Header Ads



சபிக்கப்பட்ட மலர்கள் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது வீசப்பட்டதா..? ஆட்டிப்படைத்த ஞானக்காவின் சொத்துக்களை காப்பாற்றச்செல்லாத தெய்வங்கள் -


 அரசர்கள் அக்காலத்தில் ஞானகுரு, மதியூகி, ராஜகுரு ஆகிய பெயர்களில் தமது நம்பிக்கைக்குரியவர்களை வைத்திருந்தார்கள். சாணக்கியன் அவ்வாறான ஒரு மதியூகியே. அத்தகையோர் சிறந்தவர்களாக இருந்தால் நாடு வளம் பெறுவதும் மோசடிக்காரர்களானால் நாடு வீழ்ச்சி அடைவதும் வழமை. ரஷ்யாவின் இறுதி மன்ன ரான நிக்கலசுக்கு ஒரு மதியூகி வந்து சேர்ந்தார். அவர் பெயர் ரஸ்புட்டீன். அத்தோடு அரச பரம்பரைக்கு முடிவு கட்டப்பட்டது. இந்திரா காந்திக்கு ஒரு பிரேந்திரா பிரமச்சாரி என்றால் நரசிம்மராவுக்கு ஒரி சந்திராசாமி மதியூகி சாமியார்களாக திகழ்ந்தார்கள்.  


இலங்கை அரசை ஆட்டிப்படைத்தவராகக் கருதப்படுகிறவர் ஞானக்கா. காளியின் அம்சத்தைப் பெற்றவர் எனக் கூறப்படும் இவர் ஒரு வி.ஐ.பி மார்களின் அருள் பெற்றவர். கடந்த 9ஆம் திகதி அசம்பாவிதங்களின்போது இவரது வீடு தீக்கிரையானது. 


இந்த ஞானக்கா நாட்டில் அனைவராலும் பேசப்படுபவர். பிரபு வர்க்கத்துடன் பழகும் மந்திரக்காரி என அவர் மக்களிடையே அண்மைக் காலத்திலேயே பிரசித்தமானார். ஆனால் இன்று அவர் மிகவும் நொந்து போயுள்ளார். அரசர் காலத்துக்குப் பின்னர் அரசியல்வாதிகளிடையே யாருக்காவது அனுராதபுரத்தில் பெரும் செல்வாக்கு இருந்ததென்றால் அது ஞானக்காவுக்குதான்.  


இவரின் பெயர் ஞானவதி ஜயசூரிய. வயது 66. அவர் மாந்திரீகர், ஜோதிடரும், காளி உபாசகர், எமது பிரபு குடும்பங்கள் அவரை அடிக்கடி சந்தித்து வந்தனர். நவீன வசதிகளுடன் கூடிய தேவாலயம் ஒன்றும் அவருக்கு இருந்தது. அவரது கணவர் 1996ஆம் ஆண்டு கொல்லப்பட்டார். அவர் அனுராதபுரம் வைத்தியசாலையில் தொலைபேசி இயக்குனராக சேவை செய்ததாகவும் நாம் அறிவோம். கணவர் இறந்த பின்னர் கொழும்புக்கு வந்து மகரகம பமுனுவயில் துணிகளை கொண்டு சென்று விற்பனை செய்து வாழ்ந்தவர் எனவும் அறிவோம்.  


பின்னர் அவரது வாழ்க்கையின் இரண்டாவது அத்தியாயம் ஆரம்பித்தது. ஆரம்பத்திலிருந்த வியாபாரியாக அல்லாமல் சொகுசு வாகனங்களில் பயணம் செய்யும் உயர்ந்த பிரபு வர்க்கத்தை சேர்ந்தவராக அவர் வாழ்க்கை மாறியது. நாம் அறியாத அந்த கதையை பற்றி ஆராய்வோம். 


ஞானக்கா என அறியப்பட்ட அவர் பிறந்த இடம் அனுராதபுரத்தில் இசுறுபுரயாகும். தந்தை விவசாயி. அவர் கல்வி கற்றது தற்போது ஜனாதிபதி வித்தியாலயம் எனக்கூறப்படும் அன்றைய தீபானி வித்தியாலயத்திலாகும். அவர் உயர்தரம் வரையுமே கல்வி கற்றுள்ளார். அவ்வேளையில் பெற்றோரின் எதிர்ப்புக்கு மத்தியில் கே.ஏ. ஜெயசூரிய என்பவரை திருமணம் முடித்துள்ளார். 


