Header Ads



ஜனாதிபதி ஆணைக்குழு நுணிப்புல் மேய்ந்துள்ளது - CTJ நிறைவேற்றிய 10 தீர்மானங்கள்


சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் விசேட செயற்குழு 28.02.2021ம் திகதி இன்று, ஞாயிற்றுக் கிழமை கொழும்பில் அமைந்துள்ள அமைப்பின் தலைமையகத்தில் நடைபெற்றது. அமைப்பின் தலைவர் சகோ. MALM ரிஸான் தலைமையில் நடைபெற்ற செயற்குழுவில் நிறைவேற்றப்பட்ட முக்கிய தீர்மானங்கள்.

01. கடந்த ஏப்ரல் 21 அன்று கிருஸ்தவ சகோதரர்களை இலக்கு வைத்து ஸஹ்ரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியின் தலைமையில் நடத்தப்பட்ட மிலேச்சத்தனமான உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் நிகழ்வை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

02. ஏப்ரல் 21 குண்டுத் தாக்குதலின் மூலத்தை ஆராய்வதற்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் பரிந்துரைகள் தற்போது வெளியிடப்பட்டுள்ள நிலையில் குறித்த பரிந்துரைகளில் இந்நாட்டு மக்கள் எதிர்பார்த்த முக்கியமான கேள்விகளுக்கு பதிலில்லாத நிலை இருக்கிறது. குறிப்பாக ஸஹ்ரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியை வழிநடத்தியது யார்? யாருடைய தூண்டுதலில் இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது? போன்ற அடிப்படையான கேள்விகளுக்கு இதில் பதிலில்லை. 

ஆணைக்குழு நியமிக்கப்பட்டதின் முக்கிய நோக்கமே இதுவாகும் என்றிருக்கும் போது மிக முக்கியமான இந்தக் கேள்விக்கு பதிலில்லாமை ஏமாற்றம் அளிப்பதாக இந்த செயற்குழு கருதுகின்றது.

03. குண்டுத் தாக்குதலின் முக்கிய பங்காளியாக கருதப்படும் ஸாரா என அழைக்கப்படும் புலஸ்தினி மஹேந்திரன் சாய்ந்தமருதில் இடம் பெற்ற தாக்குதலில் தப்பித்து பின்னர் இந்தியாவுக்கு தப்பிச் சென்றுள்ளதாக ஜனாதிபதி ஆணைக்குழுவில் தகவல் வெளியான போதும் அவரை இலங்கை அழைத்து வருவதற்கு இலங்கை அரசுக்கு எவ்விதமான பரிந்துரைகளையும் ஆணைக்குழு வழங்கவில்லை. என்பதுடன் புலஸ்தினி மகேந்திரனை இலங்கைக்கு தாருங்கள் என கோரிக்கை விடுக்குமாறும் எவ்வித உத்தரவுகளையும் ஆணைக்குழு பரிந்துரைக்கவில்லை என்பதும் இந்தத் தாக்குதலின் மூலத்தை கண்டறிவதில் ஆணைக்குழு தோல்வியடைந்துள்ளதை காட்டுகிறது என்பதை இச்செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.

04. இலங்கையில் செயல்படும் 43 தௌஹீத் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என ஆணைக்குழு விதந்துரை வழங்கியிருப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான, ஜனநாயகத்தை குழி தோண்டிப் புதைத்து நாட்டின் அரசியல் யாப்பை அப்பட்டமாக மீறும் செயல்பாடாகும்.

தௌஹீத் அமைப்புகள் பல பெயர்களில் செயல்பட்டாலும் ஸஹ்ரான் ஹாஷிம் என்ற பயங்கரவாதியை இங்குள்ள எந்த அமைப்பும் ஒரு போதும் ஏற்றுக் கொண்டதில்லை என்பதுடன் அவனுடைய பயங்கரவாத செயல்பாடுகளையும், முன்னெடுப்புகளையும் பற்றி அரசுக்கும், அரசுசார் பாதுகாப்பு தரப்புகளுக்கும் மிகத் துள்ளியமாக தெரியப்படுத்தியதுடன், பயங்கரவாத செயல்பாடுகளை மொத்தமாக இந்நாட்டை விட்டும் துடைத்தெரிய முழு ஒத்துழைப்பை தாமாக முன்வந்து வழங்கி இந்நாட்டுக்கு விசுவாசமாக இருந்தவர்கள் தௌஹீத்வாதிகள் என்பதை தக்க ஆதாரங்களுடன் வரிக்கு வரி முழுத் தெளிவுகளையும் சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ சார்பில் ஆணைக்குழுவுக்கு நாம் தெளிவாக வழங்கியிருந்தும் அவற்றை தூசுக்கும் கணக்கில் கொள்ளாது தான்தோன்றித் தனமாக நாட்டின் அபிவிருத்திக்கும், பாதுகாப்புக்கும் முழு ஒத்துழைப்பாக செயல்படும் தௌஹீத் அமைப்புகளை தடை செய்ய வேண்டும் என பரிந்துரைத்திருப்பதை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

