Header Adsயார் இந்த காயிதே மில்லத்..?

ஜுன் 5 --காயிதேமில்லத் பிறந்த தேதி

நினைவு கூறப்படும் நாள்.

இந்தியாவிலுள்ள முஸ்லிம் சமுதாயம் சுதந்திரத்திற்கு பிறகு இதுவரையிலும் இல்லாத அளவிற்க்கு "ஒற்றை தலைமைத்துவ வழிகாட்டுதல் " இல்லாத நிலைமைக்கு  தள்ளப்பட்டுள்ளது.  ஒவ்வொரு மாநிலத்திலும் முஸ்லிம் அமைப்புகளுக்குள் புதிதாக ஏற்படும் பிளவுகள் சமுதாய நலனை வேறொரு பாதைக்கு கொண்டு செல்வதோடு இளைஞர் சக்தியும் சிதறடிக்கப்பட்டு வீணாவது கவலைக்குரிய விஷயம்.

காயிதேமில்லத் அவர்கள் சமுதாயம் மற்றும் தேசம் சம்பந்தப்பட்ட நலன்களில் எடுத்த தீர்க்கதரிசனமான  முடிவுகளால் அனைத்து சமுதாய அரசியல் தலைவர்களாலும் "கண்ணியத்துக்குரிய " என்ற அடைமொழியோடு மரியாதையாக பார்க்கபட்டார் என்பதை நினைவூட்டும் ஒரு பதிவு.


இந்தியாவின்  கடைக்கோடி  மாவட்டமான  நெல்லையில்  பிறந்து ஒட்டுமொத்த இந்திய முஸ்லிம்களுக்கும் வழிகாட்டியாக வாழ்ந்ததோடு மட்டுமல்லாமல் கட்டுக்கோப்பான சமத்துவ சமுதாயம் மலர பாடு பட்ட தூய உள்ளத்துக்கு சொந்தக்காரர்.

* இந்திய விடுதலைக்காக  பாடுபட்டதோடு பாகிஸ்தான் பிரிவினையை  கடைசிவரை  எதிர்த்தவர். மேலும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கத்தை  நாடு முழுவதும் பயணித்து வளர்த்தவர்.

* 1946 - 50 வரை இந்திய அரசியல் நிர்ணய சபை உறுப்பினராக விளங்கியவர்.

* 1946 - 52 வரை சென்னை மாகாண எதிக்கட்சி தலைவர்.

* 1952 - 58 வரை பாராளுமன்ற ராஜ்ய சபா உறுப்பினர்

* 1962 - 72 வரை மூன்று முறை கேரளாவிலுள்ள மஞ்சேரி தொகுதி பாராளுமன்ற உறுப்பினர். தொகுதிக்கு வேட்புமனு தாக்குதலுக்கு கூட செல்லாமல் தொடர்ந்து  வெற்றி பெற்ற பெருமைக்குரியவர்.

* மகனுக்கு  கிடைத்த உயர்கல்வி படிக்கும் வாய்ப்பை சிபாரிசு என தெரிந்ததும் ரத்து செய்தவர்.

* இந்தியாவின் ஆட்சி மொழியாக எந்த மொழியை தேர்ந்தெடுப்பது என்ற விவாதத்தில் தொன்மையும் இலக்கிய செறிவும் மிக்க தமிழ் மொழியை ஆட்சி மொழியாக அறிவிக்க வேண்டும் என்று பாராளுமன்றத்தில் வலியுறுத்தி தாய் மொழி பற்றை ஓங்கி பறை சாற்றியவர்.

*தேர்தல் காலங்களில் சீட் பெறுவதற்காக  எந்த அரசியல் கட்சி தலைவரின் வீட்டிற்கும் படையெடுக்காத  தூய சிந்தனையாளர்.

நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனம் துவங்குவதற்கு மூளையாக இருந்து செயல்பட்ட தொலைநோக்கு சிந்தனையாளர்..

*இந்தியா - பாகிஸ்தான் பிரிவினைக்கு பிறகு முஸ்லிம் லீக் கட்சியில் மீதமிருந்த தொகையை இரண்டாகப் பிரித்து எடுத்துக் கொள்ளலாம் என்ற ஜின்னாவின் யோசனையை நிராகரித்து இந்திய முஸ்லிம்களுக்கு உங்கள் உதவி தேவையில்லை என்று தேசப்பற்றை வெளிப்படுத்தியவர்

* தமிழக முஸ்லிம்களின் கல்வி மறுமலர்ச்சிக்கு பல்வேறு மாவட்டங்களிலும்  பள்ளி, கல்லூரிகள் வர பாடுபட்டவர்.

*அகில இந்திய காங்கிரஸ் தலைவர்கள், பெரியார், அண்ணா, கலைஞர் போன்ற திராவிட இயக்க தலைவர்களோடும்  இணக்கமாக வாழ்ந்தும் இறுதி காலம் வரையிலும் சமுதாயம் சார்ந்த விஷயங்களில் எந்த சமரசத்துக்கும் இடம் தராதவர்.

*அரசியல் பொது வாழ்க்கைக்கு மத்தியிலும் இறுதிவரை  ஏழ்மையாகவே வாழ்ந்த பன் முகங்களுக்கு சொந்தக்காரர்.  இப்படி தன்னலமற்ற வாழ்க்கை வாழ்ந்ததால் தான் நாடு மறவாமல் உள்ளது . என்றால் மிகையாகாது 

Colachel Azheem

No comments

Powered by Blogger.