Header Ads



சோவியத் யூனியனில் முஸ்லிம்களுக்கு குர்ஆன் தடை செய்யப்பட்டிருந்த நேரம் அது...."


 அல்குர்ஆனின் அற்புதம்!

புகழ்பெற்ற எகிப்து காரி அப்துல் பாஸித் அப்போதைய எகிப்து அதிபர் ஜமால் அப்துந் நாஸருடன் ஒரு கூட்டத்தில் கலந்துகொண்டார். சோவியத் தலைவர்களுடனான சந்திப்பு அது. கூட்டத்தின் இடைவேளையில், குர்ஆனிலிருந்து சில பகுதிகளை சோவியத் தலைவர்களுக்கு ஓதிக் காண்பிக்கும்படி அப்துல் பாஸித்தை ஜமால் அப்துந் நாஸர் கேட்டுக்கொண்டார்.

அப்துல் பாஸித் ஓதி முடித்தவுடன் சோவியத் தலைவர்களில் நால்வரின் கண்களில் கண்ணீர்த் துளிகள். “அது என்னவென்று எங்களுக்குத் தெரியவில்லை” என்று அவர்கள் கூறினர். ஆனால் அதன் வார்த்தைகளில் ஏதோ ஒன்று அவர்களைத் தொட்டது.

இதில் வேடிக்கை என்னவென்றால், சோவியத் யூனியனில் முஸ்லிம்களுக்கு குர்ஆன் தடை செய்யப்பட்டிருந்த நேரம் அது. ஓதுதல், கற்றுத் தருதல், அல்லது ஒரு பிரதியை வைத்திருத்தல் கூட கடும் தண்டனைக்குரிய குற்றமாக இருந்த நேரம் அது.

ரஷ்ய உளவுத்துறையான கேஜிபியின் உளவாளிகள் எப்பொழுதும் இதனைக் கண்காணித்துக்கொண்டு இருந்தனர். இந்த வீட்டில் குர்ஆன் ஓதப்படுகிறது அல்லது தொழுகை நடத்தப்படுகிறது என்று அவர்கள் சந்தேகிக்கும் எந்த வீட்டிலும் எந்த நேரமும் அவர்கள் நுழையலாம்.

மார்க்க அறிஞர்கள் கட்டாய வேலை செய்யப் பணிக்கப்பட்டனர். மஸ்ஜித்களும் இஸ்லாமியக் கல்வி நிறுவனங்களும் மூடப்பட்டு சினிமா கொட்டகைகளாக, தொழிற்சாலைகளாக, அலுவலகங்களாக மாற்றப்பட்டன.

ஒரு குர்ஆன் பிரதியைக் கூட யாரும் எங்கும் காண முடியாது. நாடு முழுவதும் குர்ஆனின் ஒளியை ஊதி அணைத்திட இரக்கமற்ற அரசு இயந்திரங்கள் பயங்கரமாக இயங்கி தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட அனைத்தையும் செய்தன.

ஆனால் அந்த இருண்ட 70 வருடங்களில் முஸ்லிம்கள் அந்த ஒளி அணைந்து விடாமல் காத்து வந்தனர். மிகப் பெரிய ஆபத்து என்ற போதிலும், அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு குர்ஆனைக் கற்றுக்கொடுக்க துணிவுடன் பலப்பல வழிமுறைகளைக் கையாண்டனர்.

குழந்தைகள் தங்கள் பெற்றோர்களைப் பல மாதங்கள் பிரிந்து இரகசிய அறைகளில் தங்கி குர்ஆனைக் கற்றனர். அங்கே அவர்கள் ஹாஃபிழ்களைக் கொண்டு குர்ஆனை மனனம் செய்தனர். அச்சிட்ட ஒரு பக்கத்தைக் கூட பார்க்காமல் அவர்கள் மார்க்க அறிவுரைகளைப் பெற்றனர்.

அவர்களின் நிகழ்வுகள் யாரும் கவனிக்கப்படாமல் போனது. ஆனால் நமது சமீபத்திய வரலாறில் மிகப் பிரகாசமான பகுதி அது.

எந்த வகையான புத்தகம் இந்த அளவுக்குள்ள பக்தியையும் தியாகங்களையும் கட்டளையிட முடியும்?

கீழ்க்கண்டவாறு பிரகடனப்படுத்தும் ஒரே வேதம்தான் அதனைச் சாதித்திட முடியும்:

“இது, (அல்லாஹ்வின்) திருவேதமாகும். இதில் எத்தகைய சந்தேகமும் இல்லை. பயபக்தியுடையோருக்கு (இது) நேர்வழிகாட்டியாகும்.” (அல் பகரா 2:2)

அத்தோடு அதன் ஒவ்வொரு வரியும் அதனை உறுதிப்படுத்துகிறது. அது இவ்வாறு பிரகடனப்படுத்துகிறது:

“அளவற்ற அருளாளன். இக் குர்ஆனை (அவன்தான்) கற்றுக் கொடுத்தான்.” (அர் ரஹ்மான் 55:1-25)

மேலும் அது இவ்வாறு சவால் விடுகிறது:

“இந்தக் குர்ஆனைப் போன்ற ஒன்றைக் கொண்டு வருவதற்காக மனிதர்களும் ஜின்களும் ஒன்று சேர்ந்து (முயன்று), அவர்களில் ஒரு சிலர் சிலருக்கு உதவி புரிபவர்களாக இருந்தாலும், இது போன்ற ஒன்றை அவர்கள் கொண்டு வர முடியாது என்று (நபியே) நீர் கூறும்.” (பனீ இஸ்ராயீல் 17:88)

(இலக்கியச்சோலை வெளியீடான “இஸ்லாமும் மதச்சார்பற்ற கல்வியும்” என்ற நூலிலிருந்து...)

No comments

Powered by Blogger.