Header Adsமுஸ்லிம்களை அச்சுறுத்தலாக வர்ணித்து, இந்த அரசாங்கம் அதிக நன்மைகளை பெற்றுக்கொண்டது


கல்கண்டே தம்மானந்த தேரர் தற்போது பௌத்த கற்கைகளுக்கான வல்பொல ராகுல நிறுவனத்துக்கு தலைமை தாங்குவதுடன் சமூக நீதி மற்றும் நல்லிணக்கம் தொடர்பான விடயங்களை உள்ளடக்கிய பன்மைத்துவ சமூகத்தை ஊக்குவித்து வருகின்றார். உதாரணமாக போரின் உச்சக்கட்டத்தின் போதான பல்வேறு அனுபவங்களை சேகரித்திருக்கும் அவர் , தனது வாழ்நாளில் பல்வேறு சம்பவங்களை எதிர்கொண்டுள்ளார். வண. தம்மானந்த தேரர் சில காலமாக சமூக ரீதியில் குணப்படுத்தல் முறை பற்றி போதித்து வருவதுடன் பெரும்பாலான மக்கள் பின்பற்றும் மரபுவழி பௌத்த அணுகுமுறைகள் புத்தரின் போதனைகளிலிருந்து திசைதிருப்பப்பட்டதன் விளைவாக சமூகத்துக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் அவர் முழுஅளவில் குரல் கொடுத்துள்ளார். “நாம் ஒரு காயப்பட்ட சமூகம். ரணங்கள் ஆறாத ஒரு சமூகத்தால் , காயங்கள் மூலம் தீர்வைத் தேட மட்டுமே தெரியும்,” என்று அவர் ‘டெய்லி மிரர்’ பத்திரிகைக்கு அளித்த பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.


பேட்டி வருமாறு:


கேள்வி: தற்போதைய அரசாங்கம் சிங்கள-பௌத்த சித்தாந்தத்தை வாக்குகளைப் பெறுவதற்கு கேடயமாகப் பயன்படுத்தியது. உங்கள் அவதானிப்புகள் என்ன?


பதில்: தற்போதைய ஆட்சி மற்றும் அடுத்தடுத்து இருந்துவந்த ஆட்சிகள் சிங்கள-பௌத்த சித்தாந்தத்திற்கு அடிபணிந்துள்ளன. ஆனால் இம்முறை அது ஆபத்தான முறையில் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக பயன்படுத்தப்பட்டது. அவர்கள் முஸ்லிம்களை அச்சுறுத்தலாக சித்திரித்து சிங்கள-பௌத்தர்களை ஒன்றாகவும், ஏனைய இனத்தவர்களை எதிரிகளாக்கவும் . இந்த அரசாங்கம் சிங்கள பௌத்த கவசத்தை அதிகபட்ச நன்மைக்காகப் பயன்படுத்தியது.


கேள்வி: ருவன்வெலிசாயாவில் ஜனாதிபதி எவ்வாறு சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார் என்பதை யும் மே 9ஆம் திகதிக்கு முதல் நாள்முன்னாள் பிரதமர் அநுராதபுரத்திற்கு விஜயம் செய்திருந்தார் என்பதையும் நாம் பார்த்தோம். ராஜபக்ஷாக்கள் பௌத்தத்தை ஆயுதமாகப் பயன்படுத்தியதாக நீங்கள் நினைக்கவில்லையா?