அவரது கல்வித் திறமைக்கேற்ப அநுராதபுர வைத்தியசாலையில் தொலைபேசி இயக்குனராக பணிபுரிந்துள்ளார். அவரது கணவர் பல கட்டட ஒப்பந்த பணிகளை மேற்கொண்டதோடு பின்னர் கல்வி திணைக்களத்தின் காவலாளியாகவும் பணிபுரிந்துள்ளார்.  


இதுவே அவரது திருமண வாழ்க்கையின் ஆரம்பப் பகுதி. அவர்களுக்கு ஒரு மகனும் மகளும் உள்ளனர். அவர்கள் அனுருத்த நளின் குமார மற்றும் நதிஷானி. ஞானக்கா தம்பதியருக்கு இருபத்தி ஐந்து வருடங்களுக்கு மேல் வாழக் கிடைக்கவில்லை. 1996ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14ஆம் திகதி ஞானக்காவின் கணவர் ஜயசூரிய கொல்லப்பட்டார்.  


அதுபற்றி நிறைய கதைகள் இருந்தாலும் அதிலொன்று அது அரசியல் கொலை என்றது. அவரின் மறைவுக்குப் பின்னர் தனது பணிக்கு மேலதிகமாக கடினமான வேலைகளில் ஈடுபட்டார். அவர் தனது பிள்ளைகளுக்கு நல்ல முறையில் கல்வியையும் அளித்துள்ளார். காணிகளை கொடுக்கல் வாங்கல் செய்வதிலும் ஈடுபட்டுள்ளார்.  


அவர் கணவரின் மறைவுக்குப் பின்னர் மனக்குழப்பத்தில் இருந்ததால் அவர் அடிக்கடி ஜயஸ்ரீமஹாபோதியவுக்கு சென்று வழிபாடுகளை நடத்தி வந்துள்ளார். அவரையறியாமலே அவருக்கு ஞானசக்தி ஒன்று கிடைத்ததாக நம்பினார். அதன் மூலம் ஒருவரின் எதிர்காலத்தை வெற்றிகரமாக நடத்துவதற்கு பல விடயங்களை அவரால் செய்ய முடியும் என அவர் நம்பத் தொடங்கினார். பின்னர் பல விதங்களிலும் பாதிக்கப்பட்ட மக்கள் அவரை நாடி வரத்தொடங்கினர். அவர்களுக்கு தீர்வு கிட்டியதாலோ என்னவோ அவரது பெயர் பிரசித்தமானது. யுத்தத்துக்கு செல்லும் தம் பிள்ளைகளுக்கு ஆசி வேண்டியும் பல பெற்றோர்கள் அவரை தேடி வந்தார்கள். அவர் வசியத்தால் அல்லது அதிதீவிர மனவெழுச்சி காரணமாக தன்னால் இந்த நிலைமைக்கு மாறமுடிகிறது என்பதை அவர் அறியவில்லை. ஆனால் இந்த நிலைமையால் தன்னால் அனைவருக்கும் உதவி செய்யக்கூடியதாக உள்ளது என்பதில் அவருக்கு திருப்தி. 


அவரை நாடி பல அரசியல்வாதிகளும் வரத் தொடங்கினர். அவர்கள் அங்கு அவரின் கையால் நீராட்டப்படுவார்கள் என்றும் அதன் மூலம் அவர்கள் நன்மைகளை அடைகிறார்கள் என்றும் கதை பரவியது. இதையடுத்து அவரது சிறிய வீடு மாளிகையானது. மோட்டார் சைக்கிளுக்கு பதிலாக மோட்டார் வாகனங்கள் என வாழ்க்கை வளர்ச்சி அடைந்தது. அவரை பல வி.வி.ஐ. பி.மார் சந்தித்ததால் அவரது பெயர் மிகவும் பிரபலமானது.  


