Header Ads



துமிந்த சில்வா செய்த நல்ல காரியம் - 16 வருடங்கள் ஏமாற்றி பிழைப்பு நடத்தியவர்களுக்கு ஆப்பு


சுமார் 16 வருடங்களுக்கும் மேலாக அரசாங்கம் மற்றும் தேசிய வீடமைப்பு சபையைத் தவறாக வழிநடத்தி, தனியார் ஒருவரால் கையகப்படுத்தப்பட்டிருந்த கொழும்பு டார்லி வீதியிலுள்ள பல கோடி ரூபா பெறுமதியான 1.34 ஏக்கர் காணியை மீண்டும் அரசாங்கத்துக்குச் சுவீகரிக்கத் தேசிய வீடமைப்பு அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. 

கடந்த காலங்களில் ஆட்சியாளர்களுடன் கூட்டுச் சேர்ந்து பல்வேறு தரப்பினர் இந்த காணியை முறைக்கேடான வகையில் பயன்படுத்தி அதனூடாக சட்டவிரோதமாக பல கோடி ரூபாவை ஈட்டியுள்ளனர். 

இந்த மோசடி கொடுக்கல் வாங்கலுடன், கொழும்பு மாநகரசபை  முன்னாள் முதல்வராக இருந்த ஆளுநர் ஒருவரின் மகனும்  தொடர்புப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ள அதேவேளை, குறித்த ஆளுநரின் மகன் இந்த சொத்து அபிவிருத்தி நிறுவனத்தின் பங்குதாரராகவும் செயற்பட்டுவருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கடந்த ஒன்றரை தசாப்த காலமாக இந்த காணி தொடர்பில் அரசாங்கமோ தேசிய வீடமைப்பு அதிகாரசபையோ எவ்வித நடவடிக்கையையும் எடுத்திருக்கவில்லை. 

எனினும், தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் புதிய தலைவர், கொழும்பு 10 டார்லி வீதியில் அமைந்துள்ள குறித்த காணி தொடர்பில் தமது அதிகார சபையுடன் ஏற்படுத்தப்பட்ட அடிப்படை உடன்படிக்கைக்கு முரணான வகையில் அபிவிருத்தி நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதாக தெரிவித்து  அது தொடர்பில் எடுக்கவேண்டிய நடவடிக்கை குறித்து சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சட்ட ஆலோசனைகளைக் கோரியிருந்தார்.

இந்த கோரிக்கைக்குப் பதிலளித்த சட்டமா அதிபர் திணைக்களம், குறித்த உடன்படிக்கையைப் பரிசீலித்ததன் பின்னர், கடந்த 2006 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்ட கைமாறல் ஒப்பந்தத்தை ரத்துசெய்து குறித்த காணியை உடனடியாக அதிகார சபையின் கீழ் சுவீகரிக்குமாறு வீடமைப்பு அதிகார சபைக்கு அறிவித்தது. 

இதுதொடர்பில் Hiru செய்திப்பிரிவு தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் உயர் அதிகாரியொருவரை தொடர்புகொண்டு கேட்டபோது, தனியார் நிறுவனம் ஒன்று தேசிய வீடமைப்பு அதிகாரசபையுடன் ஏற்படுத்திக்கொண்ட அடிப்படை உடன்படிக்கை பல சந்தர்ப்பங்களில் மீறப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 

எனவே, இந்த நிறுவனம் மற்றும் உடன்படிக்கை தொடர்பில் எடுக்கவேண்டிய அடுத்தக்கட்ட நடவடிக்கை தொடர்பில் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஆலோசனை கோர அரச நிறுவனம் என்றவகையில் தாம் நடவடிக்கை எடுத்ததாக அவர் மேலும் தெரிவித்தார். 

அதன்போது, உடன்படிக்கைக்கு அமைய குறித்த நிறுவனம் செயற்பட்டிராத காரணத்தினால் இந்த உடன்படிக்கையை ரத்துசெய்து குறித்த காணியை வீடமைப்பு அதிகாரசபையின் கீழ் சுவீகரிக்குமாறு சட்டமா அதிபர் திணைக்களத்திடமிருந்து ஆலோசனை மற்றும் உத்தரவு கிடைத்ததாகக் குறித்த அதிகாரி மேலும் தெரிவித்தார். 

இதேவேளை, கடந்த 19 ஆம்திகதி தமது காணிக்குள் நுழைந்து தமது ஊழியர்களை விரட்டியடித்து அதனைக் கையகப்படுத்தியதாக லங்கா ரியலிட்டி இன்வெஸ்ட்மென்ட் நிறுவனம் (எல்.ஆர்.ஐ) முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை முற்றாக நிராகரிக்கும் தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் இந்த உயரதிகாரி மேலும் தெரிவிக்கையில், காணியைச் சுவீகரிக்க முன்னதாக அதுதொடர்பில் வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையுடன் உடன்படிக்கை மேற்கொண்ட எல்.என்.டி உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி நிறுவனத்துக்கு அறிவித்ததாக தெரிவித்தார். 