பதில்: நான் எப்படி பார்க்கிறேன் என்றால், அவர்கள் மதத்தை எந்த மரியாதையும், நெறிமுறையும் இல்லாமல் பயன்படுத்தினார்கள்என்பதாகும் . முஸ்லி ம் சமூகத்தைப் பற்றி தவறான தகவல்களை பரப்புவதற்காக, அவர்கள் பிக்குகளுக்கு பட்டறைகளை நடத்தினர். இந்த பட்டறைகளில், போகோ ஹராம் பற்றிய வீடியோக்களையும், இஸ்லாமிய தீவிரவாதத்தை அடிப்படையாகக் கொண்ட வீடியோக்களையும் அவர்கள் காண்பித்தனர். அதன்பிறகு, பிக்குகள் தங்கள் பான பிரசங்கங்களிலிருந்து இஸ்லாமிய தீவிரவாதத்தைப் பற்றி பேசுவதற்கு சுமார் 10-15 நிமிடங்கள் ஒதுக்குமாறு அறிவுறுத்துவார்கள். இது தேர்தலுக்கு பல மாதங்களுக்கு முன்பு செய்யப்பட்டது. பல்வேறு வெளிமாநிலங்களில் உள்ள பல பிக்குகள் இது குறித்து என்னிடம் புகார் அளித்துள்ளனர், தீவிரவாதம் பற்றி பேசுவதற்கு தங்கள் பிரசங்கங்களில் இருந்து சிறிது நேரம் ஒதுக்கியதாக அவர்கள் ஒப்புக்கொண்டனர். பிரசங்கம் இந்தமாதிரியாக ஒருபோதும் தவறாக பயன்படுத்தப்படவில்லை. ஒரு சாமானியர் ஒரு பிக்குவை தனது வீட்டிற்கு வரவழைக்கிறார். பௌத்தம் இவ்வாறான வன்முறையில் பயன்படுத்தப்படுவதை நான் இதற்கு முன் பார்த்ததில்லை. அவர்கள் குண்டர் போன்ற பிக்குகளை வளர்த்து, அவர்களுக்கு பதவி உயர்வு அளித்து பல்வேறு இடங்களில் அமர்த்தினார்கள்.


கேள்வி: பல முன்னணி பௌத்த பிக்குகளும் தற்போதைய அரசாங்கத்தை ஆதரித்தனரே …

பதில் : பல பௌத்த பிக்குகள் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தினார்கள். பின்னர் உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் நடந்தன, அவர்கள் எதனை பிரசங்கித்தார்களோ அது யதார்த்தமாகியது. இது எதிர்பாராத தருணத்தில் நடந்தது. அதனால் அச்சம் ஏற்பட்டது, மக்களுக்கு பாதுகாப்புமற்றும் , அவர்களைப் பாதுகாக்க எவராவது தேவைப்பட்டனர்.


கேள்வி: அரசியலில் பிரவேசித்ததன் மூலம் பௌத்த பிக்குகள் புத்தரின் போதனைகளை அல்லது தத்துவத்தை சிதைத்து விட்டார்கள் என்று நீங்கள் நினைக்கிறீர்களா?


பதில்: பௌத்த பிக்குகள் 1946 ஆம் ஆண்டிலேயே அரசியல் செய்ய ஆரம்பித்தனர். ஆனால் இங்கு நிலைமை வேறுவிதமாக இருந்தது. காலனித்துவ காலத்தில், பௌத்தர்கள் ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்தனர். எனவே, சமூகத்தின் ஒடுக்கப்பட்ட பிரிவினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பல பிக்குகள் வித்யாலங்கார பிரிவேணா மூலம் அரசியலில் பிரவேசித்தனர்.அவர்கள் அதற்கு ஒரு கோட்பாட்டு அணுகுமுறையைக் கொண்டுவந்தனர் , அதனை அரசியல் என்றோஅல்லது , வேறுஎதுவாகவோ அழைக்கப்பட்டாலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்காகக் குரல் கொடுப்பது பிக்குகளின் பொறுப்பு என்று அவர்கள் கூறினர் . பதவி, அதிகாரம், தேர்தலில் போட்டியிடுவது எதுவாக இருந்தாலும் ஒடுக்கப்பட்டவர்களுக்காகக் குரல் கொடுப்பதே அவர்களின் பொறுப்பு. இலவசக் கல்விதொடர்பான போராட்டத்தின் போது, ​​மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த இலவசக் கல்விச் சட்டத்தை விவாதிக்க அப்போதைய அரசைமுன் தள்ளுவதில் பிக்குகள் முக்கிய பங்கு வகித்தனர். இந்த பிக்குகளிடம் ‘காலய ‘ (நேரம்) என்ற செய்தித்தாள் இருந்தது, மேலும் ஒரு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் ஒன்று, அரசியலில் ஈடுபடாத பிக்குகள் செல்வந்தர்கள் வழங்கும் தானத்தால் தொடர்ந்து விருத்தியடையலாம் ,ஏழைகளால் வழங்கப்படும் பிச்சையைப் பெறஅவர்கள் தகுதியற்றவர்கள்என்பதாகும் எனவே அவர்களுக்கான அரசியல் ஒடுக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுப்பதாக இருந்தது. இருப்பினும், இந்த யோசனை பின்னர் திசைதிருப்பப்படாத நிலைக்கு சிதைக்கப்பட்டது மற்றும்பிக்குகள் அதிகாரம் மற்றும் பணத்தின் பின்னால் செல்லத் தொடங்கினர். 1946 இல் பிக்குகள் ஏன் அரசியலில் சேர்ந்தார்கள் என்பது பற்றி இன்றைய பிக்குகளுக்கு எதுவும் தெரியாது.


