Header Ads



இலங்கை முஸ்லிம்களின வரலாற்றில், மெச்சத்தக்க மொஹம்மட்


இலங்கை வரலாற்றில் தேர்தல்கள் ஆணையாளராகவும், மேலதிக தேர்தல் ஆணையாளராகவும் பதவி வகித்த முதலாமவர். விரிவுரையாளர், ஆசிரியார், மார்க்கக் கல்வியை பூர்த்தி செய்த நளிமி. 

- முஹம்மட் மஹ்தூம் மொஹம்மட் -

கம்பஹா மாவட்டத்தின் அத்தனக்கல தேர்தல் தொகுதிக்குற்பட்ட கஹட்டோவிட்ட கிராமத்தைப் பிறப்பிடமாகக் கொண்ட மொஹம்மட்  அவர்கள் சாதாரண வர்த்தக குடும்பப் பிண்ணனியைக் உடையவராவார். 

இவர் திஹாரியைச் சேர்ந்த முஹம்மது சாலி முஹம்மது மஹ்தூம் மற்றும் கஹட்டோவிட்டவைச் சேர்ந்த அஹம்மத் அலி அமீனத் உம்மா தம்பதிகளின் 12 பிள்ளைகளுள் ஒன்பதாவதாக 1959.03.10ஆம் திகதி பிறந்தார்.

இவரது உடன்பிறப்புக்குள் நான்குபேர் சிறுவயதிலேயே இறந்து விட்டனர். தற்பொழுது ஐந்து சகோதரிகளும், இரு சகோதர்ர்களுள் உள்ளனர்.

தரம் 01 முதல் கல்விப் பொதுத் தராதர சாதாரண தரம் வரையில் கஹட்டோவிட்ட அல் பத்றியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் கற்றார். 

1976இல் பேருவலை ஜாமியா நளிமிய்யாவில் சேர்ந்து உயர்தரக் கல்வியுடன் மார்க்கத்தையும் கற்று அதனை  நிறைவு செய்தார்.

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் சிறந்த பெறுபேற்றைப் பெற்று பல்கலைக்கழகம் நுழையும் வாய்பபைப் பெற்று,  பல்கலைக்கழக கல்வியை பேராதெனிய பல்கலைக் கழகத்தில் பெற்றார்.

1983இல் கலாமானிப் பட்டத்தை பூர்த்தி செய்த பின்னர் ஜாமியா நளிமிய்யாவில் இணைந்து விரிவுரையாளராக கடமையாற்றினார். இக்காலப்பகுதியில் நளிமியா இஸ்லாமியா வெளியீட்டுப் பணியகத்தினால் வெளியிடப்பட்ட #முஸ்லிம்_நோக்கு மாத பத்திரிகையின் ஆசிரியராக பகுதிநேர கடமையாற்றினார்.

1986 இல் பட்டதாரிகளுக்காக அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட ஆசிரியர் நியமனத்தில் உள்வாங்கப்பட்டு, குருநாகல் மாவட்டத்தின் இப்பாகமுவ கல்விக் கோட்டத்திலுள்ள கும்பலங்க ஹமீதியா முஸ்லிம் மகா வித்தியாலயத்தில் நான்கு வருடங்களும்,

1990இலிருந்து கம்பஹா மாவட்டத்தின் நீர்கொழும்பு அல் ஹிலால் மத்திய கல்லூரியில் ஒருவருடமும் ஆசிரியராக சேவை புரிந்தார்.

1991 ஏப்ரலில் அகில இலங்கை ரீதியில் இலங்கை நிருவாக சேவைக்கு ஆட்சேர்ப்பு செய்வதற்காக நடாத்தப்பட்ட திறந்த போட்டிப் பரீட்சையில் தமிழ் மொழி மூலம் தோற்றி இரண்டாம் இடத்தைப் பெற்று சித்தியடைந்தார்.

பின்னர் ஆசிரிய சேவையிலிருந்து விலகி தேர்தல் திணைக்களத்தில் தேர்தல் ஆணையாளராக ஒருவருட பயிற்சியைப் பெற்றார்.

1992இல் மொனராகலை மாவட்டத்தின் உதவித் தேர்தல் ஆணையாளராக நியமிக்கப்பட்டு 1996 வரையான நான்கு வருடங்கள் இங்கு கடமையாற்றினார்.

1996 முதல் 2004 வரையில் பதுளை மாவட்டத்தினதும், 2004 முதல் 2007 ஜுலை வரையில் கம்பஹா மாவட்டத்தினதும் உதவித் தேர்தல் ஆணையாளராக கடமாற்றினார்.

