Header Ads



ரிஷாட் இல்லம் தொடர்பில், போலி செய்தி - மற்றுமொரு பொய்யான தகவல் அம்பலம்


(இன்பாஸ்)

இலங்கை அரசியல் வரலாற்றில் அதிகமான போலிக் குற்றச்சாட்டுக்களை கொண்ட அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன் மீது, தற்போதைய காலகட்டத்தில், அவரின் வீட்டில் தற்கொலை செய்துகொண்ட “இஷாலினி” தொடர்பிலும், நாளுக்கு நாள் போலிச் செய்திகள் வெளிவந்துகொண்டிருக்கின்றன. 

அந்த வகையில், இன்று 02ஆம் திகதி பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தார். அதில், 29 வயதான பெண் ஒருவர் வேலைக்கு அமர்த்தப்பட்ட சந்தர்ப்பத்தில், அவரை, ரிஷாட் பதியுதீனின் மனைவியின் சகோதரர் பாலியல் துஷ்பிரயோகம் செய்ததாக வாக்குமூலம் அளித்திருந்ததாக தெரிவிக்கப்பட்டிருந்தது. குறித்த பெண்ணை, பொலிஸ் தரப்பினர், ரிஷாட் பதியுதீன் தற்போது வசிக்கும் இல்லத்திற்கு அழைத்துச் சென்று, அவர் வீட்டின் வெளிப்புறங்களை சுட்டிக்காட்டி, விசாரணைகளை மேற்கொள்வது போன்று, பெரிய சித்தரிப்பைக் காட்டி ஊடகங்கள் நேற்று செய்தி வெளியிட்டிருந்தன. 

ஆனால், இது சம்பந்தமாக பல கேள்விகளும் சந்தேகங்களும் எழுந்துள்ளன. குறித்த பெண், அந்த வீட்டில் வேலை செய்ததுமில்லை. குறித்த பெண் சாட்சியத்தை போலியாக உருவாக்கியுள்ளதாக அறியமுடிகின்றது. 

குறித்த யுவதி, 2009 - 2010 ஆம் ஆண்டுகளில், அவர் மீது பாலியல் துஷ்பிரயோகம் நடந்ததாக தெரிவித்து, ரிஷாட் பதியுதீன் தற்போது வசிக்கும் இல்லத்தை அடையாளம் காட்டுகின்றார். 

ஆனால், குறித்த காலப்பகுதியில் ரிஷாட் பதியுதீனோ அல்லது அவர் குடும்ப உறுப்பினர்களோ, அந்த பெண் தற்போது அடையாளம் காட்டிய இல்லத்தில் வசிக்கவோ, அவர்கள் அங்கு குடியேறவோ இல்லை என்பது ஆதார பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அந்த காலகட்டத்தில் ரிஷாட் பதியுதீன் அவ் வீட்டில் குடியேறாத நிலையில், இவ்வாறு போலியான தகவல்களை வெளியிடுவதானது எந்த வகையில் நியாயம்? 

ரிஷாட் பதியுதீனின் குடும்பத்தினர், குறித்த பெண்ணை அடையாளம் காட்ட வீட்டுக்கு அழைத்துச் சென்ற பொலிஸ் தரப்பிடம், "இந்தப் பெண் எங்கள் இல்லத்தில் வேலை செய்யவில்லை" என்று தெளிவாகக் கூறியும், பொலிஸ் ஊடகப் பேச்சாளர், யூகத்தின் அடிப்படையில் கூறப்படும் இவ்வாறான செய்திகளை, உறுதியான செய்திபோல், பொதுவெளியில் பகிரங்கமாக வெளியிடுவதானது மிகவும் கவலையான விடயமாகும். 

இந்த நிலையில், ரிஷாட் பதியுதீன் தொடர்பில், திட்டமிட்ட வகையில், செய்திகளை பிரசுரிப்பதும், ஆதாரங்கள் அற்ற குறித்த செய்திகளை சிங்கள ஊடகங்களும், முக்கிய தமிழ் ஊடகங்களும் மும்முரம் காட்டி வெளியிடுகிறது,  குறிப்பாக தமிழ் ஊடகங்களில் உள்ள முக்கியஸ்தர்கள் இவ்விவகாரத்தை பூதாகரமாக்கி தமிழ்-முஸ்லிம் இனத்திற்குள் விரிசலை உருவாக்கியுள்ளனர் . பத்திரிகை முக்கியஸ்தர்களால் மக்களுக்கு உண்மையான தகவல்களை வழங்கும் நோக்கத்தை தவிர்த்து இனவாதத்தை அடிப்பையாக்கிக் கொண்டு செயற்படுவது மிக வேதனை தருகின்றது. 

ரிஷாட் பதியுதீனின் இல்லத்தில் நடந்த இந்த தற்கொலை சம்பவத்தை வைத்து, நாட்டில் தற்போது நிலவும் அநேகமான பிரச்சினைகள், அரசாங்கத்தின் இயலாமைகள் மூடிமறைக்கப்பட்டுள்ளன என்பதே உண்மை.

இந்த நாட்டின், முஸ்லிம் சமூகத்தின் உரிமைக் குரலாக செயற்பட்ட தலைவர்களில் ரிஷாட் முக்கியமானவர். தொடர்ந்தும் செயற்படுபவர். அதற்கு மாற்றுக்கருத்தில்லை. அவர் மீது இவ்வளவு ஆவேசத்தை, இந்த அரசு கொட்டித் தீர்த்து, அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக அவரையும், அவரது குடும்பத்தினரையும் பழிவாங்குவதை, முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ளும் மனநிலையிலும் இல்லை என்பதே யதார்த்தம். 

ரிஷாட்டின் கைது, 90 நாட்களைக் கடந்தும், இன்னும் நீதி நிலைநாட்டப்படாமல், பயங்கரவாதத் தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டு, அவரின் மனைவி உட்பட குடும்பத்தினரையும் சிறையிலடைத்து சித்திரவதை செய்வது, எம்மை சொல்லொனாத் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.

இறைவன் மேல் நம்பிக்கை கொண்டுள்ளோம். தாமதமாகிலும் நீதியும், உண்மையும் என்றோ ஒரு நாள் வெல்லும்!

அசத்தியம் அழியும்! அந்த நாள் வரை, பொறுமையுடன் இறைவனிடத்தில் இறைஞ்சுவோம்..!

2 comments:

  1. உண்மை யா? இந்த ஆட்சியில்? கவனம் கம்பி எண்ண வேண்டும் உண்மை ஐ நினைத்து கூட பார்க்க கூடாது.

    ReplyDelete
  2. உண்மை யா? இந்த ஆட்சியில்? கவனம் கம்பி எண்ண வேண்டும் உண்மை ஐ நினைத்து கூட பார்க்க கூடாது.

    ReplyDelete

Powered by Blogger.