05. தௌஹீத் எனும் ஏகத்துவக் கொள்கையை தடை செய்ய வேண்டும் என்று ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளமையை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது. 

தௌஹீத் என்பது இஸ்லாத்தின் அடிப்படை கொள்கையாகும். முஸ்லிம்களின் உயிர்நாடிக் கொள்கையே தௌஹீத் தான். அல்லாஹ்வை மட்டுமே வணங்க வேண்டும் அவனல்லாத எவரையும், எதனையும், எச்சந்தர்ப்பத்திலும் வணங்கக் கூடாது என்பதே இஸ்லாத்தின் தௌஹீத் – ஏகத்துவ அடிப்படைக் கொள்கையாகும். தௌஹீதை தடை செய்வது என்பது இஸ்லாத்தையே தடை செய்வதற்கு நிகரானதாகும்.

குண்டு வெடிப்பை மேற்கொண்ட ஸஹ்ரான் ஹாஷிம் என்பவன் தௌஹீத் பெயர் தாங்கி செயல்பட்டான் என்பதற்காக தௌஹீத் கொள்கையை கொண்டவர்கள் அனைவரும் தீவிரவாதிகள் அல்லது அடிப்படைவாதிகள் என சித்தரிப்பது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடாகும். 

நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த வேண்டும் என்பதில் எமக்கு எவ்வித மாற்றுக் கருத்தும் இல்லை. நாம் அதற்கு முழு ஒத்துழைப்பையும் தொடர்ந்து வழங்கிக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் பாதுகாப்பின் பெயரால் இலங்கை முஸ்லிம்களை பழிவாங்க நினைப்பதை ஜனநாயகத்தை ஆதரிக்கும் எவறும் ஒப்புக் கொள்ளமாட்டார்கள் எனவே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையான தௌஹீத் கொள்கையை தடை விதிக்க பரிந்துரைத்திருக்கும் ஆணைக்குழுவின் அறிக்கையை இச்செயற்குழு வன்மையாக கண்டிப்பதுடன், இவ்வறிக்கையை முழுவதுமான நாம் மறுதளிக்கிறோம்.

06. கிதாபுத் தௌஹீத் என்ற நூல் எவ்விதத்திலும் ஒரு போதும் பயங்கரவாதத்தையோ, தீவிரவாதத்தையோ தூண்டியதில்லை. அதற்குறிய எந்த முகாந்திரமும் குறித்த நூலில் கிடையாது என்பதை அதனை படிக்கும் எவறும் புரிந்து கொள்ள முடியும். 

கிதாபுத் தௌஹீத் என்ற நூலின் சிங்கள மொழி பிரதியை நாம் ஆணைக்குழுவுக்கு வழங்கியதுடன், குறித்த நூல் பற்றிய முழு விபரங்களையும் மிகத் துள்ளியமாக எடுத்துரைத்திருந்தோம்.

கிதாபுத் தௌஹீத் என்பது  இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கைகளை தெளிவூட்டும் ஏகத்துவத்தை குர்ஆனின் வழிகாட்டலில் தெளிவூட்டும் ஒரு நூலாகும். இஸ்லாத்தின் அடிப்படை சிந்தாந்தம் பற்றிய தெளிவூட்டல் வழங்கும் ஒரு நூலைப் பற்றிய எவ்வித அடிப்படை ஆராய்தலும் இல்லாமல் தடை செய்ய முனைவது ஜனநாயகத்திற்கு விரோதமான செயல்பாடு மாத்திரமன்றி மத உரிமையை பரித்து, பேச்சு சுதந்திரத்தை முடக்கும் செயல்பாடாகும். 