கேள்வி: நாங்கள் மக்கள் போராட்டத்தையும் ஒரு பொது எழுச்சியையும் காண்கிறோம். பிக்குகள் இனி அரசியலுக்கு எவ்வாறு பங்களிக்க முடியும்?


பதில்: துறவிகள் மதம் மற்றும் தீவிரவாதத்திற்கு அப்பால் செல்ல வேண்டும். பௌத்தம் மனித இனத்துக்கு அப்பாற்பட்ட சுற்றுச்சூழல் முறைமையைப் பற்றி பேசுகிறது. அவர்களால் சுற்றுச்சூழல் முறைமை பற்றி பேச முடியாவிட்டால், அவர்கள் மனிதர்கள் மீது கவனம் செலுத்த வேண்டும் யாரும் ஒருவரைவிட மற்றவர் உயர்ந்தவர்அல்ல என்பதை மனதில் கொள்ள வேண்டும். இனம், மதம், பாலினம் போன்றவற்றின் அடிப்படையில் அவர்களை வேறுபடுத்த முடியாது.


கேள்வி: போர் மற்றும் அதன் பின்விளைவுகள் பற்றி நாங்கள் பேசலாம். நாங்கள் காயப்பட்ட சமூகம் என்று நீங்கள் எப்போதும் கூறி வருகிறீர்கள். நாங்கள் அதிர்ச்சியால் அவதிப்படுகிறோம். ஆனால் வெற்றி அணிவகுப்புகள் என்று அழைக்கப்படும் போது பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் உயிர் பிழைத்தவர்கள் நினைவுகூரப்படுவதை நாம் காணவில்லை. போர் மகிமைப்படுத்தப்பட்டது மற்றும் பெரும்பாலான நினைவுகள் அழிக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிகழ்வுகள் எ ம்மைப் போன்ற சமூகத்தில் எவ் வகையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன?


