Header Ads

421 மில்லியன் ரூபாவுக்கு நடந்த கதி - பகிரங்க விசாரணை முன்னெடுக்க வலியுறுத்தல்


சுகாதார அமைச்சில் கணினி தொழில்நுட்பக் கொள்வனவின் போது 421மில்லியன் ரூபாவுக்கு நடந்தது என்னவென்று தற்போது வரையில் பொறுப்பு வாய்ந்த அதிகாரிகள் பதிலளிப்பதற்கு மறுத்து வருகின்றனர். இந்த நிலைமையானது பலத்த சந்தேகங்களை ஏற்படுத்துகிறது. பொதுமக்களின் வரிப்பணத்தில் மேற்கொள்ளப்படுகின்றன அனைத்து கொடுக்கல் வாங்கல்களுக்கு அதனுடன் தொடர்புடைய அதிகாரிகள் சகலரும் பொறுப்புக் கூறுவதற்கு கடமைப்பட்டவர்களாவர். இதனை ஏற்றுக் கொள்ளும் 'கோப்' எனப்படும் பொது முயற்சியாண்மைக்கான குழுவின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான சரித்த ஹேரத் வெளிப்படைத்தன்மையுடன் அரசாங்கத்தின் நிதிக் கையாளுகை அமைய வேண்டும் என்றும் வலியுறுத்துகின்றார்.

இவ்வாறான நிலையில் கடந்த 2ஆம் திகதி நடைபெற்ற கோப்குழுவின் (சுகாதார அமைச்சின் கொள்வனவுகள் கொடுக்கல் வாங்கல்கள் தொடர்பில்) விசாரணைகள் இடம்பெற்ற பொழுது சுகாதார அமைச்சின் கணினிக் கொள்வனவு தொடர்பிலான கொடுக்கல், வாங்கல்கள் விவகாரம் வெளிப்பட்டது. அதன் போது வெளிப்படுத்தப்பட்ட தகவல்களுக்கு அமைவாக குறித்த கணினிக் கொள்வனவு குறித்த முன்னுக்குப் பின்னரான தகவல்கள் காரணமாக பெரும் சந்தேகம் ஏற்பட்டது.

இந்நிலையில், அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன இக்கொள்வனவு தொடர்பில் குறிப்பிடுகையில் 'குறித்த கணனித் தொழில்நுட்பத்தை பெற்றுக் கொள்வதற்காக 644 மில்லியன் ரூபா செலவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு மேலதிகமாக மாதாந்த சேவைகளை பெற்றுக் கொள்வதற்காக மாதம் ஒன்றுக்கு 5 மில்லியன் ரூபா வீதம் வருடத்திற்கு 60 மில்லியன் ரூபா செலுத்தப்பட்டுள்ளது. ஆனால் அத்தொழில்நுட்பம் எங்களுக்கு தேவையான விதத்தில் இல்லை' என்று குறிப்பிட்டார்.

'பல்வேறு சந்தர்ப்பங்களில் நாங்கள் உள்வாங்கியிருக்கின்ற கணினி தொழில்நுட்பத்தைக் கொண்டு பணிகளைச் செய்ய முடியாத ஒரு நிலைமை இருக்கின்றது. அதாவது இந்த நடைமுறையில் சில விடயங்களை மாத்திரமே உட்செலுத்தி தரவுகளை பெற்றுக் கொள்ள முடியும். எமக்குத் தேவையான தரவுகளை பெற்றுக் கொள்ள முடியாது. அதில் இருக்கின்ற நடைமுறையை எங்களுக்கு முழுமையாகப் பாவிக்க முடியாது. குறித்த திட்டத்தினை ஈ.விஸ் எனும் தனியார் நிறுவனமே செயற்படுத்துகிறது' என்றும் அவர்குறிப்பிட்டுள்ளார்.

அவரது இந்தக் கூற்றுக்கள் மிகப்பெருந்தொகையான செலவீனத்தில் கணினித் தொழில்நுட்பம் உட்புகுத்தப்பட்டு அதற்கான சேவைச் செலவுகளையும் மாதாந்தம் செய்கின்ற போதும் அதனால் எவ்விதமான நன்மைகளையும் அடைய முடியவில்லை என்பதை அப்பட்டமாக்கியுள்ளது.