மத சுதந்திரத்தை பரிக்கும், பேச்சு சுதந்திரத்தை முடக்க நினைக்கும் இந்த பரிந்துரைகளை இச்செயற்குழு வன்மையாக கண்டிக்கிறது.

07. இப்னு தைமிய்யா (ரஹ்) மற்றும் முஹம்மத் பின் அப்துல் வஹ்பாப் ஆகிய அறிஞரின் புத்தகங்களையும் தடை செய்ய வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை முன்வைத்துள்ளது. 

இப்னு தைமிய்யா (ரஹ்) மற்றும் முஹம்மத் பின் அப்துல் வஹ்ஹாப் (ரஹ்) ஆகிய அறிஞர்கள் எச்சந்தர்பத்திலும், எவ்விதத்திலும் பயங்கரவாதத்தை ஆதரித்து பிரச்சாரம் செய்தவர்கள் அல்ல. என்பதுடன் அவர்களுடைய எழுத்துக்களிலும் பயங்கரவாதத்தை தூண்டும் எவ்விதமான செயல்பாடுகளும் கிடையாது. இவற்றையெல்லாம் முழுமையாக ஆராயாமல் நுணிப்புல் மேய்ந்து இம்மாபெரும் அறிஞர்களின் நூல்களுக்கு தடை விதிக்குமாறு ஆணைக்குழு தீர்மானம் அறிவித்திருப்பதை இச்செயல்குழு வன்மையாக கண்டிக்கிறது.

08. சிலோன் தவ்ஹீத் ஜமாஅத்தின் பொதுச் செயலாளர் சகோ. அப்துர் ராசிக் அவர்கள் மீது பொது பல சேனா அமைப்பினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பில் சட்டமா அதிபர் அவசரமாக தனது ஆலோசனைகளை வழங்க வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது. 

சகோ. அப்துர் ராசிக் மீதான குறித்த வழக்கின் பரிந்துரைகளை விரைவு படுத்துமாறு வழக்கு தாக்கல் செய்யப்பட்ட காலம் முதல் நாமே நீதி மன்றத்தில் கோரிக்கை விடுத்துக் கொண்டுதான் இருக்கிறோம். ஆனால் ஏதோ புது விதமான நடவடிக்கை ஒன்றைப் போல் ஆணைக்குழு அறிக்கை இதனை காட்ட முயன்றிருப்பதை நாம் அவதானிக்க முடிகிறது.

இருப்பினும் அதன் ஆலோசனைகள் சட்டமா அதிபரினால் விரைவுபடுத்தப்படாமல் இதுவரை இருக்கிறது என்பதையும் இச்செயற்குழு மீள நினைவூட்ட விரும்புகிறது. 

09. மிஷ்காத் ஆய்வு நிறுவனம் என்ற அமைப்பினால் வெளியிடப்பட்ட உஸ்தாத் எம்.ஏ.எம். மன்சூர் (நளீமி) என்பவர் வெளியிட்ட “அல்குர்ஆன் வன்முறையை தூண்டுகிறதா?” என்ற நூலை மத்ரஸாக்கள் அனைத்திலும் கற்பிக்க வேண்டும் என ஆணைக்குழு பரிந்துரை செய்துள்ளது.   

இதே வேலை, அபுல் அஃலா மௌதூதி என்பவரின் நூல்களுக்கு தடை விதிக்க வேண்டும் என ஆணைக்குழு மேலும் பரிந்துரைத்துள்ளது.  

இதே வேலை  எம்.ஏ.எம். மன்சூர் (நளீமி) என்பவின் “அல்குர்ஆன் வன்முறையை தூண்டுகிறதா?” நூலை மத்ரஸாக்களில் கற்றுக் கொடுங்கள் என்று பரிந்துரைத்து விட்டு அபுல் அஃலா மௌதூதி என்ற ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் ஸ்தாபக தலைவரின் புத்தகங்களுக்க தடை விதிக்க வெண்டும் எனவும் பரிந்துரைத்துள்ள ஜனாதிபதி விசாரனை ஆணைக்குழு மன்சூர் என்பவர் 04/21 தற்கொலை தாக்குதலுக்கு முன்பதாக வெளியிட்ட “குர்ஆனிய சிந்தனை“ என்ற நூலைப் பற்றி எந்தவிதமான கருத்துக்களையும் வெளியிடவில்லை என்பது விசேடமானது.  

