Header Ads



இன்டக்கி அட்டுலுகமைல, நாளக்கி எங்கட ஊர்ல...!


கண்டதும் ஆசையோடு தொட்டு கொஞ்ச நினைக்கும் மெழுகு பொம்மைகள் போல இருக்கும் ஆண் குழந்தைகளோ பெண் குழந்தைகளோ? அவர்களை எவ்வளவு நெருக்கமானவர்களுக்கும் தொட அனுமதிக்க மாட்டார்கள் அரபிகள்.

இந்த விசயத்துல 80-90களிலேயே எனக்கு அரபிகள் மேல செம காண்டாகும்,

பூக்களை போன்ற மென்மையான இந்த பிஞ்சுக் குழந்தைகளை தொட்டு கொஞ்ச அனுமதிக்காத இவங்க மனுசன்களானு கூட நினைக்கும்.

நீளக் கண்களும் பம்பாய் மிட்டாய் தலைமுடியுமாக, துருதுருனு இருக்கும் 

வெள்ளைக்கார குழந்தைகளை காணும் போதும் அவர்களை அப்டியே தூக்கி கொஞ்சலாம்னு நினைக்கும். 

ஆனால் அங்கே அவர்களும் குழந்தைகளை தொட அனுமதிக்க மாட்டார்கள் என்பதை அறிந்த போது மனசுக்கு என்னவோ போல இருக்கும்.

அரபிகளை காட்டுமிராண்டிகளாகவும் வெள்ளைக்காரர்களை நாகரீகமானவர்களாகவும் பார்த்துப் பழகிய எமக்கு, இந்த ‘குழந்தைகள்’ விசயத்தில் இந்த ரெண்டு கூட்டமும் ஒரே புள்ளியில் இணைவதை கண்டதும், “ஆகா, நிறவெறியில தான் இவங்க ரெண்டு கூட்டமும் ஒன்னாகுறாங்க”னு எனக்குள்ள நானே ஒரு கணக்கு போட்டுக் கொண்டதுண்டு.

இங்கிலாந்தில் வாழும் காலத்தில் ‘Pedophile’ என்ற வார்த்தைக்கு அர்த்தம் தெரிந்துகொண்ட பின்னர் தான் மேலே கூறிய அந்த புரிதல் எந்தளவு தப்புக் கணக்குனு எனக்கு விளங்கியது. 

அரேபிய நாடுகளில் அதிகம் பேசப்படா விட்டாலும் இங்கிலாந்தில் பத்திரிகைகளில் இந்த “Peado” க்கள் பற்றிய செய்திகள் அடிக்கடி வருவதுண்டு. 

அரபு நாடுகளில் இன்னும் சாகாமல் இருக்கும் இஸ்லாமிய விழுமியங்களும் பாலியல் பலாத்காரங்களுக்கான கடுமையான சட்டங்களும் அந்த நாட்டில் பாலியல் வன்முறைகள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளன எனலாம்.

அதே சமயம் மேலை நாடுகளில் சிறுவர் பாலியல் பாலாத்காரத்தில் ஈடுபடுபவர்கள் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டாலும், அவர்களுக்கு Electronic Tag அணிவித்திருப்பார்கள், 

மேலும் பெண்கள் பாடசாலை வளாகங்கள் மற்றும் தமது பெண் குழந்தைகளின் அருகில் செல்வது கூட இந்த குற்றவாளிகளுக்கு தடை. 

அராபிய, ஐரோப்பிய நாடுகளை போலன்றி எமது நாட்டில் சிறுவர்கள் எமது நெருங்கிய உறவுகளாலேயே அத்துமீறப்படுவது தான் சோகம்.

நாங்களோ Good touch, Bad touch பற்றி அரைகுறையாக பாடம் நடத்த, அவர்கள் No touch என்று அழுத்தம் திருத்தமாக சொல்வதன் நோக்கம் விசாலமானது, இது அவ்வளவு இலகுவாக கடந்து போக முடியாத சென்சிட்டிவான விசயம். 

எமது சமூகத்தில் அதிகமாக மாமா, சாச்சா, அப்பா, சாச்சி பெரியம்மாக்கள் வழிவந்த நானாமார்களால் சர்வ சாதாரணமாக பாலியல் துன்புறுத்தல்கள் நடாத்தப்படுகிறது. 

இப்படியாக தனக்கு நடந்த கொடுமையை  பெற்றவர்களிடம் முறையிடுவது எப்படிப் போனாலும், தனக்கு இப்படியான ஒரு அநியாயம் நடாத்தப்படுவது கூட தெரியாத இந்த மழலைகள் சிரித்துக் கொண்டே கடந்து போவது தான் கொடுமை.

இன்னும் எமது மத்ரசாக்களில் சிறுவர் பாலியல் பலாத்காரங்கள் கிட்டத்தட்ட ஹலாலாக்கப் பட்டு விட்ட அளவுக்கு முற்றிப் போயுள்ளதை யாருமே பேச முன்வருவதில்லை.