பதில்:நான் முன்பே கூறியது போல் நாம் காயப்பட்ட சமுதாயமாகும்.. இந்தக் காயங்கள் நேரடியாகவோ அல்லது பரம்பரை பரம்பரையாகவோ பரவும் காயங்களாக இருக்கலாம். எனது முன்னோர்கள் 1818 ஊவா-வெல்லஸ்ஸ கிளர்ச்சியின் போது இடம்பெயர்ந்து கிழக்கு மாகாணத்தில் உள்ள காட்டுப் பகுதிகளை நோக்கி நகர்ந்தனர்.அவர்கள் பெண்களாகவும், கிளர்ச்சியில் இருந்து தப்பியவர்களாகவும் இருந்திருப்பார்கள், அவர்களின் மூதாதையர் வீடுகளை விட்டு வெளியேறுவது எவ்வளவு கடினமாக இருந்திருக்கும் என்பதை நான் எப்போதும் கற்பனை செய்து பார்க்க முயற்சிப்பேன். நான் இதை அனுபவிக்காததால் அவர்களின் காயங்கள் எப்படி ஆறின என்று தெரியவில்லை. ஆனால் இந்தச் சமூகம் தொடர்ந்து காயங்களுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறது. காயங்கள் ஆறாத சமூகம், காயங்கள் மூலம் தீர்வு தேட மட்டுமே தெரியும். அவர்கள் ஒரு பிரச்சனையை எதிர்கொண்டால், அவர்கள் தங்கள் சக்தியைப் பயன்படுத்தி மற்றொன்றை அடக்கி, பிரச்சினையைத் தீர்ப்பார்கள். 1971, 88/89 கிளர்ச்சிகள் மற்றும் 30 ஆண்டு கால இன மோதலின் போது இது சாட்சியாக இருந்தது மற்றும் ஆயுதங்களால் அனைத்தையும் அழித்த பின், அவர்கள் மூட்டையைக் கட்டி வெளியேறத் தயாராக உள்ளனர்.


வேடிக்கை என்னவென்றால், அந்த போரில் வெற்றி பெற்றவர்கள் இப்போது இந்த நாட்டை ஆட்சி செய்கிறார்கள் நாடு இப்போது பங்களாதேஷை விட மோசமான நெருக்கடியில் உள்ளது. இவர்களின் கருத்துப்படி யுத்தம்தான் பிரச்சினை, அது முடிந்தவுடன் இந்த நாடு அபிவிருத்தி அடையும் என்றார்கள். நெடுஞ்சாலைகள் அமைப்பது பற்றி எல்லோரும் பேசுகிறார்கள் ஆனால் முதலில் மக்களின் முன்னேற்றத்தைப் பார்க்க வேண்டும். இது கல்வியில் தொடங்க வேண்டும் ஆனால் இந்த கல்வி முறை காயங்களை மேலும் மோசமாக்குகிறது. ஆசிரியர்கள் முதலில் குணமடைய வேண்டும் ஆனால் இந்த மாற்றம் ஆவண வடிவில் வராது. இது ஒரு தொடர்ச்சியான செயல்முறையாக இருக்க வேண்டும், இது சுமார் 10 ஆண்டுகள் நீடிக்கும். எங்களிடம் புதிய பிரதமர் இருக்கிறார், ஆனால்டொ லர்களை கொண்டு வருவதால் மட்டும் இந்த பிரச்சனைக்கு தீர்வு கிடைக்காது. குணப்படுத்துவது அவசியம். இல்லாவிட்டால் குடும்ப வன்முறை, துன்புறுத்தல், பணியிட துன்புறுத்தல் மற்றும் சிறுவர் துஷ்பிரயோகம் போன்ற பிரச்சினைகள் அதிகரிக்கும். இவை அனைத்தையும் வைத்துக்கொண்டு கொண்டு, நாட்டுக்கு டொ லர்களை கொண்டு வருவதில் எந்தப் பயனும் இல்லை.


கேள்வி: ‘நல்லிணக்கம்’ என்ற வார்த்தை தவறாகப் பயன்படுத்தப்பட்டதாக நீங்கள் நினைக்கவில்லையா?


பதில்:ஆம். இந்தச் செயற் பாட்டின் போது, ​​எங்கள் அகராதியில் வார்த்தைகள் இல்லை. அவர்கள் ஆங்கில/வெளிநாட்டுச் சொற்கள் மற்றும் கருத்துகளைப் பயன்படுத்தினர். ஆங்கிலச் சொல் சிங்களத்தில் மொழிபெயர்க்கப்பட்டது ஆனால் அவர்களுக்குக் கருத்தும் தெரியாது. இதன் விளைவாக, அவர்கள் வெளிநாட்டு கருத்துக்களை அறிமுகப்படுத்தினர் அது முற்றிலும் புதியது.பொறிமுறையில் சிக்கல்கள் இருந்தன ஆனால் பலஅரசசார்ப்பற்ற குழுக்கள் இந்த திட்டங்களின் மூலம்டொ லர்களை சம்பாதித்தன. அவர்கள் கருத்தரங்கு களை நடத்துவார்கள், அறிக்கையை வழங்குவார்கள் மற்றும் அவர்களின் டொ லர்களைப் பெறுவார்கள். இதைத்தான்நல்லிணக்கம் என்று அழைத்தார்கள். ஆனால் எங்கள் நிறுவனமும் இந்த குணப்படுத்தும் செயற் பாட்டில் ஈடுபட்டது, ஆனால் நல்லிணக்க செயல்பாட்டின் போது பணம் முக்கியமில்லை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்தோம்.