04/21 தாக்குதலுக்கு முன்னால் மன்சூர் நளீமி என்பவரினால் வெளியிடப்பட்ட “குர்ஆனிய சிந்தனை” என்ற நூலில் விளக்கத்தின் ஆதாரங்களாக அவர் பெரும்பாலான இடங்களில் ஜமாஅத்தே இஸ்லாமி அமைப்பின் ஸ்தாபக தலைவர் அபுல் அஃலா மௌதூதியின் புத்தகத்தையே ஆதாரம் காட்டியுள்ளார்.

அப்படியானால் அபுல் அஃலா என்பவரின் புத்தகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று பரிந்துரைத்துள்ள ஜனாதிபதி ஆணைக்குழு அபுல் அஃலா மௌதூதி என்பவரின் புத்தகங்களை அடிப்படை ஆதாரமாக கொண்டு மன்சூர் நளீமி என்பவரினால் 04/21 தாக்குதலுக்கு முன்பாக வெளியிடப்பட்ட “குர்ஆனிய சிந்தனை” என்ற நூலைப் பற்றியும், மன்சூர் நளீமி என்பவர் பற்றியும் என்ன முடிவெடுக்கும்? என இச்செயற்குழு கேள்வியெழுப்ப விரும்புகிறது.  

அத்துடன், உஸ்தாத் மன்சூர் நளீமி என்பவரின் நூலை மத்ரஸாக்களில் கற்பித்துக் கொடுக்க வேண்டும் என பரிந்துரைத்திருப்பதின் உள்நோக்கத்தை தெளிவுபடுத்துமாறும் இச்செயற்குழு வேண்டிக் கொள்கிறது.

10. இலங்கை என்பது ஜனநாயகத்தின் பாதங்கள் ஆளப்பதியப்பட்ட, ஜனநாயகத்தை நேசிக்கும் மக்களை கொண்ட, ஜனநாயக விழுமியங்களை நடைமுறையில் கொண்ட அரசியல் யாப்பை கொண்ட நாடாகும். 

இந்நாட்டில் ஜனநாயக ரீதியாக செயல்படும் அமைப்புகளை தடை செய்து, பேச்சுரிமை, அரசியல் யாப்பு தந்த மத, மனித உரிமைகளை முடக்கும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள இப்பரிந்துரைகளை நாம் மறுதளிப்பதுடன், பாதுகாப்பு துறை மேற்கொள்ளும் அனைத்து விசாரனைகளுக்கும் இதுவரை வழங்கி வரும் ஒத்துழைப்பைப் போல் பல மடங்கு ஒத்துழைப்புடன் நாட்டையும், நாட்டின் இறையான்மையையும் பாதுகாக்க தௌஹீத்வாதிகளாகவும், இலங்கை முஸ்லிம்களாகவும், இலங்கை நாட்டின் மைந்தர்களாகவும் நாம் எப்போதும் முன்நிற்போம் என்பதையும் மிகத் தெளிவாக இச்செயற்குழு தெரிவித்துக் கொள்கிறது.

R. அப்துர் ராசிக் B.COM,

பொதுச் செயலாளர்,

சிலோன் தவ்ஹீத் ஜமாஅத் - CTJ

4 comments:

  1. றாசிக் அவர்களே!
    உங்கள் பக்க நியாயங்களை தாராளமாக எழுதுங்கள். ஆனால் காட்டிக்கொடுக்கும் கூட்டிக் கொடுக்கும் வேலையில் இறங்காதீர்கள்.
    உங்களது இயக்க வெறிதான் இஸ்லாத்தையே கொச்சைப்படுத்தியுள்ளது என்ற உண்மையையும் இங்கு உரத்துக் கூறுகிறேன்.

    ReplyDelete
  2. The woodcutter's axe begged for its handle from the tree.
    The tree gave it.
    (Stray Birds-Rabindranath Tagore)

    ReplyDelete
  3. உண்மையான தீவிரவாதிகளும் அடிப்படைவாதிகளும் இந்த வழிகேட்ட ctj கூட்டம் தான்

    ReplyDelete

Powered by Blogger.