Header Ads



சஜித் போன்று, என்னை பொம்மையென நினைத்துவிட வேண்டாம் - ஐக்கிய மக்கள் சக்தியின் உரிமம் எங்களிடம் இருக்கிறது


மழைக்கு ஒதுங்குவதற்காக எனது வீட்டில் இடமளித்த போது, வீட்டுக்குள் வந்தவர்கள் நான் இல்லாத நேரத்தில் வீட்டுத் திறப்பை மாற்றியது மட்டுமல்லாது என்னையே வீட்டை விட்டு வெளியேற்ற முயற்சிக்கின்றனர், ஆனால் வீட்டின் உரித்து இன்னமும் என்னிடமே உள்ளது என சபையில் சீறிப்பாய்ந்த பாராளுமன்ற உறுப்பினர் டயனா கமகே, எதிர்க்கட்சி தலைவர்  சஜித் பிரேமதாச போன்று என்னை பொம்மையென நினைத்துவிட வேண்டாம் எனவும் அவர் கூறினார்.

 பாராளுமன்றத்தில் நேற்று வெள்ளிக்கிழமை, 2021ஆம் ஆண்டு நடுப்பகுதியின் நிதி நிலைமைகள் தொடர்பான அறிக்கை மீதான சபை ஒத்திவைப்பு விவாதம் இடம்பெற்ற வேளையில் அதில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறினார். 

அவர் மேலும் கூறுகையில்,

 ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் என்னை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக கூறியதாக தெரிவித்து ஊடகவியலாளர்கள் என்னிடம் கேட்டனர். அப்படியொன்றும் நான் அறியவில்லை என்று அவர்களுக்கு பதிலளித்தேன். என்னைப் பற்றி தீர்மானம் எடுக்கும் போது எனக்கு தெரியாது ஊடகங்களுக்கு கூறுகின்றீர்கள்.இந்த செயலுக்காக உண்மையிலேயே கட்சியின் செயலாளர் உள்ளிட்டோர் வெட்கப்பட வேண்டும்.  ஆனால் இந்த விடயம் கட்சியின் செயற்குழுவை சேர்ந்த சிலருக்கு தெரியாது.

எவ்வாறாயினும் என்னை கட்சியிலிருந்து நீக்க தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சிறுபிள்ளைகள் போன்று நடந்துகொள்கின்றனர்.

 இந்தக் கட்சி எனது கணவரின் கட்சியே. பெரும் மழையில் சிக்கியிருந்தவர்களுக்கு எனது வீட்டில் இடமளித்திருந்தேன். ஆனால் நான் வீட்டில் இருந்து வெளியே சென்றிருந்த போது வீட்டின் திறப்பை மாற்றி, அவர்களின் வீடு என்று அதனை கூறுகின்றனர். இதனுடன் தொடர்புடைய அனைவருக்கும் ஒன்றை கூற வேண்டும்.

வீட்டின் உரித்து என்னிடமே உள்ளது. உங்களின் கட்சிக்குள் வேண்டியளவுக்கு பிரச்சனைகள் உள்ளன. துண்டுகளாக பிரிந்துள்ளன. உங்களின் தலைவரிடம் வேலைத்திட்டங்கள் இல்லையென கட்சியினர் கூறுகின்றனர். அங்கு பல்வேறு அணிகளாக பிரிந்து செயற்படுகின்றனர்.

நானும், கணவரும் இந்தக் கட்சியை கொடுத்த காரணத்தினாலேயே இவர்கள் இங்கே வந்துள்ளனர். இல்லாவிட்டால் இங்கிருப்பவர்களில் அரைவாசிப் பேருக்கு ரணில் விக்கிரமசிங்க வேட்பு மனுவை வழங்கியிருக்கமாட்டார்.

இவர்களில் பலர் இங்கு இருக்கமாட்டார்கள். நான் இந்தக் கட்சியில் பொம்மை இல்லை. இப்போதும் உறுப்பினரே. கட்சியின் உரிமையாளர் என்ற உறுப்பினராக இருக்கின்றேன்.

சஜித் பிரேமதாச போன்று என்னை பொம்மையாக்க வேண்டாம். அப்படி நான் நடந்துகொள்ள மாட்டேன். எனது மனசாட்சிக்கு இணங்கவே அரசாங்கத்திற்கு ஆதரவளிக்கும் தீர்மானங்களை எடுத்தேன். இதன்படி தொடர்ந்தும் தீர்மானம் எடுப்பேன் என்றார். 

வீரகேசரி

No comments

Powered by Blogger.