன்றைக்கு அழகியதோர் உதாரணமாகிவிட்டது.

இலங்கையில் வாழும் இரண்டரைக் கோடி மக்களும் ஒருதாய் மக்கள் என்ற உணர்வோடு, ஒன்றுபட்டு நின்றால், இன்றையச் சிக்கல்கள் யாவும் பகல் பொழுதில் மறையும் பனித்துளிகள் ஆகிவிடும் என்பதை உணர்வோம்; உணர்த்துவோம்; ஒன்றிணைந்து உழைத்து உயர்வோம்; தேசத்தின் கண்ணியத்தை உயர்த்துவோம்.

இலங்கைக்குப் பொருந்தியதே, இந்தியாவுக்கும் உரியது என்பதையும் நினைவில் கொள்வோம்.

No comments

Powered by Blogger.