ஞானக்காவின் வீடு அமைந்துள்ள காணியில் விஹாரையும் அரச மரம் ஒன்றும் காணப்படுகின்றது. ஒவ்வொரு சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வெள்ளை ஆடை அணிந்து அநேகமானோர் இந்த இடத்தில் கூடி தங்களுடைய எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதற்காக தங்களது தோஷங்கள் நீங்குவதற்காக பிரார்த்தனை செய்வார்கள். அதன்பின் ஞானக்காவின் தேவாலயம் இருக்கும் இடத்துக்கு வந்து கண்ணகி தேவிக்கு (பத்தினி) விளக்கேற்றி மலர்களை பூஜை செய்து வழிபட்டார்கள். அத்துடன் மாதத்துக்கு ஒருமுறை காளியின் அருள்பெற்று விளங்குவதாகவும் ஞானக்கா கூறியுள்ளார். காளி அன்னை ஒருபோதும் யாருக்கும் தீங்கு செய்யமாட்டார் என்றும் கூறியுள்ளார் . ஞானக்கா எந்தவொரு பூஜைக்கும் விலை நிர்ணயிப்பதில்லை. ஆனால் பக்தர்கள் பெருமளவு காணிக்கை செலுத்தத் தவறவில்லை.  


இந்நிலையில் அவரை சந்திக்க உயர் மட்டத்தினர் வருவதாகவும் அவரின் ஆலோசனைப்படியே நாட்டின் பயணப்பாதை மாற்றப்படுவதாகவும் சமூகத்தில் பேசப்பட்டது. இங்கை பொருளாதாரத்தில் ஏற்பட்ட வீழ்ச்சியை சமூக ஊடகங்கள் போன்று சில சமூக விமர்சகர்களும் ஞானக்காவின் ஆலோசனையின் பேரில் செயல்பட்டதால் தான் இந்த நிலைமை உருவானது என விமர்சித்தனர். அதனால் அவர்கள் ஏற்படுத்திய சமூக கருத்துகள் காரணமாக கடந்த ஏப்ரல் மாதம் 4ஆம் திகதி அவரது வீடு கற்களால் தாக்கப்பட்டு பாதிப்புக்குள்ளானது அவரது தேவாலயவும் பாதிப்புக்குள்ளானது.  



அதன் பின்னர் குறுகிய காலம் எந்தவொரு குழப்பமும் இல்லாது இருந்ததோடு மக்களின் கருத்திலும் எவ்வித மாற்றமும் இருக்கவில்லை. ஆனால் அவரை சந்திக்கவரும் மக்களின் எண்ணிக்கை குறிப்பிட்டளவு குறையத் தொடங்கியது.  


எவ்வாறாயினும் கடந்த மே 9ஆம் திகதி காலிமுகத்திடலில் போராட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் நாடு பூராகவும் ஏற்பட்ட கலவரத்தில் ஞானக்காவின் வீட்டின் மீது கடும் தாக்குதல் நடத்தப்பட்டது. அவ்வேளையில் அவர் அங்கு இருக்கவில்லை. மைத்துனரும் மகனும் நண்பர்களுமே வீட்டில் இருந்துள்ளார்கள். சம்பவம் நடைபெற்ற பின்னர் தனக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டுமென ராணுவ உயர் அதிகாரிகளிடம் கோரியுள்ளார். அதன் பின்னர் இராணுவத்தினரும் பொலிஸ் அதிகாரிகளும் வீட்டிற்கு அருகில் வந்துள்ளார்கள்.  


அதிகளவு மக்கள் அங்கு வந்து தாக்குதலை நடத்தியுள்ளார்கள். அவர்களில் சிலர் பக்கத்து கட்டடச் சுவரில் இருந்து ஏணி வைத்து வீட்டு வளவுக்குள் குறித்து வீட்டிற்குள் நுழைந்து பொருட்களை கொள்ளையடித்து சென்றுள்ளனர். 


அவர்கள் முதலில் ஞானக்காவின் அறையை கொளுத்தியுள்ளார்கள் பின்னர் ஏனையோரின் அறைகளையும் தீ வைத்துள்ளார்கள். நீர் விநியோகத்தையும் துண்டித்துள்ளார்கள். அதிகாலை வரை அந்த இடத்திலேயே இருந்துள்ளார்கள்.  