இது தொடர்பில் லங்கா ரியலிட்டி இன்வெஸ்ட்மன்ட் பீ.எல்.சி நிறுவனத்துக்கு ஏதேனும் சிக்கல் காணப்படின் அவர்கள் அதனை எல்.என்ட்.டி. உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி நிறுவனத்துடன் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, தேசிய வீடமைப்பு அதிகாரசபைக்கு லங்கா ரியலிட்டி இன்வெஸ்ட்மன்ட் (எல்.ஆர்.ஐ) நிறுவனத்துடன் எவ்வித கொடுக்கல் வாங்கல்களும் இல்லை எனவும் அவர் மேலும் தெரிவித்தார். 

இருவேறு சந்தர்ப்பங்களில் இரு வர்த்தக வங்கிகள் காணி அடகு வைப்பு 

அவ்வாறு குறித்த காணி தற்போது, இலங்கையின் முன்னணி வர்த்தக வங்கிகள் இரண்டில் அடகு வைத்து பாரியளவு தொகையை இந்த உடன்படிக்கையை மேற்கொண்ட நபர்கள் பெற்றுக்கொண்டுள்ளதாகவும் அது தொடர்பில் விசேட விசாரணையொன்றை தற்போது கையூட்டல் ஆணைக்குழு முன்னெடுத்துள்ளது என்றும் அவர் தெரிவித்தார். 

214 பேர்ச்சஸ் (1.34 ஏக்கர்) கொண்ட இந்த காணி தொடர்பான முதலாவது கொடுக்கல்வாங்கல் சந்திரிக்கா பண்டாரநாயக்கவின் ஆட்சிகாலத்தில் இடம்பெற்றுள்ளது. அக்காலப்பகுதியில் வீடு மற்றும் பொதுவசதிகள் அமைச்சராக பதவிவகித்த பேரியல் அஷ்ரப் குறித்த கொடுக்கல் வாங்கலில் தொடர்புபட்டுள்ளார். 

2005 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் இடம்பெற்ற இந்த கொடுக்கல்வாங்கலின்போது, அரசியல் ரீதியில் நெருக்கமான ஒருவரின் மகனுக்கு குறித்த காணியை வழங்கும்போது, அக்காணியின் பெறுமதி 712 மில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டிருந்தது.

அதற்கமைய, குறித்த கொடுக்கல் வாங்கலில் கொழும்பு டார்லி வீதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சித் தலைமை காரியாலயத்தை அண்மித்ததாக அமைந்துள்ள இந்த காணியின், ஒரு பேர்ச்சஸின் விலை சுமார் 3.32 மில்லியன் ரூபாவாக குறிப்பிடப்பட்டிருந்தது. 

2016 இல் சஜித்தும் பழைய பெறுமதியிலேயே காணியை வழங்கியுள்ளார்

2016 ஆம் ஆண்டு நல்லாட்சி அரசாங்கத்தில் வீடமைப்பு அபிவிருத்தி அமைச்சராக இருந்த சஜித் பிரேமதாஸ குறித்த உடன்படிக்கையை புதுப்பிக்கும்போது, குறித்த காணிக்கு 11 வருடங்களுக்கு முன்னர் மதிப்பிடப்பட்டிருந்த பெறுமதியையே பெற்றுக்கொண்டமை நகைப்புக்குரியதாகும். 

கொழும்பு மருதானை புனித ஜோசப் கல்லூரிக்கும் முன்னாள் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை காரியாலயத்துக்கு அடுத்தபடியாக அமைந்துள்ள இந்த காணியின் வணிகப் பெறுமதி 10 வருடங்கள் கழிந்தும் ஒரு சதமேனும் அதிகரிக்காமை புதுமையான விடயமல்லவா? 

சிற்சில அரசியல் விருப்பு வெறுப்புகளுக்காகப் பின்விளைவு குறித்து சிந்திக்காமல் மேற்கொண்ட இந்த கொடுக்கல் வாங்கல் ஊடாக அரசாங்கத்துக்கு ஏற்பட்டுள்ள நஷ்டத்துக்கு பொறுப்பு கூறவேண்டியவர்கள் யார்? 

எவ்வித விசாரணையும் இன்றி மேற்கொண்ட இந்த கொடுக்கல் வாங்கலால் அரசாங்கத்துக்கு பல கோடி ரூபா நஷ்டம் ஏற்பட்டுள்ளதென்பது மறைக்கமுடியாததொரு உண்மையாகும். 

16 வருடங்களின் பின்னர், இந்த தவறை சரிசெய்ய தேசிய வீடமைப்பு அதிகாரசபை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தமை மகிழ்ச்சிக்குரிய விடயமாகும். Hiru

1 comment:

Powered by Blogger.