Header Ads



முஸ்லிம்களுக்கு நீதி கிடைத்துள்ளது, ஆரம்பத்திலேயே அடக்கம் செய்யலாமென குறிப்பிட்டேன் - சிலர் அரசியல் செய்தனர்


- இராஜதுரை ஹஷான்,
 நன்றி வீரகேசரி -

கொவிட் - 19 வைரஸ் தாக்கத்தினால் உயிரிழப்பவர்களின் உடலை அடக்கம் செய்ய அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளமை வரவேற்கத்தக்கது.

அனைத்து காரணிகளையும் அரசியல் கோணத்தில் நோக்கினால் முரண்பாடுகள் மாத்திரமே தோன்றும். இனங்களுக்கிடையில்  தேசிய நல்லிணக்கத்தை உறுதிப்படுத்த புதிய அரசியலமைப்பில்  சிறந்த பொறிமுறை அறிமுக்கப்படுத்த வேண்டும் என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் திஸ்ஸ விதாரன தெரிவித்தார்.

நிகழ்கால அரசியல் நிலவரம் குறித்து வினவிய போது அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.அவர் மேலும் குறிப்பிடுகையில்,

கொவிட் - 19 வைரஸ் தொற்றினால் உயிரிழப்பவர்களின் சடலங்களை சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளுக்கு அமைய அடக்கம் செய்ய முடியும் என்பதை ஆரம்பத்திலேயே குறிப்பிட்டேன். 

சடலத்தை அடக்கம் செய்வதற்கு எதிராக ஒரு தரப்பினர் தவறான நிலைப்பாட்டை சமூகத்தின் மத்தியில் தோற்றுவித்து அதனூடாக அரசியல் செய்தனர்.

கொவிட் - 19 வைரஸ் தொற்றினால்  உயிரிழப்பவர்களின் உடல்கள் தகனம் செய்வதற்கு முஸ்லிம் சமூகத்தினர் கடுமையான எதிர்ப்பை ஆரம்பத்திலிருந்து வெளிப்படுத்தினார்கள்.

அவர்களின் மத உரிமைகளுக்கு மதிப்பளிக்க வேண்டியது கட்டாயமாகும். பல்வேறு போராட்டங்களின் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு நீதி கிடைத்துள்ளது.தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய காலம் கடந்தாவது அனுமதி வழங்கியுள்ளமை வரவேற்றகத்தக்கது. 

அனைத்து காரணிகளையும் அரசியல் கோணத்தில் பார்த்து ஒருபோதும் தீர்வை பெற முடியாது. ஒரு தரப்பினரது தவறான அபிப்ராயங்கள் அனைத்து பிரச்சினைக்கும் மூல காரணியாக காணப்பட்டது.பல்லின சமூகம் வாழும் நாட்டில் அனைத்து இன மக்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டும். 

தேசிய நல்லிணக்கம் கட்டியெழுப்பப்பட்டால் மாத்திரமே நாடு அனைத்து துறைகளிலும் முன்னேற்றமடையும். அரசியல் காரணிகளினால் முரண்பாட்டுக்குட்பட்டுள்ள தேசிய நல்லிணக்கத்தை கட்டியெழுப்ப அரசாங்கம் உரிய நடவடிக்கைகளை புதிய அரசியலமைப்பின் ஊடாக முன்னெடுக்க வேண்டும் என்று ஆலோசனை வழங்கியுள்ளேன் என்றார்.

No comments

Powered by Blogger.