Header Ads



இலங்கை முஸ்லிம்களை தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கு, பயங்கரவாத தடைச்சட்டம் பயன்படுகிறது - மனித உரிமைகள் கண்காணிப்பகம்


ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் ஜெனிவாவில் நாளை (13) ஆரம்பமாகி 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான 46/1 தீர்மானத்தின் முன்னேற்றம் தொடர்பில் வாய்மூல அறிக்கை சமர்ப்பிக்கப்படவுள்ளது.

COVID பெருந்தொற்று நிலைமை காரணமாக இம்முறை கூட்டத்தொடரில் காணொளி மூலம் வௌிவிவகார அமைச்சர் பேராசிரியர் G.L.பீரிஸ் கலந்துகொள்ளவுள்ளார்.

இலங்கை தொடர்பான உண்மை நிலைமையை இதன்போது அறிவிக்கவுள்ளதாக வௌிவிவகார அமைச்சர் ஏற்கனவே தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனால் ஐ.நா மனித உரிமைகள் பேரவைக்கு கடிதமொன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணி சார்பிலும் தனியாக கடிதமொன்று அனுப்பப்பட்டுள்ளதுடன், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இரு பங்காளிக்கட்சிகள் அடங்கலாக ஐந்து கட்சிகள் இணைந்து வேறொரு கடிதத்தை அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, இலங்கையின் மோசமான மனித உரிமை நிலைமையை, ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை ஆழமாக ஆராய்வதுடன், உண்மையான முன்னேற்றத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் என மனித உரிமைகள் கண்காணிப்பகம் வலியுறுத்தியுள்ளது.

சுயாதீன அரசாங்க நிறுவனங்கள், மக்களாட்சி மற்றும் சட்டவாட்சியில் நிலவும் பலவீனம், அரசாங்கத்தின் துஷ்பிரயோகங்கள் தொடர்பில் ஐ.நா உறுப்பு நாடுகள் எச்சரிக்கை விடுக்க வேண்டும் எனவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்தகால கொடுமைகள், முறைகேடுகளை முடிவிற்கு கொண்டுவருவதில் இலங்கை மேற்கொண்ட வரையறுக்கப்பட்ட முன்னேற்றம், 2019 கோட்டாபய ராஜபக்ஸ ஜனாதிபதியாக பதவியேற்றதிலிருந்து, பேரழிவு தரும் வகையில் தலைகீழாக மாறியுள்ளதாக கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாக்ஷி கங்குலி தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் நீதிக்கான கோரிக்கையை மௌனிக்கச் செய்யவும் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் முஸ்லிம்களை தன்னிச்சையாக தடுத்து வைப்பதற்கும் பயங்கரவாத தடைச்சட்டத்தை அதிகாரிகள் பயன்படுத்துவதாகவும் மனித உரிமைகள் கண்காணிப்பகம் கூறியுள்ளது.

No comments

Powered by Blogger.