2007 ஜூலை முதல் 2010 நவம்பர் வரையில் கம்பஹா மாவட்டத்தின் பிரதித் தேர்தல் ஆணையாளராக பதவி உயர்வு பெற்று கடமையாற்றானார்.

2010 முதல் 2015 வரையில் தேர்தல் செயலகத்தில் நிருவாகப் பிரிவுக்குப் பொறுப்பான பிரதித் தேர்தல் ஆணையாளராகவும் கடமையாற்றினார்.

தேர்தல் செயகம் தேர்தல்கள் ஆணைக்குழுவாக மாற்றப்பட்டதன் பின்னர் 2015 முதல் 2018 வரையில் தேர்தல்கள் ஆணைக்குழுவின் சட்டம் மற்றும் விசாரணைகள் பிரிவின் மேலதிக தேர்தல் ஆணையாளராக பதியுயர்வு வழங்கப்பட்டு சேவையைத் தொடர்ந்தார்.

2018 நவம்பர் முதல் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் தேர்தல்கள் ஆணையாளராக உயர் பதவியை வகித்து 2019 மார்ச் 10 ஆம் திகதி ஓய்வு பெற்றார்.

இலங்கை முஸ்லிம்களைப் பொறுத்தவரையில் மேலதிக தேர்தல் ஆணையாளர், தேர்தல்கள் ஆணையாளர் ஆகிய உயர் பதவிகளை வகித்த முதலாமவர் எனும் அந்தஸ்த்தை மொஹம்மட் அவர்கள் பெற்றுக்கொள்கின்றார்.

2020 டிசம்பரில் மீண்டும் தேர்தல் ஆணைக்குழுவின் அங்கத்தவராக நியமனம் பெற்று இன்றுவரையில் ஓய்வுகாலத்திலும் நாட்டுக்காக சேவை புரிந்து வருகின்றார்.

தேர்தல்கள் தொடர்பாக சர்வதேச ரீதியில் நடைபெற்ற மாநாடுகள், கருத்தரங்குகள், செயலமர்வுகள், கண்காணிப்புப் பணிகள் என 15 க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு சென்று அவற்றில் கலந்து கொண்டுள்ளார்.

உள்நாட்டில் தமிழ் சிங்கள மொழிகளில் நடைபெறும் தேர்தல்கள் சட்டம் தொடர்பான செயலமர்வுகளின் பிரதான வளராளராக நாடு பேராகவும் கலந்து கொண்டுவருகின்றார்.

தனது தாய்மொழியான தமிழில் தேர்தல் திணைக்களத்தின் அனைத்து ஆவனங்களையும் மொழி பெயர்ப்புச் செய்து இலங்கை சோசலிச குடியரசின் அரசியலமைப்பில் விதந்துரைக்கப்பட்டுள்ள அரசமொழிக் கொள்கையை முழுமையாக அமுல்படுத்துவதற்காக தேர்தல்கள் ஆணையாளரோடும், ஆணைக்குழுவோடும் இணைத்து பங்காற்றியவர். 

தேர்தல் ஆணைக்குழுவின் தேர்தல் தொடர்பான அறிக்கைகள் மொழிபெயர்க்கப் பட்டதும் இவரது காலத்திலேயே.

சிங்களம், தமிழ், ஆங்கிலம், அரபு, உறுது என பல மொழிகளை எழுத வாசிக்க முடியுமான திறமை இவருக்குள்ளது.

குறிப்பாக தேர்தல்கள் தொடர்பான அரச ஆவணங்களை சிங்கள் - தமிழ், மொழிபெயர்ப்பு செய்வதில் அளப்பெரிய பங்களிப்புக்களை செய்துள்ளார்.

சாதாரண குடும்ப பிண்ணனியில் பிறந்து ஜாமியா நளிமியாவின் மாணவனாகவும், பல்கலைக்கழக மாணவனாகவும், வரிவுரையாளராகவும், ஆசிராயராகவும், உதவி, பிரதி, மேலதிக தேர்தல் ஆணையாளராகவும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளராகவும் உயரிய பதவிகளை வகித்து, நாட்டுக்கும், சமூகத்திற்கும், தமிழ் மொழிக்கும் பாரிய பங்களிப்புக்களைப் மொஹம்மட் அவர்கள் புரிந்திருப்பது மிகுந்த மகிழ்ச்சிதரும் செய்தியாகும்.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர் மொஹம்மட் அவர்களின் இத்தகைய பங்கும் பணியும் வளர்ச்சியும் இலங்கை முஸ்லிம்களின வரலாற்றில் மெச்சத்தக்கதாகும்.

ஏ.எம். பறக்கத்துள்ளாஹ் + - தேடலின் சுவடு -

2021.03.10

No comments

Powered by Blogger.