மேலும் இவ்வாறு பாரியளவில் செலவீனத்தினை மேற்கொண்டதன் பின்னர் அதனை மாற்றியமைப்பதற்கு மேலும் நிதி தேவைப்பட்டதாகவும் குறிப்பிடும் அவர், அதற்கான மாற்றுவழிகளை பின்பற்ற முயற்சித்ததாகவும் சுட்டிக்காட்டியுள்ளார்.

'2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட குறித்த திட்டமானது 2015 ஆம் ஆண்டில்தான் நடைமுறைக்கு வந்தது. அந்நிலையில் எமது பயன்பாட்டுக்கு ஏற்ப கணனி கட்டமைப்பை மாற்றியமைப்பதாக இருந்தால் மேலும் 7000 மில்லியன் ரூபா தேவையாக உள்ளது. ஆகவே தான் மாற்றுவழியாக எங்களுடைய கண்காணிப்பு பிரிவின் மூலமாக அனைத்து தரவுகளையும் பெற்றுக் கொள்கின்ற வகையில் ஒரு திட்டத்தை ஏற்படுத்த முயற்சி செய்தோம்' என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்நிலையில் கோப் குழுவின் தலைவர் சரித்த ஹேரத், இந்தக் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக வெளிப்படைத் தன்மை இல்லை என்பது கணக்காய்வின் மூலமும் தெரியவந்துள்ளது என்பதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, நாட்டு மக்களின் நன்மை கருதி இந்த விடயம் தொடர்பாக சரியான தகவல்களை பெற்றுக் கொண்டால் மாத்திரமே தீர்வை வழங்க முடியும் என்று தெரிவித்தார்.

'தரவுகளை முறையாக பெற்றுக் கொள்ள முடியாமையின் காரணமாகவே கொள்முதல் தொடர்பான தரவுகளை உறுதி செய்ய முடியாத நிலைமைகள் ஏற்பட்டுள்ளதாக கூறியதோடு, அந்த விடயங்களை சரியாக பெற்றுக் கொள்ள முடியாவிட்டால் 644 மில்லியன் ரூபாவையும் வருடத்திற்கு 60 மில்லியன் ரூபாவையும் செலவு செய்வதில் எந்த பயனும் இல்லை' என்றும் அவர் கூறினார்.

இந்நிலையில் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா, அதிகாரிகளின் கருத்துகளை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அவர்கள் கடந்த ஏழு ஆண்டுகளாக தகவல்களை ஒழுங்கபடுத்தாது தவறுகளை இழைத்துள்ளனர் என்றும் தெரிவித்தார்.

'500 மில்லியன் ரூபா செலவு செய்து ஒரு கணினி தொழில்நுட்ப வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியமை தொடர்பாக கணக்காய்வாளர் நாயகமும் தகவல்களை கூறினார். அந்த திட்டம் 2008 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு 2015 ஆண்டு நடைமுறைக்கு வந்துள்ளது. அந்தத் திட்டத்தை நடைமுறைபடுத்துகின்ற அல்லது செயற்படுத்துகின்ற ஒப்பந்ததாரர் நடைமுறைச்சாத்தியமான சேவையை வழங்காமை பாரிய ஒரு குற்றமாகும்' என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

இந்நிலையில் ஈ.விஎஸ் தனியார் நிறுவனத்தின் தலைவர் சஞ்சீவ விக்கிரமநாயக்க "கடந்த 03ஆம் திகதி நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பின் போது 'சுகாதார அமைச்சிற்கு எங்களால் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்ட தொழில்நுட்பமானது 500 மில்லியன் ரூபா பெறுமதி வாய்ந்தது என்று ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இன்னுமொரு தரப்பினர் அதனுடைய பெறுமதி 644 மில்லியன் என்று கூறுகின்றனர். எங்களுக்கு 2008ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்தத் திட்டத்திற்காக கிடைத்த கொள்முதல் பெறுமதி 223 மில்லியன் ரூபா மாத்திரமே ஆகும். உண்மையிலேயே இந்தத் திட்டத்திற்கு செலவு செய்யப்பட்ட தொகை 83 மில்லியன் ரூபா மாத்திரமே ஆகும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் 'மின்பிறப்பாக்கி பிரிவுகளை வேறுபடுத்தல், 300 மேசைகள், கதிரைகள், 300 கணினி மின்சேமிப்புக் கலங்கள், 300 பதிப்பாக்கிகள் உட்பட நாடு முழுவதும் இத்திட்டத்தினை இணைப்பதற்கான வலையமைப்பு பணி ஆகிய விடயங்கள் எமது சேவைக்குள் அடங்குகின்றன.