இது போன்ற ஊரறிந்த ரகசியங்களை வெளிப்படையாக போட்டுடைக்கும் என்னை போன்றவர்களை காஃபிர்களை போல பார்க்கும் இஸ்லாமிய பய்யாக்கள், 

ஆனால் குற்றம் செய்து ட்ரான்ஸ்பர் ஆன போலீஸ்காரன் போல இந்த கொதரத்துமார் இன்னொரு குக்கிராமத்து குர்ஆன் மத்ரசாவில் தனது சேஷ்டைகளை தடையின்றி தொடர்ந்து செய்வார். 

இத்தனை ஓட்டைகளையும் வைத்துக்கொண்ட இளக்காரமான ஒரு சமூகமான நாங்கள், #JusticeForAyisha னு ஹேஷ்டேக் போட்டுட்டா மாத்திரம் தீர்ந்திடுமா இந்த நாசங்கள்? 

நாளைக்கு ரெண்டு மூன்று பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைத்து பத்தோ பனிரெண்டோ வருட சிறைவாசத்தை அனுபவிக்கும் காலத்தில், தினம் நூறு ஆயிஷாக்கள் மாத்திரமின்றி குட்டி அப்துல்லாக்களும் உரிமையோடு சிதைக்கப்பட்டுக்கொண்டிருப்பார்கள், 

பச்சிளம் ஆயிஷாக்களை கொன்ற, பூக்களை போன்ற வித்யா, சேயாக்களை சீரழித்து கொன்ற மாபாதகர்களை சிறையில் வைத்து, உணவளித்து, நோய்வாய்ப்பட்டால் மருத்துவமனையில் வைத்து பராமரிக்க ஆயிஷாக்களின், வித்யாக்களின் குடும்பத்தவர்கள் தினம் காசு கொடுத்து வாங்கும் மாவிலும் சீனியிலுமிருந்து வசூலித்த வரிகளில் இருந்து தான் செலவு செய்யப்போகிறார்கள், என்பதை விட கொடுமை வேறு இருக்க முடியாது.

கொல்லப்பட்டதால் மாத்திரமே ஆயிஷா, சேயா போன்ற  பெயர்கள் உச்சரிக்கப்படுகின்றன. 

தன்னையறியாமல் சிறு பராயத்தில் தான் சீரழிக்கப்பட்டது வளர்ந்து பெரியவனா(ளா)னதும் தெரியவரும் போது ஏற்படும் காயங்களை சுமந்து, நடமாடும் பிணங்களாக சிலரும், 

மிம்பர் மேல் இருந்துகொண்டு அதை செய்யாதே, இதை செய்யாதே என்று சதா சமூகம் மீது காழ்ப்புணர்ச்சியை கொட்டி பெண்கள் மீது வசைபாடும் சிலரையும் எமக்கு அடையாளம் காண முடிவதில்லை. 

கொலைகாரர்களும், போதைப்பொருள் வியாபாரிகளும்  சட்டமியற்றுமவர்களாக இருக்கும் ஒரு நாட்டில் #JusticeFor……. எல்லாம் வார்த்தை கெட்ட வார்த்தையாகவே தோணுது. 

ஊர்ல திடீர்னு ஒருத்தன் கோடிகள்ல புரண்டு, புத்தம் புதிய கேடீஎச்ல வாரான் என்டா, அவன புடிச்சி ஊர்ல இருக்குற அத்தன கமிட்டிகள்லயும் திணிச்சி அழகு பார்ப்பதை விட்டுவிட்டு, அவன் என்ன செய்து காசு பண்றான்னு தேடும் சமூகமாக மாற வேண்டும்.

ஒரு காலத்துல, “அந்த ஹாஜியார் தான் நாட்டுக்கே தூள் சப்ளை பண்றாராம், இந்த ஹாஜிதான் இப்போ கோட்ஃபாதர்”னு பெருமையா பீத்தின சமூகம் நாங்க.

இப்ப என்னடான்னா, நாட்ல போதைவஸ்த்து பாவனைல மெஜாரிட்டி நாங்க, வாழ்க்கை ஒரு பூமராங். 

இன்டக்கி அட்டுலுகமைல, நாளக்கி எங்கட ஊர்ல … 

“எங்கட வீட்டு கதவ தட்டும் வரை தான் இது அடுத்தவன் பிரச்சின”

எல்லாத்துக்கும் பணக்காரன் தான் தலைமை வகிக்கணும் என்ற முகஸ்துதி கலந்த மாயையில் இருந்து என்றைக்கு விடுபடப் போகிறோமோ அன்றைக்கு விமோசனம் கிடைக்கும், அதுவரை ….!?

#மொதல்லநாங்கமாறலாம்

Shaheed Rizwan

1 comment:

Powered by Blogger.