நாங்கள் நடத்திய நிகழ்ச்சிக்கு ராகுல-தங்கராஜா இரட்டைப்பாடசாலை நிகழ்ச்சி என்று பெயர். 1930 களில் வல்பொல ராகுல தேரர் பல்கலைக்கழகத்துக்கு முதல் பௌத்த பிக்குவாக தெரிவு செய்யப்பட்ட போது அவர் பௌத்த சமூகத்தால் ஓரங்கட்டப்பட்டார். சரவணமுத்து தங்கராசா என்ற தமிழ் கனவானே உதவியவர். ராகுல கல்வியைத் தொடர உதவியவர். அவர்கள் நல்ல நண்பர்களாக இருந்ததால் அவர்களின் நட்பைப் போற்றும் வகையில் இந்த நிகழ்ச்சிக்கு பெயரிட்டோம். இந்த வேலைத்திட்டத்திற்காக துணுக்காய் தேரங்கண்டல் தமிழ் பாடசாலை மற்றும் கெபித்திகொல்லாவ ஹல்மில்லவெட்டிய வித்தியாலயம் ஆகிய இரண்டு பாடசாலைகளை இணைத்தோம்.


நாங்கள் இரண்டு பாடசாலைகளிலும் சுமார் ஆறு மாதங்கள் பணியாற்றி, பள்ளிகளை இணைத்தோம். பேருந்துகளில் பயணித்தோம், அவர்கள் கொடுத்ததை சாப்பிட்டுவிட்டு, இயலுமாகவிருந்த இடத்தில் தூங்கினோம். எனவே, நாங்கள் அவர்களைப் போலவே இருந்தோம். நாங்கள் முதலில் தேரங்கண்டல் பாடசாலைக்கு தண்ணீர் வடிகட்டியை [பில்டர் ] நலன்விரும்பிகளின் ஆதரவின் மூலம் வழங்கினோம். அதனைத் தொடர்ந்து இந்த சிறுவர்களை ஹொரணைக்கு ஒரு பட்டறைக்காக அழைத்து வந்தோம். சுமார் ரூ. 375,000சேகரித்திருந்தோம் . மொத்த பட்ஜெட் சுமார் 13 இலடசரூபாவாகும்.. நாங்கள் அவர்களை ஐந்து பேருந்துகளில் அழைத்து வர வேண்டும், தங்குமிடம் மற்றும் உணவு வழங்க வேண்டும், மொழிபெயர்ப்பாளர்களுக்கு நாங்கள் பணம் செலுத்த வேண்டியிருந்தது.


நான் நடைமுறையில் ஏதாவது செய்ய விரும்பினேன், யாரோ ஒருவர் வாசனா பேக்கர்ஸ் உரிமையாளரை அழைக்குமாறு பரிந்துரைத்தார். அவர் போர் உச்சக்கட்டத்தின் போது கடத்தப்பட்டு இராணுவத்தினரால் அழைத்துச் செல்லப்பட்டிருந்தவர் அவருடைய கதையைக் கேட்ட படைவீரர் அவரை விடுவித்திருந்தார். அன்பான வாழ்க்கைக்காக ஓடிய பின்னர் சந்திரிகா பண்டாரநாயக்காவின் ஆட்சிக் காலத்தில் அவர் தனது கிராமத்திற்குத் திரும்பினார். பின்னர் அவர் ஒரு பேக்கரியில் வேலை செய்யத் தொடங்கினார் மற்றும் புதிதாக எல்லாவற்றையும் கற்றுக்கொண்டார். ஸ்பொஞ்ச் கேக் வழங்கி தனது பயணத்தை தொடங்கிய வாசனா பேக்கர்ஸ் இன்று பேக்கரித் துறையில் செழிப்பான வர்த்தகமாக உள்ளது.


