Header Ads



பொரளை தேவாலயத்திற்கு வந்த கைக்குண்டு - மல்கம் ரஞ்சித்தை விமர்சிக்கும் சரத் வீரசேகர


பொரளையில் உள்ள ஓல் செயின்ட்ஸ் தேவாலயத்திலிருந்து கைக்குண்டு ஒன்று மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில் நேற்றைய தினம் கொழும்பு ஆயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில், பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் கருத்து தெரிவித்திருந்தார்.

அன்றைய தினம் முற்பகல் 9.52க்கு நபர் ஒருவர், நொண்டியவாறு பை ஒன்றுடன் தேவாலயத்திற்குள் நுழைந்து, ஒரு சிலைக்கு அருகில் சென்று, தமது காற்சட்டை உள்ளே இருந்தோ, அல்லது பையில் இருந்தோ ஏதோ ஒன்றை வெளியே எடுப்பதை, காணொளி காட்சிகளில் அவதானிக்க முடிவதாக பேராயர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தேவாலயத்தில் இருந்த ஒருவர், அங்கு சென்றபோது, குறித்து நபர் உடனே அங்கிருந்து வெளியேறுகிறார்.

இந்தக் காணொளிக் காட்சியை காவல்துறையினர் பார்க்கவில்லை.

இந்த நிலையில், காவல்துறையினர் ஏன், பிற்பகல் 3 மணியின் பின்னரான காணொளிக் காட்சிகளை மாத்திரம் பார்க்கவேண்டும் என்று கூறினர் என பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை வினவியுள்ளார்.

தேவாலயத்தை தூய்மைப்படுத்தும் பணியில் ஈடுபடும் நபர்தான் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

அவர் தேவாலயத்தை தூய்மைப்படுத்தும்போது, குறித்த இடத்திற்கு சென்றதும், கீழே குனிந்து ஏதோ ஒன்றை எடுத்து மேலே வைக்கிறார்.

எனவே, முற்பகல் வேளையில் குறித்த நபர் வைத்துவிட்டுச் சென்றதைத்தான் அவர் எடுத்து மேலே வைக்கிறார் என்று தாம் கருதுவதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.

ஏனெனில், அந்த நபர் அதை வைத்திருந்தால், அதை மீண்டும் அவர் எடுத்து மேலே வைப்பாரா?

எனவே, காவல்துறையினர் தெரிவிக்கும் விடயம் உண்மைக்குப் புறம்பானது என்பதை வெளிப்படுத்தும் வகையிலான சில காரணங்கள் உள்ளதாக பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் தெரிவித்திருந்தார்.

இவ்வாறான பின்னணியில், பொரளை 'ஓல் செயின்ட்ஸ்' தேவாலயத்தில், கைக்குண்டு மீட்கப்பட்ட சம்பவம் தொடர்பில், மேலும் சில சந்தேகநபர்களைக் கைதுசெய்ய காவல்துறை நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

மீரிகம பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி, நால்வரைக் கைதுசெய்தனர்.

இதன்போது, அங்கிருந்த 14 வயது சிறுவன், நீதிவான் முன்னிலையில் சாட்சியமளித்தார்.

அந்த தேவாலயத்தில் சுமார் 10 மாதகாலமாக பணியாற்றிய நபர் ஒருவர், குறித்த கைக்குண்டு இருந்த பையை வழங்கியதாக கூறினார்.

அந்த நபர் அதை ஒப்புக்கொள்கிறார்.

கைக்குண்டு இருந்த பையைக் கீழே வைத்து, கைக்குண்டை தாமே மேலே எடுத்து வைத்ததாகவும் அந்த நபர் ஒப்புக்கொள்கிறார்.

ஊதுபத்தியை பற்றவைக்கும்போது, அந்தக் கைக்குண்டு வெடிக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

தேவாலத்தில் உள்ள குறித்த நபரின் அறையைச் சென்று பார்க்கும்போது, அங்கு தீப்பெட்டி, ஊதுபத்தி, டேப் என்பன இருந்தன.

இதன் காரணமாகவே அவரைக் கைதுசெய்ததாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

இது தவறு என எவராவது கூறுவராயின், அது மிகவும் தவறான கருத்தாகும்.

காவல்துறையினர் குறித்து நம்பிக்கையீனம் ஏற்படும் வகையில் இவ்வாறாக கருத்து தெரிவித்தால், காவல்துறையினர் அது தொடர்பில் செயற்படுவதில் பிரச்சினை ஏற்படும்.

இதுபோன்ற தகவல்கள் இருக்குமாயின், அதனைக் காவல்துறையினருக்கு வழங்க வேண்டியது தேவாலயங்களில் உள்ள அருட்தந்தையர்களின் பொறுப்பாகும்.

அதைவிடுத்து, அவற்றை ஊடகங்களுக்கு வழங்கினால், அதன்மூலம் சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவாகி இருக்க முடியும்.

இதன்போது தங்களால் தேட முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள பிரபல வைத்தியசாலை ஒன்றில் கைக்குண்டு வைத்தவர் பின்னணியிலும், இந்த தேவாலயத்தில் கைக்குண்டு வைத்தவர் பின்னணியிலும் உள்ள பிரதான சூத்திரதாரி யார் என்பதைக் கண்டறிவதாக தாம் உறுதியளிப்பதாகவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

3 comments:

  1. என்ன இது குண்டு வைத்து விளையாட விளையாட்டு மைதானம் என்று நினைத்து விட்டார்களா? எந்த மததளத்தையும் எந்த வகையிலும் யாருக்கும் தாக்க அனுமதிக்க முடியாது. இதற்கு இன்னும் இடம் கொடுத்து அரசாங்கம் மனித உயிர் மற்றும் உடைமை களில் விளையாட நினைத்து விட கூடாது. உங்கள் விளையாட்டு வித்தைகளை உங்க அரசியல் மேடைகளில் மட்டும் வைத்து கொள்ள வேண்டும். வெறும் ஆட்சி அதிகாரத்திற்காக மதங்களை வைத்து விளையாட கூடாது. அது மோடியின் மதவெறி மற்றும் இரத்த வெறி பிடித்த இந்தியா வோடு மட்டும் இருக்க வேண்டும். லங்காவில் விளையாட எந்த வெறியனுக்கும் இனி இடம் கொடுக்க முடியாது.

    ReplyDelete
  2. இந்த நாட்டில் சிந்திக்கும் மக்கள் அனைவரையும் ஹரக்குகளாக மாற்ற இந்த ஹரக் வீரசேகர முயற்சி செய்கின்றார்.

    ReplyDelete
  3. ஆம் அது முக்கியமான ஒரு விடயம். அதுபோல் இலங்கையில் உள்ள முஸ்லிம் பள்ளிவாயல்கள் எதனையும் தனியாகத் திறந்துவிட்டுச் செல்லக்கூடாது. அப்படியே திறந்துவைத்திருந்தால் கண்டிப்பாக பள்ளிக்குப் பொறுப்பான ஒருவர் அங்கு நடப்பவைகளைக் கண்காணிப்புடன் உற்று நோக்க வேண்டும். இந்த விளையாட்டை முஸ்லிம் பள்ளிவாயல்களிலும் விளையாட முயற்சி செய்யமாட்டார் என்பதற்கான எந்த ஆதாரங்களும் இல்லை.

    ReplyDelete

Powered by Blogger.