இது பற்றி ஞானக்கா என்ன சொல்கிறார்? நான் யாருக்கும் தொல்லையோ, இம்சையோ செய்தவரல்ல. நான் இந்த அழிவை தாங்கிக் கொள்வேன். நான் கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்ததிலேயே இவை அனைத்தையும் கட்டி எழுப்பினேன். எனக்கு ஏதேனும் ஒரு சக்தி இருந்தால் அதனை மக்களின் நன்மைக்காகவே பயன்படுத்தினேன்.  


பௌத்த தர்மத்துக்கு அமையவே நான் வாழ்க்கை நடத்தினேன். இந்த அழிவைப் பார்த்து நான் கவலை அடையவில்லை என்று கூற மாட்டேன். இதுபற்றி கதைப்பதில் எவ்வித பிரயோசனமும் இல்லை.  


பலர் என்னிடம் அழிந்தவற்றை நாம் மீளவும் கட்டியெழுப்புவோம் என்று கூறுகின்றார்கள். அவர்கள் என்னிடம் ஏதேனும் ஒரு சேவையை பெற்றவர்கள். நான் அரசியல்வாதிகளிடம் இருந்து ஒரு ஐந்து சதம்கூட பெறவில்லை. அப்படி யாராவது என்மீது குற்றம் சுமத்தினார்களானால் சட்டத்தின்முன் செல்லவும் நான் தயார். நான் மிகவும் துயரங்களை அனுபவித்த பெண். இந்த துயரத்தையும் நான் தாங்கிக் கொள்வேன் என்கிறார் ஞானக்கா.  


அவரின் அருகில் எப்போதும் இருப்பவரான சாரதியின் கூற்றைப் பார்ப்போம்! அம்மாவை அனேகமானோர் நேசித்தார்கள். இவர்களுக்கு ஏதேனுமொரு விதத்தில் அம்மாவின் மூலம் தன்மை கிட்டியதால்தான் அவரைத் தேடி வருகின்றார்கள். அவ்வாறானவர்கள் இதனை செய்திருக்க மாட்டார்கள். இதன் பின்னணியில் உள்ளவர்களை கண்டுபிடிப்பது சட்டத்தின் பொறுப்பாகும். அவர் எந்தவொரு பயணத்தையும் என்னுடனேயே செல்வார். அதனால் நான் அவர் பற்றி நன்கறிவேன் என்பது அவர் கருத்து. 


விடயங்கள் எவ்வாறு இருந்தாலும் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றங்கள் பல உண்டு. அதில் அனுமதி இல்லாமல் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் ஹோட்டல் ஒன்றை அமைத்தது காலிமுகத்திடல் போராட்டக்காரர்கள் மீது வெளிநாட்டிலிருந்து வான் மூலம் தூவுவதற்காக கொண்டுவரப்பட்ட மலர்களை சபித்து வழங்கியது போன்றவையாகும்.  


ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகளை அவர் மறுக்கிறார். அவர் ஒரு போதும் வி.ஐ.பி.மாரை நீராட்டியது இல்லை என்றும் அவ்வாறு செய்வதற்கான வசதிகள் அங்கு இல்லை என்றும், யுத்தத்தின்போது தன்னிடம் ஆசி பெற வந்தவர்களுக்கு ஆசிகளை வழங்கியதாகவும், போராட்டக்காரர்களை சபிக்கவில்லை என்றும் அவர் கூறுகின்றார்.  


எவ்வாறாயினும் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியில் நீச்சல் தடாகம் ஒன்றை அமைப்பதற்காக நீர்ப்பாசன திணைக்களத்திடம் அவர் அனுமதி கேட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 


தற்போது ஞானக்காவின் வீடு மாத்திரமல்ல அவரது பெரும்பாலான சொத்துக்களும் சாம்பலாகியுள்ளன. அவரது சொத்துக்களை காப்பாற்ற அவரது தெய்வங்கள் முன்வரவில்லை என்பது நாம் ஆழமாக யோசிக்க வேண்டிய விஷயம். 


தாரக விக்ரமசேகர

தமிழில்: வயலட்

No comments

Powered by Blogger.