இந்தக் கதையால் நான் ஈர்க்கப்பட்டதால், நான் அவரிடம் சென்று சிறுவர்களுடன் பேச அழைத்தேன். அவர் மிகவும் ஆச்சரியப்பட்டார், ஏனென்றால் அவரிடம் பணம் கேட்பதற்காகவே ஆட்கள் வந்திருந்தார்கள். அதன்பிறகு, அவர்களது ஊழியர்களின் நிகழ்ச்சிகளை நடத்துவதற்காக நிறுவப்பட்ட தனது திருமண மண்டபத்தை அவர் எங்களுக்கு வழங்கினார். நிகழ்ச்சி வெற்றி பெற்றது. அதேபோல், பங்களித்த அனைவரும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் போரினால் பாதிக்கப் பட்டுள்ளனர். மொழி பெயர்ப்பாளர்களில் ஒருவர் ஒரு முஸ்லிம் பெண் மற்றும் அவர் ஒரு தாய் கூட. அவர் தன்னார்வ அடிப்படையில் தனது ஆதரவை வழங்கினார், எனவே தேரங்கண்டல் பாடசாலைப் பிள்ளைகளின் வேண்டுகோளுக்கு இணங்க கண்டி வழியாக பயணிக்க முடிந்தது. இதுவே எங்களின் நல்லிணக்க மாதிரியாக இருந்தது. பசித்தாலும் பிரச்சினையை தீர்க்க வேண்டும். ஆனால் பக்கத்து வீட்டுக்காரரிடம் பணம் வாங்குவதால் மட்டும் பிரச்சினையை தீர்க்க முடியாது. , இலங்கையில் நல்லிணக்க மாதிரியானது பணம் சம்பாதிக்கும்வர்த்தகமாகும். எனவே அது ஒரு தோல்வியாகும்.


கேள்வி: நல்லிணக்கம் பற்றிப் பேசும் போது வடக்கு கிழக்கு பற்றி மட்டுமே பேசுகிறோம். தென்னிலங்கையிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. ஆனால் இன்று, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகங்கள் போன்றவை திறமையாகச் செயற் படவில்லை. உங்கள்கருத்துகள் என்ன?


பதில்: கடத்தல்களும் கொலைகளும் நாளுக்கு நாள் அரங்கேறி வருகின்றன. எனக்குத் தெரிந்த மூன்று பிக்குகள் இவ்வாறு கடத்தப்பட்டனர். அவர்களில் ஒருவர் தெஹிவளையில் வைத்து கடத்தப்பட்டார். ‘பொடி ஹமுதுருவோ’ பேருந்தில் இருந்தபோது கடத்தப்பட்டதாக நேரில் பார்த்த ஒருவர் என்னிடம் கூறினார். இன்று வரை, அவர் எங்கிருக்கிறார் என்று எனக்குத் தெரியவில்லை. தெனகம பங்னலோக, கொரடிகும்புரே ஞானலோக என்ற இரண்டு பிக்குகளும் கடத்தப்பட்டு இன்றுவரை காணாமல் போயுள்ளனர். அவர்களைப் பற்றி யாரும் பேசுவதில்லை. அன்புக்குரியவர்கள் காணாமல் போனவர்களின் சுவாசத்துக்கு ஒரு வண்ணம் கொடுக்க முடிந்தால், இந்தச் சூழ்நிலை எவ்வளவு இருண்டதாக இருக்கிறது என்பதை நாம் பார்க்க முடியும்.


