Header Ads



இராகலை தீ விபத்தில் 5 பேர் பலி விவகாரத்தில், உயிர்தப்பிய மகன் கைது; திடுக்கிடும் தகவல்கள் வெளியாகின


- HiruNews -

ஐவரின் உயிர்களைக் காவுக்கொண்ட இராகலை தீ விபத்து தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கமைய, உயிரிழந்த தம்பதியினரின் மகனை இராகலை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். 

இச்சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட குறித்த சந்தேக நபர் நேற்று (12) வலப்பனை நீதிவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டபோது, அவரை எதிர்வரும் 25 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் டி.ஆர்.எஸ்.குணதாச உத்தரவிட்டார். 

இச்சம்பவம் தொடர்பில் இராகலை காவல்நிலையத்தினர் உள்ளிட்ட மேலும் பல காவல்துறை குழுக்கள் கடந்த நான்கு நாட்களாக விசாரணைகளை முன்னெடுத்திருந்தன. அதற்கமைய, சம்பவத்தில் உயிரிழந்த தம்பதியினரின் மகனை காவல் நிலையத்தில் தடுத்துவைத்து இராகலை காவல்துறையினர் விசாரணைகளை முன்னெடுத்திருந்தனர். 

காவல்துறையினரின் விசாரணைகளில், சம்பவ தினத்தன்று குறித்த சந்தேகநபர் இராகலை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெற்றோல் வாங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. 

அத்துடன், வீடு தீப்பற்றி எரிந்தபோது, அதனை அணைக்க வந்த மக்களிடம் வீட்டில் எவரும் இல்லையென அவர் கூறியுள்ளதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

அதற்கமைய, காவல்நிலையத்தில் தடுத்து வைத்திருந்த அந்நபரை நேற்று (12) காவல்துறையினர் கைதுசெய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியதையடுத்து விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

இராகலை காவல்துறை பிரிவுக்கு உட்பட்ட இராகலை தோட்டம் முதலாம் பிரிவில் கடந்த 7 ஆம் திகதி வீடொன்றில் தீ அனர்த்தம் ஏற்பட்டிருந்தது. 

இவ்விபத்தில் ஒரு வயது குழந்தை மற்றும் 12 வயது சிறுவன் உட்பட ஐவர் தீயில் கருகி சம்பவ இடத்திலேயே பலியாகினர். இராமையா தங்கையா (61), அவரின் மனைவியான செவனமுத்து லெட்சுமி (57), ஆகியோரும் அவர்களின் மகளான தங்கையா நதியா (34) அவரது பிள்ளைகளான, துவாரகன் (13), ஹெரோசன் (வயது 01) ஆகியோரே இவ்வாறு தீயில் கருகி உயிரிழந்திருந்தனர்.

No comments

Powered by Blogger.