அதற்காகவே மேற்படி தொகை எம்மால் பெறப்பட்டுள்ள அதேநேரம் தற்போது புதிய தொழில்நுட்பத்தைக் கொள்வனவு செய்வதற்கு முயற்சிகள் இடம்பெற்று வருகின்றமையால் நாம் வழங்கிய திட்டத்தை விமர்சிக்கின்றார்கள்' என்று தன்பக்க கருத்துக்களை அவர்வெளிப்படுத்தினார்.

இதேநேரம் ஈவிஸ் குழுமத்தின் தலைவர் 02.06.2022 அன்று நடைபெற்ற செய்தியாளர் மாநாட்டில் ஒரு தொகையையும், பின்பு நடைபெற்ற 06.06.2022 செய்தியாளர் சந்திப்பில் ஒரு தொகையையும் குறிப்பிடுகின்றார். இவ்வாறு நிறுவனத்தின் தலைவரின் கருத்துக்களில் முன்னுக்குப் பின்னர் முரண்பாடுகள் காணப்படுவதும் கேள்விகளை எழுப்புவதாக உள்ளது.

அதேவேளை குறித்த திட்டத்திற்காக 644மில்லியன் ரூபா செலவிட்டதாக அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பிரசன்ன குணசேன குறிப்பிடுவதோடு கணக்காய்வாளர் நாயகம் 500 மில்லியன் ரூபா செலவிடப்பட்டதாக கூறுகின்றார். ஆனால் ஈ.விஸ். நிறுவனம் 223 மில்லியன் ரூபாவே தமது மொத்த பெறுமதித் தொகை என்கிறது.

அரச மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தின் தலைவரினதும் ஈ.விஸ். நிறுவனத்தினதும் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் 421 மில்லியன் ரூபாவிற்கு என்ன நடந்துள்ளது என்ற கேள்வி எழுகின்றது. கணக்காய்வாளர் மற்றும் ஈ.விஸ் நிறுவனத்தின் கருத்துக்களின் அடிப்படையில் பார்த்தால் 277 மில்லியன் ரூபா காணாமல் போயுள்ளது.

சுகாதார அமைச்சுக்கான கணனித் தொழில்நுட்ப வசதியை ஏற்படுத்திக் கொள்வதற்காக முதலில் 5நிறுவனங்களின் மூலமாக விலை மனு கோரப்பட்டுள்ளது. அதனடிப்படையில் தான் ஈ.விஸ் நிறுவனம் தெரிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் 'பொதுவாகவே' கோப்' குழுவிலும் 'கோப்பா 'குழுவிலும் பேசப்படுகின்ற விடயங்கள் தொடர்பாக சட்ட ரீதியான நடவடிக்கையோ அல்லது இது தொடர்பான மேலதிக விசாரணைகளோ இடம்பெறுவதில்லை. இது ஒரு பாரிய குறைபாடாகவே இருக்கின்றது' என குறிப்பிடுகின்றார் கோப் குழுவின் முன்னாள் அங்கத்தவரான நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திலகராஜ்.

'இக்குழுக்களில் பேசப்படுகின்ற அனைத்து மோசடிகள் தொடர்பாக அதனுடைய அறிக்கை பாராளுமன்ற சபாநாயகருக்கு கையளிக்கப்படும்.அவர் அதனுடைய மேலதிக நடநடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.ஆனால் அது மீண்டும் ஒரு அரசியல் ரீதியான செயற்பாடாக மாறுகின்ற காரணத்தால் அது அடுத்த கட்டத்தை நோக்கிப் பயணிப்பதில்லை.இதுவே பெரும் குறைபாடாக இருக்கின்றது' என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் 'இதனை மாற்றி அமைக்க வேண்டுமாக இருந்தால் அந்த குழுக்களில் நீதிபதிகளை நியமித்து இது தொடர்பான சட்ட நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். அப்படிச் செய்தால் மாத்திரமே அரச துறைகளில் நடைபெறுகின்ற ஊழலை ஒழிக்க முடியும்' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான நிலையில், காணாமல்போயுள்ள மக்கள் பணமான 421மில்லியன் ரூபாவுக்கு என்ன நடந்தது என்பதை வெளிப்படுத்துவற்கான பகிரங்க விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியமாகின்றது.

எஸ்.தியாகு

No comments

Powered by Blogger.