இது ஒரு வெகுஜன புதைகுழி போன்றது, ஆனால் நாங்கள் தொடர்ந்து சாம்பிராணி குச்சிகளை ஏற்றி முன்னேறுகிறோம். இந்த நினைவுகளை மறக்க முயற்சிக்கிறோம். அந்த சம்பவத்தை யார் வேண்டுமானாலும் மறக்கலாம் ஆனால் அந்தச் சம்பவத்தின் விளைவான நினைவுகளை மறக்க முடியாது. இந்த காயப்பட்ட ஆட்களை சாரதிகள், பயணிகள் போன்றவர்களாக நாங்கள் சந்திக்கிறோம். இந்த காயங்கள் ஆக்கிரோஷம் மற்றும் வன்முறையில் விளைகின்றன.


கேள்வி: இந்த ஆட்களுக்கு முறையான குணப்படுத்தும் நுட்பங்களை அறிமுகப்படுத்த நாம் தாமதமாகிவிட்டோமா?


பதில்: தற்போது நாம் ஒரு சமூக-பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதால், சாத்தியமான முறைமை மாற்றத்திற்குள் குணப்படுத்தும் நடைமுறைகளை இணைப்பதை நாம் பார்க்க வேண்டும்.


கேள்வி: தற்போது இடம்பெற்று வரும் மக்கள் போராட்டங்கள் பற்றி பேசலாம். வரலாற்றில் இடம்பெற்ற முதல் அகிம்சை, போராட்டம் இதுவாக இருக்கலாம். ஆனால் வெசாக் வாரத்தில் விட யங்கள் வன்முறையாக மாறியது. உங்கள் கருத்துகள் என்ன?


பதில்: முன்னெப்போதும் இல்லாத சமூக-பொருளாதார நெருக்கடி மக்களை ஒரு பொதுவான நிலைப்பாட்டுக்கு கொண்டு வந்தது. அத்தியாவசிய பொருட்கள், மருந்து, எரிபொருள் போன்றவற்றுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் மக்கள் சிரமத்துக்கு உள்ளாகியுள்ளனர். இதன் பின்னணியிலேயே மக்கள் இந்த போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். மக்கள் கோஷங்களை எழுப்பத் தொடங்கினர், இது ஒரு வன்முறையற்ற போராட்டம். ஆனால் மற்ற எல்லா நிகழ்வுகளையும் போலவே, ஆட்சியாளர்கள் போராட்டத்தை சீர்குலைக்க வன்முறையைப் பயன்படுத்தினர். 1950 களில் தமிழை ஆட்சி மொழியாக சேர்க்க மக்கள் கோரிக்கை வைத்தபோது இது நடந்தது. வித்தியாசம் என்னவென்றால், இந்த முறை தொழில்நுட்பத்தின் முன்னேற்றம் காரணமாக, ஒட்டுமொத்த பொது மக்களும் வன்முறையைக் கண்டனர், சமூக ஊடகங்களுக்கு நன்றி. அமைதியான போராட்டக்காரர்கள் அனைவரது உரிமைகளுக்காகவும் குரல் கொடுப்பதை மக்கள் அறிவார்கள். எல்லோரும் தாங்கள் தாக்கப்படுவது போல் உணர்ந்தனர்.


கேள்வி: காலி முகத்திடலில் பல கலந்துரையாடல்கள் இடம்பெற்று வருகின்றன. ஆட்சியின் புதிய சகாப்தத்தைத் தொடங்க இது ஒரு தொடக்கப் புள்ளியா?


பதில் : பொறுப்புக்கூறல் என்பது அரசியலமைப்புச் சட்டத்திலோ அல்லது நீதித்துறையிலோ சேர்க்கப்படவில்லை. ஊழல் குற்றச்சாட்டில் எந்த அரசியல்வாதியும் சிறையில் அடைக்கப்படவில்லை. அப்படியானால், அனைவரும் ஊழல்வாதிகளாக இருக்க வேண்டும். அரசியலமைப்புச் சட்டம் மக்களுக்கு அதிகாரம் வழங்க வேண்டும். மக்கள் உண்மையில் அடிமைகளைப் போன்றவர்கள், எங்களிடம் ஆட்சியாளர்கள் உள்ளனர். ஆனால் நாம் குடிமக்களாக இருக்க வேண்டும், குடிமக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்க ஒரு பிரதிநிதியை அனுப்புகிறோம். இது கோத்தா கோகமவில் இருந்து தொடங்கியது என்று நினைக்கிறேன். எங்கு செல்கிறது என்று தெரியவில்லை. ஆரம்பத்தில், பல்வேறு அரசியல் மனப்பான்மை கொண்டவர்கள் இருந்தனர், பின்னர், தீவிரவாத சிந்தனை கொண்டவர்களும் போராட்ட தளத்தில் தங்கள் இடத்தைக் கண்டனர். எனவே போராட்ட தளத்தில் இருந்து ஒரு பொதுவான கருத்து எதிரொலிக்கப்படுகிறதா என்று என்னால் கூற முடியாது. ஆனால் அதன் நேர்மறையான அணுகுமுறைகளை நான் பாராட்டுகிறேன்.


கேள்வி: வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்ட ஓர் அரசியல் கலாசாரத்தை நாங்கள் எப்போதும் கண்டிருக்கிறோம். இந்த மக்களின் போராட்டங்கள் மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்தும் என்று நினைக்கிறீர்களா?


பதில்: மக்களின் மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்த எதுவும் செய்யப்படவில்லை. காலி முகத்திடலில் நடக்கும் போராட்டத்தைப் பற்றி தற்போதைய ஆட்சி பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை, ஏனென்றால் மதிய உணவுப் பொட்டலத்திலோ அல்லது வேறு குறுகிய கால ஊக்கத்தொகைகளிலோ வாங்கக்கூடிய மக்களால் அவர்களின் ஆணை தீர்மானிக்கப்படுகிறது. சமூக ஊடகங்களால் இந்த முறை மக்கள் அரசியலைப் பற்றி அதிகம் அறிந்திருக்கிறார்கள் என்பது மட்டுமே முற்போக்கான அம்சம். கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளில் இது தொடர்பாக சில மாற்றங்கள் இருக்கலாம், ஆனால் கிராமப்புறங்களில், மக்கள் இன்னும் தங்கள்தொகுதிகளை ஆள்பவர்களுக்கு விசுவாசமாக இருப்பார்கள்.


கேள்வி: நீதி என்பது ஒரு முக்கிய குறிச் சொல்லாகி விட்டது. இவ்வளவு நடந்து கொண்டிருக்கும் நிலையில், எதிர் வரும் காலத்தில் நம்மை நாமேஆற்றுப் படுத்திக் கொள்ள முடியுமா?


பதில்: நீதி இல்லாத நாட்டில் பயங்கரவாதம் முளைவிடுகிறது . மே 9 அன்று நடந்தது இதுதான். காலி முகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது கும்பல் தாக்குதல் நடத்தியபோது, ​​நாட்டின் ஏனைய பகுதிகளில் வன்முறை வெடித்தது. வரலாறு முழுவதும் இதுதான் நடந்தது. 30 வருட இன மோதலுக்கு யாரும் மன்னிப்பு கேட்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் கிறிஸ்தவ மற்றும் கத்தோலிக்க சமூகங்களை காயப்படுத்திய ஒரு பயங்கரமான பேரழிவாகும். இழந்த உயிர்களுக்கு தாங்கள் பொறுப்புக் கூற வேண்டும் என்று நினைக்கிறார்கள். நீதி இல்லாமல், நாம் முன்னேற முடியாது.


இதைத் திரும்பத் திரும்பச் சொல்லியும் நாம் இந்தப் பாடத்தைக் கற்கவில்லை. நாங்கள் காயமடைந்துள்ளோம் என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும், நாம் ஒன்றாகக் குணமடைய வேண்டும்.

No comments

Powered by Blogger.